‘V3’ விமர்சனம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் குற்றங்களுக்குத் தரப்படும் தண்டனை அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது. குற்றங்களுக்கான பின்னணிகளை ஆராய்ந்து தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிற படம் தான் ‘V3’.இப்படத்தை அமுதவாணன் இயக்கி உள்ளார்.

ஆடுகளம் நரேனுக்கு இரண்டு மகள்கள்.ஒருநாள் மூத்தமகள் பாவனா ஒரு கூட்டத்திடம் சிக்கி பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாகத் தகவல். மூத்த மகளைத் தன் இளைய மகளோடு சேர்ந்து கொண்டு தேடுகிறார் தந்தை.

காவல்துறை எரிந்து போன உடலைக் கண்டுபிடிக்கிறது. மீடியாவில் இந்த விஷயம் பெரிதாகிறது.பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படுகிறது எனவே ஒரு என்கவுண்டர் செய்கிறது காவல்துறை.
கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தாரிடம் அவர்கள் உடலை ஒப்படைக்க மறுக்கிறது காவல்துறை.

ஆனால் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று அவர்களது பெற்றோர்கள் போராடுகிறார்கள். மனித உரிமை ஆணையம் அதில் தலையிடுகிறது .செய்யப்பட்டது போலிஎன்கவுண்டர் என்று தெரியவருகிறது.முடிவு வேறு மாதிரியாக மாறுகிறது . விந்தியாவுக்கு நேர்ந்தது என்ன? அந்தக் கொடுமைக்காரர்கள் யார்? என்பதே V3 படத்தின் மீதி கதை.

இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற பாசமுள்ள பெண்களின் அப்பாவாக வருகிறார் ஆடுகளம் நரேன்.
ஓர் அதிகாரிக்குரிய மிடுக்குடன் வருகிறார் வரலட்சுமி.அமைதியாகவே இருந்து அதிரடி காட்டுகிறார். அவருடைய தோற்றமும் நடிப்பும் படத்துக்குப் பலம்.

பாதிக்கப்பட்ட பெண் விந்தியாவாக நடித்திருக்கும் பாவனாவின் நடிப்பும் சபாஷ். அவரது பாத்திரப்படைப்பு மனதை உலுக்குகிறது.
கொல்லப்பட்ட இளைஞர்கள் குடும்பத்துக்காகப் போராடும் லோகுவாக வரும் எழுத்தாளர் சந்திரகுமார்,
ஆடுகளம் நரேனின் இரண்டாவது மகளாக நடித்திருக்கும் எஸ்தர் அனில், காவல்துறை அதிகாரியாக வரும் பொன்முடி என அனைவருமே பாத்திரத்திற்குப் பொருந்தி இருக்கிறார்கள்.

சிவாபிரபுவின் ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகள் எதார்த்த பதிவு.ஒளியையும் நிழலையும் அழகாகக் கையாண்டுள்ளார்.

ஆலன் செபாஸ்டியன் இசையில் பாடல் வரிகள் கதையோடு பயணிக்கின்றன. பின்னணி இசையிலும் குறைவில்லை.

பாலியல் குற்றங்களைத் தடுக்க பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை இறுதியில் முன் வைக்கிறார் இயக்குநர்.இது மிகவும் தவறான பார்வை. பாலியல் தொழில் அங்கீகரிக்கபட்ட வட இந்திய மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் நடைபெறவில்லையா? இதை ஏன் இயக்குநர் சிந்திக்கவில்லை?
நிர்பயாவின் கதை நமக்குத் தெரியும் தானே?

பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குநர் அமுதவாணன். போலி என்கவுண்டர்கள், அரசியல்வாதிகளின் இன்னொரு முகம், பாதிக்கப்படும் பெண்களுக்கான நீதி எனப் பல சிக்கல்களைப் பேசியிருக்கிறார். பாலியல் குற்றங்கள் நடந்த பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வலியுறுத்தி போராடும் பொதுமக்கள், குற்றங்கள் நடக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? தீர்வை நோக்கிச் சிந்திக்க வேண்டும் என்கிறார்.முடிவில் இயக்குநர் அவரது கருத்தை சொல்லி இருக்கிறார் ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? V 3 எதையோ சொல்ல வந்து எதையோ சொன்ன கதை என்று கூறலாம்.