‘ஃபைட் கிளப் ‘விமர்சனம்

விஜய்குமார் ,மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கரதாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் ஜெயராஜ், வடசென்னை அன்பு  ஆகியோர் நடித்துள்ளனர்.
அப்பாஸ் அ.ரஹ்மத் இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு லியோன் பிரிட்டோ,இசை கோவிந்த் வசந்தா.லோகேஷ் கனகராஜின்
ஜி ஸ்குவாட் வழங்கும் ரீல் குட் பிலிம்ஸ் தயாரிப்பான இப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது .தயாரிப்பாளர் ஆதித்யா.

வடசென்னை மக்கள், அவர்களது வாழ்க்கை, அங்குள்ளவர்களின் விளையாட்டு ஆர்வம்,அதற்கு வரும் தடைகள், இடையூறுகள், போராட்டங்கள், அரசியல், மோதல், வஞ்சகம் துரோகம், அடிதடி , ரத்தம் சதை என அனைத்தையும் கலந்து  இந்த’ ஃபைட் கிளப்’ படம் உருவாகி உள்ளது.

குத்துச்சண்டையில் தனி ஆர்வத்துடன் ஈடுபாட்டுடன் வாழ்ந்து வருகிறார் பெஞ்சமின். அத்துறையில் உச்சம் தர வேண்டும் என்பது அவரது கனவு .ஆனால் வடசென்னைக்காரன் என்கிற முத்திரை அதற்குத் தடையாகவும் இடையூறாகவும் இருக்கிறது.அதனால் அவரது திறமைக்கு ஏற்ற உயரம் கிடைக்காமல் போகிறது.இதனால் விரக்தி அடைந்தவர், தனக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறார்.திறமை உள்ளவர்களை உயர்த்திப் பிடிக்க  ஊருக்காக உழைக்கிறார். அந்தப் பகுதியின் பெரும் புள்ளியாக இருக்கிறார்.கால்பந்தாட்ட வீரர் கனவுடன் இருக்கும் செல்வா அவர் மூலம் பெரிய விளையாட்டு வீரராக வேண்டும் என்று நினைக்கிறான்.
ஆனால் பெஞ்சமின் தம்பி ஜோசப்போ அவருக்கு எதிர்ப்பாதையில் பயணிக்கிறான்.கஞ்சா விற்கும் கிருபாவுடன் சேர்ந்து கொண்டு ஊருக்குள் கஞ்சா விற்று வருகிறான். சகோதரர்களிடையே எழும் புகைச்சல் பகையாக மாறுகிறது.மோதலும் ஏற்படுகிறது. விளைவு? தன் அண்ணனை கிருபாவுடன் சேர்ந்து தீர்த்து கட்டுகிறான் தம்பி ஜோசப். இருவர் சேர்ந்து கொலை செய்தாலும் ஜோசப்பை சிறைக்குச் செல்லச் செல்கிறான் கிருபா.ஒரு வாரத்தில் வெளியே எடுத்து விடுவதாக நம்பிக்கை கொடுக்கிறான். ஆனால் வாக்கு தவறி ,கைவிட்டு விடுகிறான். இதனையடுத்து வெளியே வரும் ஜோசப் செய்தது என்ன, இதில் செல்வா எப்படி சம்பந்தப் படுகிறான் என்பதுதான் மீதிக் கதை.வெறும் அடிதடி ரத்தம் வெட்டு குத்து மட்டும்தான் படத்தில் உள்ளதா என்றால் இதில் ஒரு காதல் கதையும் உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் பெரிதாகக் கதை இருக்காது என்று சொல்லப்படுவதுண்டு .ஆனால் அவர் வெற்றிகரமான இயக்குநர் இல்லையா? காட்சிகளின் வழியே கதை சொல்லி நம்மை ஒரு வினாடி கூட அசரவிடாமல் படத்தை முடித்து விடுவார்.அவர் இயக்கத்தில் உள்ளது போலவே அவர் தன் நிறுவனத்தின் மூலம் வழங்கியுள்ள இந்த ஃபைட் கிளப் படமும் அதே பரபரப்பு பாணியில் உருவாகியுள்ளது.

படம் ஆரம்பித்ததுமே காட்சிகள் பற்றிக் கொள்ளும் பரபரப்புடன் வேகமாக செல்கின்றன.சண்டைக் காட்சிகள் உருவாக்கபட்ட விதமும் வித்தியாசமாக இருக்கிறது.

உறியடி படத்தின் மூலம் தனக்கு ஒரு அடையாளத்தை பெற்றிருக்கும் விஜய்குமார், இதில் நடித்துள்ள செல்வா பாத்திரத்தில் ஒரு நடிகராக தன் இடத்தைத் தக்க வைத்துள்ளார் .   துடிப்பான துடுக்கான தோற்றத்தில் அவரது பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.பல் வேறுபட்ட வயது தோற்றங்களிலும் பொருந்துகிறார்.தனக்கான நடிப்புத் தருணங்களை அவர் வீணடிக்காமல் பயன்படுத்தியுள்ளார்.

படத்தில் நடிப்பில் அட்டகாசமாக நடித்து அசத்தியிருப்பது ஜோசப்பாக நடித்திருக்கும் அவினாஷ் ரகுதேவன்தான்.பகை உணர்ச்சி உச்சத்தில் கொப்பளிக்கும் எதிர்மறைப் பாத்திரத்தில் வரும் அவினாஷ்.மெலிந்த தேகம் ,மிரட்டும் கண்கள் எனஅதகளம் செய்துள்ளார்.

முதல் பாதியில் மட்டும் வரும் நடிகை மோனிஷா மோகன் தோன்றும் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.பகைமை கொண்ட பாத்திரங்கள் செய்யும் ரணகளத்தின் இடையே கதாநாயகிக்கு ஆழமான நடிப்பு வாய்ப்பு இல்லை.

பெஞ்சமினாக கார்த்திகேயன் சந்தானம், கிருபாவாக சங்கரதாஸ், கார்த்தியாக சரவணவேல், அந்தோணியாக ஜெயராஜ் என நடித்துள்ள முக்கிய  நடிப்புக் கலைஞர்களும் தங்கள் பங்கைச் சிறப்பாக ஆற்றி உரிய நடிப்பை வழங்கி உள்ளனர்.சின்ன சின்ன பாத்திரங்களில் மண்ணில் மைந்தர்களாக வருபவர்களும் அசல் நடிப்புக் கலைஞர்கள் போல் வருகிறார்கள். 

லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது .ஒளி அமைப்பும் காட்சிக் கோணங்களும் கதையின் பரபரப்பைத் தக்க வைக்கின்றன.சினிமாத்தனமில்லாத சண்டைக் காட்சிகள் படத்தின் உருவாக்கத்திற்குப் பலம் சேர்க்கின்றன.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா காட்சிகளை முடிந்த அளவு நம் மனதில் ஒட்ட வைக்க உழைத்திருக்கிறார்.சென்னையின் முகவரியாக இருக்கும் கானா பாடல்கள் படத்தில் ஆங்காங்கே ஒலிக்கின்றன.அவை தாளம் போட வைக்கும் ரகம். விறுவிறுப்பு குறையாமல் படத்தைப் படத் தொகுப்பு செய்த கிருபாகரனின் துறு துறு கை வண்ணம் காட்சிகளில் தெரிகிறது.

அகன்ற திரையில் உரிய ஒலியமைப்போடுதிரையரங்குகளில் மட்டும் பார்த்து அந்தத் திரை அனுபவத்தை ரசிக்கும் உணரும் வகையில் இந்தப் படம் உருவாகி உள்ளது.இயக்குநர் அப்பாஸ் தான் சொல்ல வந்த கதையை மேக்கிங்கில் சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்தது பாராட்டுக்கு உரியது.ஏராளமான கதாபாத்திரங்களை வைத்து மேய்த்து இருக்கிறார்.அவர்களைக் கையாண்ட விதமும் குறையில்லை.பாத்திரச் சித்தரிப்புகளும் இயல்புக்கு அருகில் உள்ளன.இளைஞர்கள் வாழ்வில் போதைப் பொருள் பிரயோகமும் அரசியலும் கலந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை இப்படத்தில் காட்டியுள்ளார்.

படத்தின் முதல் பாதி கட்டுக்குலையாத விறுவிறுப்புடன் செல்கிறது. வடசென்னைப் பின்னணியும் மோதல்களும் பார்த்த படங்களை நினைவூட்டினாலும் சினிமா என்பதே சொல்ல வந்த முறையில் கவர்வது தான் என்பதைப் புரிந்து கொண்டு மேக்கிங்கில் அசத்தியுள்ளார் இயக்குநர்.

காட்சிகளில் கவனம் செலுத்திய அளவிற்கு கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் இந்தப் படத்தின் உயரம் மேலே சென்றிருக்கும்.எல்லாவற்றையும் தாண்டி உருவாக்கத்தில் அழுத்தமாகப் பதிகிறது இந்தப் படம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அவர் தயாரிப்பின் மூலம் பரிந்துரைத்துள்ள இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.