‘அகத்தியா ‘திரைப்பட விமர்சனம்

ஜீவா.அர்ஜுன் , ராக்ஷி கண்ணா , ஷாரா, இந்துஜா,ராதாரவி,நிழல்கள் ரவி ,எட்வர்ட், மெட்டல்டா, ரெடின் கிங்ஸ்லி,, கின்னஸ் பக்ரு, அபிராமி,சார்லி, ரோகினி ,யோகி பாபு, செந்தில்,பூர்ணிமா பாக்யராஜ்,விடிவி கணேஷ் நடித்து உள்ளனர்.
பா.விஜய் இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

பொதுவாகப் படங்களில் இயக்குநர் ஆக வேண்டும் என்று தான் கதாநாயகனைக் காட்டுவார்கள். இதில் கதாநாயகன் அகத்தியன் என்ற பெயர் கொண்ட ஜீவாவுக்கு கலை இயக்குநராக வேண்டும் என்று கனவு.திரைப்படத்தில் அவரது முதல் முயற்சி தோல்வி அடைந்து விட்டதால் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.ஜீவா தனது நண்பர்கள் ரக்ஷி கண்ணா, ஷாரா, இந்துஜாவுடன் சேர்ந்து கொண்டு பாண்டிச்சேரிக்குச் செல்கிறார்கள். அங்குள்ள ஒரு பழைய அரண்மனையை வாடகைக்கு எடுத்து ஸ்கேரி ஹவுஸ் என்ற பெயரில் பயமுறுத்தும் பேய் வீடு ஒன்றை வடிவமைத்து உருவாக்குகிறார்கள்.இவர்கள் பயமுறுத்த அனைத்து உருவாக்கும் அந்த வீட்டில் வேறு விதமான அமானுஷ்யங்கள் இருக்கின்றன.அவற்றுக்கும் ஜீவாக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.

வீட்டின் பின்னே ஒரு ஆதி காலத்து பியானோவை எடுத்து வைக்கின்றனர்.ஒருநாள் பியானாவை ராக்ஷி கண்ணா வாசிக்கிறார் அப்போது அதிலிருந்து மர்ம அறை திறக்கிறது. அப்போது ஜீவாவுக்கு ஒரு அமானுஷ்ய உணர்வு ஏற்படுகிறது .சில காட்சிகள் மனதில் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் அதில் கிடைத்த பிலிம் ரோலை ஓடவிட்டுப் பார்த்தபோது 1940-ல் உள்ள சம்பவங்கள் காட்சிகளாக வருகின்றன. அதன்படி பாண்டிச்சேரி மெட்டல்டாவுக்கு ஏற்பட்ட மோசமான அரியவகை நோயை சித்தமருத்துவர் அர்ஜுன் குணப்படுத்துகிறார். இதனால் மெட்டல்டா அர்ஜுனை நேசிக்கத் தொடங்குகிறார். இந்த நிலையில் எலும்பு புற்று நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருப்பதாகத் தெரிந்து அதற்கான ஆய்வில் அர்ஜுன் ஈடுபடுகிறார். அந்த மருந்தை தன் வசப்படுத்த நினைக்கிறார் கவர்னர் எட்வர்ட் .அதன் பிறகு நடந்தது என்ன ? ஜீவாவுக்கு ஏன் அந்த உணர்வு ஏற்பட்டது?அவருக்கும் அர்ஜுனுக்கும் என்ன தொடர்பு ? என்பதை எல்லாம் படத்தின் மீதிக் கதை கூறும்.

அகத்தியா படம் மர்மங்கள் நிறைந்த திகில் படமா? அதீத கற்பனை கொண்ட படமா? வரலாற்றுக் கதை கொண்ட படமா? பாரம்பரியம் பேசுகின்ற படமா ?பாசஉணர்ச்சி உயர்த்திப் பிடிக்கும் படமா? நகைச்சுவை படமா? என்றால் இவை அனைத்தும் கலந்த கலவை என்றே கூற வேண்டும்.பா. விஜயைத் தவிர இப்படிப்பட்ட கலவையை யாரும் கொடுத்திருக்க மாட்டார்கள் .

1940 கால கட்டமும் 2024 காலகட்டத்தையும் மாற்றி மாற்றி காட்சிகளைக் காட்டி,தாவி தாவி செல்கின்றன .ஆனாலும் தொடர்பு படுத்தி இருக்கிறார்கள்.
இரண்டு கட்டங்களையும் இணைக்கும் வகையில் இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் .அதன் மூலம் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை சரியாக திரைப்படத்தில் வழியாக மக்களுக்குக் கடத்தியிருக்கிறார்.

இப்போதைய அவசரகால உலகமயமாக்கல் மூலம் பெருகிவரும் வினோதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு என்பதையும் கூறியிருக்கிறார். இந்தப் படம் அண்மைக்காலத் தொழில்நுட்பத்தை இணைத்து முற்காலத்து இடைக்கால கதையைத் தொடர்பு படுத்திக் காட்டும் விதத்தில் உருவாகியுள்ளது.

படத்தில் ஜீவாவின் நடிப்பு ரசிக்க வைக்கும் படி உள்ளது.படத்தின் இரண்டாவது நாயகன் போல் அர்ஜுன் வருகிறார். அவர் படத்தில் அழுத்தமான பாத்திரத்தை சுமந்துள்ளார். ஷாராவும் இந்துஜாவும் நண்பர்களாக வருகிறார்கள். சார்லி, ரோகினி, ராதாரவி,செந்தில் பூர்ணிமா பாக்யராஜ் சில காட்சிகள் வந்து செல்கின்றனர். யோகி பாபு, விடிவி கணேஷ் கௌரவ வேடத்தில் வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. என் இனிய பொன் நிலாவே என்ற தனது தந்தையின் இசையிலான பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார். இது நன்றாக உள்ளது .தீபக்குமார் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக உள்ளன. குறிப்பாக உச்சகட்ட காட்சி அற்புதம்.படத்தில் எட்டு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அமையும் கிரகமாலை பற்றி வருகிறது.ஜீவா ரோகிணி சம்பந்தப்பட்ட பாசக் காட்சிகள் இந்த காலத்துடன் ஒப்பிட்டால் கொஞ்சம் மிகையாக உணர வைக்கிறது.

ஒரு ஹாரர் படத்தில் செய்தியாக சொல்லாமல் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் சிறப்பை கூறியுள்ளது திரைப்பட ஊடகம் நல்ல கருத்து சொல்வதற்கான சாதனம் என்பதை பயன்படுத்தி உள்ளார் பாவிஜய். 1940 காலகட்டத்தை கண்முன் கொண்டுவரும் அளவிற்கு அந்த காலப்பொருட்கள் ரயில் பெட்டி, இன்ஜின் ,உடைகள் மற்ற பொருட்கள் அனைத்தையும் திரையில் காட்டி இருப்பது மிகச் சிறப்பாக உள்ளது. படம் முழுக்க கலை இயக்குநர் சண்முகத்தின் கைவண்ணம் கொடி கட்டி பறக்கிறது. அந்த அளவிற்கு அரங்கமைப்பு உள்ளது.

படத்தின் இறுதிக் காட்சிகளில் வரும் அனிமேஷன் காட்சிகள் அசத்தல்.இப்படி இரண்டு காலகட்டத்தை இணைக்கும் கதை உருவாக்குவது சிரமம். அதைத் தொடர்புப்படுத்துவதும் கடினம் .அதைச் சரியாகச் செய்துள்ளார் பா. விஜய் என்றே கூறலாம்