ஜெயம் ரவி ,பிரியா பவானி சங்கர் நடிப்பில் எம் .கல்யாண கிருஷ்ணன் இயக்கி உள்ள படம்.ஸ்கிரீன் சீன் மீடியோ தயாரித்துள்ளது. இசை சாம் சி எஸ்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் நல்ல கேன்வாஸ் இருந்தால் தான் அழகிய படம் வரைய முடியும். அப்படி ஒரு நல்ல கேன்வாஸில் வரையப்பட்ட ஆக்சன் சித்திரம் தான் இந்த படம்.
இதுவரை நெய்தல் நிலம் சார்ந்த ஏராளமான படங்கள் வந்துள்ளன.
ஆனால் கடற்கரையில் உள்ள துறைமுகத்தின் பின்னணியில் துறைமுகத்தில் நாமே இருப்பது போல் துறைமுகத்தின் விசாலத்தையும் விஸ்தீரணத்தையும் கண்கள் விரிய கதைக்களம் ஆக்கி நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன்.இவர் ஏற்கெனவே பூலோகம் படத்தை இயக்கியவர்.
படத்தின் கதை என்ன?
கதையாகச் சொன்னால் பழையது போல் தோன்றலாம்.
கடல் வழியாக பல்வேறு சட்ட விரோத காரியங்களை ஒரு கும்பல் செய்து வருகிறது. அதன் தொடர்புகள் சர்வதேச அளவில் உள்ளன. அந்தக் கும்பலுக்கு சென்னை துறைமுகத்தில் ஒரு ஆளாக இருந்து இந்தச் செயல்களை செய்பவர் ஹரிஷ் பெராடி. அவரிடம் அடியாளாக வேலை செய்பவர்தான் ஜெயம் ரவி. ஒரு கட்டத்தில் ஹரிஷ் பெராடியை மீறி மேலிடத்துடன் தொடர்பு கொண்டு அந்த முயற்சியில் வெற்றி பெற்று தனது தலைவனான ஹரிஷ் பெராடியின் இடத்தைக் கைப்பற்றுகிறார் அகிலனான ஜெயம் ரவி.இதனால் ஹரிஷ் பெராடியின் பகை வளர்கிறது.
சட்ட மீறல்களுடன் சட்டவிரோத செயல்களைச் செய்யும் ஜெயம் ரவி சொந்தமாக கப்பல் வாங்கும் அளவிற்கு வளர்கிறார்.ஒரு கட்டத்தில் அவருக்கு பொதுச் சேவையில் மனம் போகிறது. அதற்குப் பலரும் தடையாக இருக்கிறார்கள்.அவர் தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் மீதிக் கதை.
படத்தின் டைட்டில் ரோலான அகிலன் கதாபாத்திரத்தில்நடித்துள்ளார் ஜெயம் ரவி.’அகிலன் இந்திய பெருங்கடலின் அரசன் ‘என்கிற கம்பீரத்துடன் வருகிறார். தனது பாத்திரத்தைக் கச்சிதமாக தன் தோளில் சுமந்து ஜெயம் ரவி படத்தை தூக்கி நிறுத்துகிறார். வெறும் உடல் உழைப்பால் மட்டுமல்லாமல் சிந்தனையை வளர்த்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறுகிற இந்த ஆக்சன் பாத்திரத்தில் ஜெயம் ரவி குறையில்லாமல் பளிச்சிடுகிறார்.
அவருக்குப் போட்டியாக துறைமுகப் பாதுகாப்பு அதிகாரியாக ஜிரக்ஜானி நடித்துள்ளார்.நன்றாக நடித்திருந்தாலும்,அவர் பாத்திரத்தில் நம்பகத்தன்மை குறைந்துள்ளது .
ஜெயம் ரவியின் காதலியாக பிரியா பவானி சங்கர் வருகிறார். துறைமுக காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக இருக்கும் அவர் ரவிக்கு பல நல்ல திட்டங்களுக்கு உதவுகிறார். அப்பா ஜெயம் ரவிக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் வருகிறார்.
ஒரு ஆக்சன் படமாக இதை உருவாக்க நினைத்தது இயல்புதான் .ஆனால் பின்புலக் காட்சிகளில் கவனம் செலுத்திய அளவிற்கு நடிப்புக்கலைஞர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அழுத்தம் காட்டிடக் கவனம் செலுத்தி இருந்தால் படம் மேலும் சிறப்புடன் வந்திருக்கும்.
ஹரிஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதனன், ஹரிஷ் உத்தமன், ராஜேஷ், தமிழ், மைம் கோபி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் தங்கள் நடிப்பு மூலம் கவர்கிறார்கள்.
விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் . குறிப்பாகத் துறைமுக காட்சிகளை அந்த பிரம்மாண்டத்தை உணரும்படி ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.
சாம் சி எஸ் இன் பின்னணி இசை பல இடங்களில் கைத்தட்டல் பெற வைக்கிறது.சில இடங்களில் மிகை ஒலியால் எரிச்சல் ஊட்டுகிறது.
தனது ‘பூலோகம்’ படத்தில் விளையாட்டுத் துறையில் உள்ள அரசியலைப் பேசிய இயக்குநர் எம். கல்யாண கிருஷ்ணன் இதில் சர்வதேச அளவில் கடலில் நடக்கும் கடத்தல்களைப் பற்றிக் கூற முயன்றுள்ளார்.
ஒரு பழைய ஆக்ஷன் பார்முலாக் கதையை விஸ்தாரமான பின்னணியோடு சொல்லி அகிலனை ஒரு புதிய அனுபவமாக மாற்றி உள்ளார் கல்யாண கிருஷ்ணன்.