தேசிய அளவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் படங்களின் தயாரிப்பும், வெளியீடும் தற்போது மாறியுள்ளது. நடிகர் நாகார்ஜுனா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனது திரைப்படங்களை மற்ற மாநில மொழிகளிலும் வெளியிட்டு அதன் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர்.
2016ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தோழா’ திரைப்படத்துக்குப் பிறகு நாகார்ஜுனா மீண்டும் ’இரட்சன்’ மூலம் தமிழ் திரைக்குத் திரும்பியுள்ளார். இதில் தான் இதுவரை ஏற்று நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில நாகார்ஜுனா நடித்துள்ளார். கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்கள் அளித்துள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் படத்தின் ட்ரெய்லர் பெற்றுள்ளது.
நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக, ’டிக்டேடர்’, ’ரூலர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சோனல் சவுகான் நடிக்கிறார். குல் பனாக் மற்றும் அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முகேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் சுப்பராயன் மற்றும் கேச்சா இணைந்து சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ’ஏஜன்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா’, ’ஸாம்பி ரெட்டி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த மார்க் கே ராபின், ‘இரட்சன்’ படத்துக்கான பின்னணி இசையைக் கொடுத்துள்ளார்.
பரபரப்பான ஆக்ஷன், சென்டிமெண்ட் என அத்தனை கமர்சியல் அம்சங்களும் நிறைந்த இந்தப் படம் தஸரா வெளியீடாக, அக்டோபர் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் ’தி கோஸ்ட் – கில்லிங் மெஷீன்’ என்கிற பெயரில் அதே சமயத்தில் வெளியாகிறது. 33 வருடங்களுக்கு முன், 1989ஆம் ஆண்டு, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்த ஷிவா திரைப்படம், அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது