‘அக்யூஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

உதயா அஜ்மல்,யோகி பாபு ,ஜான்விகா, ஷான்திகா, பவன், தயா பன்னீர்செல்வம் ஸ்ரீதர், பிரபு சாலமன், பிரபு ஸ்ரீநிவாஸ், சங்கர்பாபு,ஜெயக்குமார் தீபா குமார், சுபத்ரா, டி. சிவா நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியுள்ளார் பிரபு ஸ்ரீநிவாஸ் .ஒளிப்பதிவு மருதநாயகம், இசை நரேன் பாலகுமார்,சண்டைப் பயிற்சி சில்வா, படத்தொகுப்பு கே. எல்.பிரவீன், , கலை இயக்கம் ஆனந்த் மணி.தயாரிப்பு ஏ எல் உதயா, தயா பன்னீர்செல்வம், எம். தங்கவேல்.

கணக்கு என்கிற உதயா ஒரு கைதி. அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல்துறை அழைத்துச் செல்கிறது.காவலர் வேந்தர் என்கிற  அஜ்மல் அழைத்துச் செல்கிறார் அவர் நீதிமன்றம் செல்வதற்குள் என்கவுண்டரில் போட்டுத் தள்ள மேல் இடம் ரகசிய உத்தரவு போட்டுள்ளது.
மனசாட்சி உள்ள போலீசான அஜ்மல் அதை ஏற்காமல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்.
அழைத்துச் செல்லும் போது இடையில் பல்வேறு தடைகள் வருகின்றன.அதற்குக் காரணம் யார்? அஜ்மல் வெற்றிகரமாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றாரா? முடிவு என்ன? என்பதுதான் ‘அக்யூஸ்ட்’ படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் உதயா தோற்றத்திலும் நடிப்பிலும் அந்த கணக்கு என்கிற கைதியாகவே வாழ்ந்துள்ளார் எனலாம். இடுப்பில் கைலி, கழுத்தில் கைக்குட்டை என்ற தோற்றமும் ,வாயைக்கோணலாக்கி உதட்டைச் சுழித்து சிரிக்கிற சிரிப்பும், கேலி கிண்டல் பேச்சும் என்று அவர் அச்சு அசலாக அந்தக் கணக்காகவே பொருந்துகிறார்.அது மட்டும் இல்லாமல் காதலியிடம் கொஞ்சுவது, சந்தேகம் வரும்போது சமாளிப்பது,எதிர்த்தவரிடம் ஆவேசமாக சண்டை போடுவது என்று பல்வேறு நடிப்பு வாய்ப்புகளில் ஒரு நடிகராக வெளிப்பட்டுள்ளார்.படத்தின் பெரும் பகுதி கதையை தன் தோளில் சுமந்திருக்கிறார்.உதயாவின் நீண்ட நாள் உழைப்பிற்கு இந்தப் படம் உரிய பலனாக வந்துள்ளது.

காதலியாக நடித்துள்ள ஜான்விகா தோற்றத்திலும் நடிப்பிலும் குறை ஒன்றும் வைக்கவில்லை.
படத்தில் இரண்டாவது கதாநாயகன் என்ற நிலையில் அஜ்மல் காதலியிடம் உரையாடும் போதும் ,ஒரு போலீஸ்காரராக கடமையில் கண்ணாக இருக்கும்போதும் கைதியின் உயிரைக் காப்பாற்ற போராடும் போதும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.
விடுதியின் முதலாளி ராமா நாயுடு பாத்திரத்தில் வரும் யோகி பாபு வரும் காட்சிகள் திணிப்பாக இருந்தாலும் சிரிக்க வைத்து ஆறுதல் தருகின்றன.

ஷான்திகா, பவன், தயா பன்னீர்செல்வம் ஸ்ரீதர், பிரபு சாலமன், பிரபு ஸ்ரீநிவாஸ், சங்கர்பாபு,ஜெயக்குமார் தீபா குமார், சுபத்ரா, டி. சிவா என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் குறை இல்லாத நடிப்பை வழங்கி உள்ளார்கள்.
ஒரு பயணம் போல் செல்லும் கதையில் கடைசி வரை அந்த விறுவிறுப்பைப் பராமரித்துள்ளார்கள் .இதற்கு இடையே இதன் இடையே காதல் செண்டிமெண்ட் ஆக்சன் என்று பல்வேறு உணர்ச்சிகளையும் தூவி உள்ளார் இயக்குநர்.

சலிப்பூட்டாத காட்சிகள் கொண்ட திரைக்கதை ஒரு ஆக்சன் படத்திற்குரிய அம்சங்களோடு உள்ளன.

ஒளிப்பதிவாளர் மருதநாயகமும் இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரனும் இயக்குநரோடு கைகோர்த்து பயணம் செய்துள்ளனர்.

‘அக்யூஸ்ட்’ படத்திற்கு சல்யூட் அடிக்க வேண்டியது இல்லை என்றாலும் தொய்வில்லாத திரை அனுபவத்தைத் தருகிறது.