‘அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம்

பெண் மையைப்பாத்திரத்தைக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த ‘அங்கம்மாள்’ படத்தில் டைட்டில் ரோலில் கீதா கைலாசம் அங்கம்மாளாக நடித்திருக்கிறார்.அவருடன் சரண் சக்தி, பரணி, முல்லையரசி ,தென்றல் ரகுநாதன் போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள்.

திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,
ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல்  மன்சூர்,படத்தொகுப்பு: பிரதீப் சங்கர்.

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் அங்கம்மாள் திரைப்படத்தை என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் நிறுவனங்களின் சார்பில் கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல் தயாரித்துள்ளனர்.இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்.

விடுதலை உணர்வும் பிடிவாத குணசித்திரம் கொண்டவள் அங்கம்மாள். அவளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஏழு வயது மகள் இருக்கிறாள்.மனைவி வீட்டோடு இருக்கிறாள். அந்த ஊரில் சிறிய மோட்டார் சைக்கிளில் வீடு வீடாகச் சென்று பால் வியாபாரம் செய்யும் அங்கம்மாள் இரண்டாவது மகனைச் சிரமப்பட்டு உழைத்து டாக்டர் ஆக்கி விடுகிறாள்.அவள் ஜாக்கெட் அணிவதில்லை,அப்படியே பழகிவிட்டது. இருந்தாலும் முயற்சியையும் உழைப்பையும் நம்பி இருக்கிறாள். தைரியத்தையே கேடயமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறாள். அவளுக்கு அனைவரும் பயப்படுவார்கள். ஏனென்றால் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாத குணம் கொண்டவள். எதையும் முகத்துக்கு நேரேயே கேட்டு விடுவதால் அவளைக் கண்டால் அனைவருக்கும் பயம் .நகரத்தில் வேலை பார்த்து வரும் இளைய மகன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான்,பெண் வீட்டார் சம்மதிக்கிறார்கள். திருமணமும் கை கூடி வருகிறது.
தன் அம்மா இப்படி ஜாக்கெட் அணியாமல் இருப்பது,புதிதாக வருபவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று அசௌரியமாக உணருகிறான். ஆனால் எவ்வளவோ பேர் எடுத்துக் கூறியும் அவள் அணிய மறுக்கிறாள். அது, செளகரியமாக இருப்பதால் மறுத்து வருகிறாள். இறுதியில் தனது மகனுக்காக அணியச் சம்மதிக்கிறாள் ஆனாலும் அதை ஊர் வேறு விதமாகப் பார்க்க,அவள் கேலியாக உணர்ந்து மனம் மாறுகிறாள்.முடிவு என்ன என்பதுதான் அங்கம்மாள் திரைப்படத்தின் மீதிக் கதை .

‘உச்சிமலை காத்து உச்சாணிப்பூ ‘கதையை அங்கம்மாள் தனது பேத்தியிடம் கூறுவது போலத்தான் படமே தொடங்குகிறது.அங்கம்மாள் பாத்திரத்திற்கு கீதா கைலாசம் அச்சுஅசலாகப் பொருந்தி இருக்கிறார்.மூக்கின் இரண்டு பக்கமும் பெரிய மூக்குத்தி போட்டுக்கொண்டு டிவிஎஸ் சேம்ப் பைக்கில் பால்கேனுடன் அவர் கம்பீரமாக ஊரை வலம் வருவது அந்தப் பாத்திரத்தைத் தூக்கி நிறுத்துகிறது. எப்போதும் வாயில் சுருட்டுடன் புகைபிடித்தபடி இருக்கிறார்.மகன்கள் மருமகளிடம் சிடுசிடுத்தாலும் பேத்தியிடம் பாசத்தைப் பொழிகிறார்.
யார் எது கேட்டாலும் முகத்துக்கு நேராகப் பதில் சொல்லும் போது ,ஆஃப் த ரெக்கார்டு வார்த்தைகளை அள்ளி வீசும் போதும் அந்தப் பாத்திரத்திற்கு அடர்த்தி கூடி விடுகிறது.அதில் ஒரு நடிகை நடித்தது போலவே தெரியாமல் அந்தப் பாத்திரமாகவே உணர வைக்கிறார் கீதா கைலாசம்.

வீட்டில்  சச்சரவுகளைக் கண்டு கொள்ளாமல் மனதில் எதையும் வாங்கிக் கொள்ளாமல் மூத்த மகனாக வரும் பரணி நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்கிறார். அவர் பிரச்சினைகளில் இருந்து தனக்கு விடுதலை அளிப்பது கலைதான் என்பதை உணர்த்துகிறார்.

குடும்பத்துக்குள் பூசல்களில் சிக்கிக்கொண்ட மருமகளாக தென்றல் தான் நடித்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். நந்திதா தாஸ் போல தோற்றத்தில் வந்து முல்லை அரசி கவர்கிறார்.

படித்து டாக்டர் ஆக இருந்தாலும் அம்மாவிடம் நேரடியாக வாதாடத் தயங்கும் அந்த பாத்திரத்தில் கார்த்திக் சரண் சரண் நன்றாக நடித்துள்ளார்.

அங்கம்மாள் தனது மகன்கள் மருமகள் இடையே வீட்டுக்குள் நிகழ்த்தும் சச்சரவு எதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே சின்ன சின்ன சிரிப்புகள் தூவி அந்தக்  கிராமத்துக்குள்ளேயே நம்மை வாழ வைத்துள்ளார் இயக்குநர் .

உச்சிமலை காத்து வீச உச்சாணிப்பூ வரும் பாடல் ரசிக்க வைக்கிறது.   

ஒளிப்பதிவைப் படத்திற்கு பலம் என்று கூற வேண்டும். இயற்கை ஒளியிலேயே அனைத்துக் காட்சிகளையும் எடுத்துள்ளார்கள்.படத்தின் முக்கியமான காட்சிகளை வீட்டுக்குள்ளேயே ஒளிப்பதிவு செய்துள்ளது சிறப்பு.

முகமது மக்பூல்  மன்சூர் இசைஅமைத்துள்ள பாடல்கள் பின்னணி இசை கதையோடு பயணம் செய்துள்ள விதம் நன்று.
படத்தில் சில காட்சிகள் மெதுவாக நகர்வது போல தோன்றலாம்.அவை எதார்த்தமாக இருப்பதற்காக அப்படி உருவாக்கி இருப்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் அங்கம்மாள் எழுத்து வடிவில் ஆன ஒரு சிறுகதையின் திரை முயற்சி.இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்.