அச்சமின்றி பிக்பாக்கெட் அடிக்கும் வாலிபன் விஜய்வசந்த், அச்சமின்றி புகார் செய்ய போலீஸ் ஸ்டேஷன் போகும் சிருஷ்டி டாங்கே, அச்சமின்றி கடமையே கண்ணாக இருப்பவர் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி , அச்சமின்றி திடீர் துரோகம் செய்யும் பரத் ரெட்டி ,அச்சமின்றி அதிகாரிகளை மிரட்டும் அமைச்சர் ராதாரவி, அச்சமின்றி பள்ளியில் படிக்கும் மாணவர்களை சித்திரவதை செய்யும் கல்வி அதிபர் சரண்யா, ஊமையாக இருந்தாலும் அச்சமின்றி சாலைகளில் ஓட்டி அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் வித்யா . இப்படிப்பட்ட இவர்களுக்குள் கலந்து கட்டி பின்னப்பட்ட கதைதான் ‘அச்சமின்றி’ படம்.
பிக்பாக்கெட் காரரான விஜய் வசந்தை போலீஸ் என நினைத்துக் காதலிக்கிறார் சிருஷ்டிடாங்கே. அட ..பார்ரா என்ன ஒரு அப்பாவித்தனம்! பிரிந்து போன காதலி வித்யாவை சந்தித்துக் காதலைப் புதுப்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி. தனியார் பள்ளிக்குச் சாதகமாக இயங்கி , அரசுப்பள்ளி மாணவி மாநில முதல் மதிப்பெண் பெற விடாமல் விடைத்தாளில் கோல்மால் செய்து தடுக்கிறது ஒரு மோசடிக்கும்பல். அந்த மாணவி தற்கொலைக்கு முயல்கிறாள். இதை அம்பலப் படுத்த முயன்ற சிருஷ்டிக்கு கொலை மிரட்டல். ஊமைப்பெண் வித்யாவும் விபத்து என்ற பெயரில் கொலை செய்யப்படுகிறார்.சமுத்திரக்கனியையும் கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இப்படி எதிராளியின் களேபர சதிகள் தொடர்கின்றன . இவற்றின் பின்னணியில் இருப்பவர் யார்? அதன் காரணம் என்ன? முடிவு என்ன ? என்பதே ‘அச்சமின்றி’ க்ளைமாக்ஸ்.
ஓடும் ஒரு பஸ்ஸில் கதாநாயகன் விஜய்வசந்த், கருணாஸ் ,தேவதர்ஷினி ,சண்முக சுந்தரம் கூட்டணி சேர்ந்து சீன் போட்டு பிக்பாக்கெட் அடிப்பதில் படம் தொடங்குகிறது. போகப் போக காதல் ,கல்விக்கட்டணக் கொள்ளை,அதிக மார்க் எடுக்க தனியார் பள்ளிகள் செய்யும் அராஜகங்கள், ரவுடிகள் அரசியல்வாதிகள் தொடர்பு என தாறுமாறாக கிளைபரப்புகிற கதை திடீரென்று சமூக நோக்கில் நிறம் மாறி கருத்து சொல்லி முடிகிறது.
படத்தில் விஜய் வசந்த் துறுதுறுப்பு வாலிபர் . கலகல நடிப்பு ஓகே.
சிருஷ்டி டாங்கே மசாலா நாயகி. வித்யா ஊமைப்பெண்ணாக பதிகிறார் .வாய் பேசாமலேயே கண்களால் பேசுகிறார்.
இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி தோற்றத்தில் மிடுக்,காட்சிகளில் திடுக் .ராதாரவி அழகான வில்லன்.
பாசமுள்ள அம்மா சரண்யாவை இதில் வில்லியாக்கியுள்ளனர். நல்ல பாதைமாற்றம்தான் .இனி அழகான வில்லி தர்பார் ஆரம்பம் . விஜய் வசந்த் கெட்டிக்காரர் . தானே எல்லாக்காட்சியிலும் வரவேண்டும் எடை சுமக்க வேண்டும் என எண்ணாமல் பலரையும் ஸ்கோர் செய்ய இடம் கொடுத்துள்ளது பெருந்தன்மை.
ஒரு பிக்பாக்கெட்டான விஜய் வசந்த் க்ளைமாக்சில் போலீஸ் போல மாறி துப்பாக்கி எடுத்து எதிரிகளைச் சுடுவதெல்லாம் பெரிய காமெடி. தனியார் பள்ளியின் அதிபர் சரண்யா, வக்கீல் ரோகிணி ,ராதாரவி பங்குபெறும் நீதிமன்ற விவாதங்கள் அந்தக்கால ‘விதி’படத்தை நினைவு படுத்துகிறது.
பல காட்சிகள் சைவ அசைவ மசாலாக்ககள் ஒன்றாகக் கலந்தது போல் உள்ளன.அதனால்தான் காரம் உள்ளதுதான் என்றாலும் ருசிக்கவில்லை.சமூக நோக்குப் போர்வையில் ஒரு முழுவணிகப்படம். அதே நேரம் போரடிக்காத பொழுதுபோக்குப் படம்தான். அதில் ‘அச்சமின்றி’ சமூகக் கருத்து சொல்லியிருக்கிறார்.அதற்காக இயக்குநர் ராஜபாண்டிக்கு ஒரு சபாஷ்!