ஒரு ஜாம்பவானின் வாரிசாக இருப்பதும் அவரது பெயரைக் காப்பாற்றுவதும் எந்த ஒரு மகனுக்கும் எளிதான காரியமல்ல. தந்தையின் வழியைப் பின்தொடர்வதும் தனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பது மேலும் கடினமாகும்.
பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்துவிற்கு இதனை அழகாக செய்துவருகிறார். கவண் படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளரான இவர் ,அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
விவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், ” இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியதும் மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்றேன்.
சினிமாவின் உயிர் நாடி அதன் திரைக்கதை என்பதை நம்புபவன் நான், பாடலாசிரியராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திறம்பட நான் பணிபுரிய இயக்குநர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து வேண்டிய சுதந்திரத்தை தந்தார். அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு போகும். இப்படத்தின் மூலமாக அஜித் ஸாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தை படித்த உணர்வை தந்தது. அவரது தொலைநோக்கு பார்வை,தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டு உள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது. விவேகம் படத்தின் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது.நான் எதிர்பார்த்ததை விட காட்சி அமைப்புகள் அருமையாக அமைந்து உள்ளன. ரசிகர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி திரை அரங்குகளில் பார்க்க உற்சாகத்துடன் தயாராக உள்ளேன்” என்கிறார் கபிலன் வைரமுத்து.