‘அஞ்சாமை ‘திரைப்பட விமர்சனம்

விதார்த், வாணி போஜன், ரகுமான்,கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ்  நடித்துள்ளனர்.இப்படத்தை சுப்புராமன் இயக்கியுள்ளார்.ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமசுதர்சன் எடிட்டிங் செய்துள்ளார்.இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் – திருச்சித்திரம் தயாரித்துள்ளனர்.

சாமானிய மக்களுக்குத் தங்கள் பிள்ளைகளை மருத்துவராக்க வேண்டும் என்பது பெரிய கனவாக உள்ளது.அப்படிப்பட்ட அவர்களின் மருத்துவக் கல்விக் கனவுக்கு இடையூறாக பெரும் தடையாக இருக்கும் நுழைவுத் தேர்வின் அபாயங்களையும் விளைவுகளையும் அதற்காகப் போராடும் சாமானியர்களின் மன உணர்வுகளையும்  சொல்கிற படம் தான் அஞ்சாமை.இதில் ,இந்தப் போராட்டத்தில் பங்குபெறும் விவசாய குடும்பத்தின் பிரதிநிதியாக விதார்த் வருகிறார். அவருக்கு உதவும் நல்லெண்ண மனிதராக ரகுமான் வருகிறார்.திண்டுக்கல் பின்னணியில் நடக்கும் கதை.

இப்படம் தனக்கு முக்கியமான படம் என்று விதார்த் கூறியிருந்தார் அதன்படியே ஒரு சாதாரண கிராமத்து தந்தையாக விதார்த் வாழ்ந்து இருக்கிறார். பிள்ளைகளின் கனவைத் தன் கண்ணில் காண உழைத்து உழைத்து ஓடை தேய்கிற பாத்திரம்.இப்படிப்பட்ட போராட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு தந்தையையும் அவர் கண் முன் நிறுத்துகிறார்.
அவரது மனைவியாக வரும் வாணி போஜன்,விதார்த்தின் நடிப்புக்கு குறை இல்லாத நடிப்பைக் கொடுத்து ஈடு கொடுத்துள்ளார்.மனைவியாக, தாயாக கிராமத்துப் பெண்ணாக வாழ்ந்துள்ளார் வாணி போஜன். மகனாக வரும் கிரித்திக் மோகனின் நடிப்பும் அபாரம்.

படத்தின் முதல் பாதியில்,நம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு மூலம் பட்ட இன்னல்களையும், இந்தத் தேர்வை வைத்து கோச்சிங் சென்டர் மையங்கள் எப்படிக் கொள்ளையடித்தனர் என்பதை அப்படியே வெளிப்படையாகவும் இயல்பாகவும் தோலுரித்துக் காட்டியுள்ளார் இயக்குநர்.

படத்தின் மிகப்பெரிய பலமே முதல் பாதியில் தனது மகனுக்காக விதார்த் நீட் தேர்வு நடத்தும் அதிகாரிகளிடம் மன்றாடும் காட்சி.அங்கே இருப்பது விதார்த் அல்ல தமிழகத்தின் ஒவ்வொரு பெற்றோரும் என்று உணர வைத்துக் கலங்க வைக்கிறார்.படத்தின் இடைவேளை காட்சி எதிர்பாராதது. ஆனால், உண்மையில் நடந்த சம்பவம்.உண்மைகள் என்றும் சுடும்.

படத்தின் இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் ரகுமான் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும், இந்த மக்கள் நமது அரசாங்கத்தின் முன்வைக்கும் நியாயமானஉணர்வுகளின் பிரதிபலிப்பாக உள்ளது.அதற்கான பதில்கள் இன்னல் அனுபவித்தவர்களுக்கான வலியை உணர வைக்கும்.

முதல் பாதி மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது.ஆனால் இரண்டாம் பகுதி பெரும்பாலும் நீதிமன்ற காட்சிகளுக்குள் அடங்கிவிட்டது.இது திரைப்பட உருவாக்கத்தில் சிறு போதாமையாக உணர வைக்கிறது.
ஆனாலும், அந்த காட்சிகளில் ரகுமான் கேட்கும் கேள்விகள்,சமகால கொந்தளிப்புகளை அறிய வைக்கிறது.
காவல்துறை அதிகாரியாக இருக்கும் ரகுமான், பள்ளிச் சிறுவனுக்காக தனது வேலையை விடுவது சற்று மிகை போல் தோன்றுகிறது.

தகுதி தகுதி என்ற மாயப் போர்வைக்குள் பெரிய வணிகம் நடப்பது அறியாமல் பலரும் முட்டுக் கொடுக்கும் நீட் தேர்வு அநீதியை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறது இப்படம்.
பொழுதுபோக்கு மசாலா படங்கள் மத்தியில் இப்படிச் சமூக பிரச்சினையினை அலசி இருக்கும் இப்படம் பெரிதும் வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

கண் முன் நடந்து கொண்டிருக்கும் ஒரு சமூக அவலத்தைப் படமாக இயக்கிய இயக்குநர் சுப்புராமனை மனதாரப் பாராட்ட வேண்டும்.அதை ஒரு மருத்துவரே தயாரித்திருப்பது இரட்டைப் பாராட்டுக்குரியது.