

நடிகை யாஷிகா ஆனந்த் பேசுகையில்,‘ இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கௌதம் கார்த்திக், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய போது என்னுடைய கனவு நனவானது போல் இருந்தது. அத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சியில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவளித்தால் சினிமா அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்.’ என்றார்.
படத்தின் இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில்,‘ நான் இயக்கும் இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்?, கருத்து சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்து திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்த படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமேத் தெரியும். அப்படித்தான் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நான் பணியாற்றும் இரண்டாவது படம். இந்த படத்திற்காக நான் என்ன கதை அவரிடம் சொன்னேன் என்று எனக்கு தெரியவில்லை. அவர் என்ன கதை கேட்டார் என்று எனக்கு தெரியவில்லை. படபிடிப்பு தளத்திற்கு சென்று தான் கதையை விவாதித்து காட்சிகளையும், வசனங்களையும் எழுதினோம். இந்த படத்தில் வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். இதில் நடிகை சந்திரிகா ரவி பேயாக நடித்திருக்கிறார். அவர் படபிடிப்பின் போது இருபதடி உயரத்தில் கயிறு கட்டி தொங்கியப்படி நடித்துக் கொடுத்தார். அவருக்கு மேக்கப் போட ஒன்றரை மணி நேரம் ஆகும். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். தயாரிப்பாளர் என்னிடம் கதை கேட்கவில்லை. நான் சொன்ன பட்ஜெட்டிற்கு ஒப்புக்கொண்டு, எந்த வித தலையீடும் இல்லாமல், முழு சுதந்திரம் கொடுத்தார். அதனால் தான் இருபத்தி மூன்று நாட்களுள் படபிடிப்பை நடத்தி முடித்தோம்.’ என்றார்.

நடிகர் சாரா பேசுகையில்,‘இயக்குநர் என்னை போனில் தொடர்பு கொண்டு கௌதம் கார்த்திக்கிற்கு நீதான் நண்பனாக நடிக்கிறாய். உடனே புறப்பட்டு வா என்றார். படபிடிப்பில் நான் ஏராளமாக சொதப்பினேன். இருந்தாலும் என்னை பொறுத்துக் கொண்டு நடிக்க வைத்தார். இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது. நானே இந்த படத்தை தனியாக பார்ப்பேன். என் மனைவி தனியாக பார்ப்பார். இயக்குநரிடம் ஹீரோவிற்கு கிளாமரான சீன்கள் வைக்கிறீர்கள் பரவாயில்லை. எனக்கு ஏன் கிளாமரான காட்சிகள் வைக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு இது வரை பதிலில்லை. ஆனால் இந்த படத்தைக் காண தியேட்டருக்குள் வந்துவிட்டால் ஜாலியாக இரண்டு மணி நேரம் பொழுது போகும்.’ என்றார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து மே 4 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.