‘அதர்ஸ்’ திரைப்பட விமர்சனம்

ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், நண்டு ஜெகன், முண்டாசுப்பட்டி ராமதாஸ், ஆர். சுந்தர்ராஜன்,ஹரிஷ் பெராடி, மாலா பார்வதி நடித்துள்ளனர் .அபின் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமர் படத்தொகுப்பு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிராண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

திட்டமிடப்பட்டு சாலையில் தடை ஏற்படுத்தி ஒரு சாலை விபத்து நடக்கிறது வாகனத்தில் வந்த நால்வரும் இறந்து போகிறார்கள்.மூன்று பெண்கள் ஒரு ஆண் .காவல்துறை விசாரணையில் இறங்கித் துப்பறிய ஆரம்பித்தபோது அந்த மூன்று பெண்களும் பார்வையற்றவர்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் என்று சந்தேகம் வருகிறது.மேலும் மோப்பம் பிடித்து விசாரிக்கும் போது,பல்வேறு மர்மங்கள் முடிச்சாக வருகின்றன.
இந்த விசாரணை கருத்தரிப்பு மையமாகச் செயல்படும் ஒரு மருத்துவமனை வரை செல்கிறது.அங்கே ஐ வி எஃப் எனப்படும் In Vitro Fertilization முறையில் கருத்தரிப்பு செய்யப்படும் செயல்பாடுகளில் மோசடிகள் இருப்பது தெரிகிறது.அதன் மூலம் கருவைச் சுமக்கும் பெண்களும், கருவில் உள்ள குழந்தைகளும் அபாயத்தை நோக்கிச் செல்வது தெரிகிறது.
சட்டவிரோத ஸ்டீராய்டுகள், முறைகேடான கொடையாளர்கள் மற்றும் ஊழல் நிறைந்த கருவுறுதல் என்று,சதிகள் நிறைந்த மருத்துவமனையின் இருண்ட பக்கம் விரிகிறது.இதையெல்லாம் யார் செய்கிறார்கள்?இறந்துபோனவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

குற்றவாளிகளின் தடம் தேடிப் போனால் வேறொரு உளவியல் பிரச்சினைக்குரிய யாரும் எதிர்பார்க்காத ஒரு குற்றவாளி சிக்குகிறான். அவன் சொல்லும் காரணம் யாரும் சொல்லாததாக உள்ளது .ஏன் அப்படிச் செய்தான்? அவன் பிரச்சினை என்ன என்பதுதான் மீதிக் கதை.

கண் முன் நடக்கும் விபத்து போல் கச்சிதமாக அரங்கேறும் அந்த விபத்தில் தொடங்குகிறது திரைப்படம். காரணத்தை ஆராயும் நாயகன் ஆதித்யா மாதவன் தனது காவல் குழுவுடன் இணைந்து மேற்கொள்ளும் விசாரணையில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.தொடர்ந்து வரும் காட்சிகளும் படத்தை விறுவிறுப்புடன் கொண்டு செல்கின்றன.

ஆதித்யா மாதவன் இதற்கான போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார். அவரது இணை கௌரி கிஷன் , டாக்டர் பாத்திரத்தில் வருகிறார்.
அஞ்சு குரியன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்துள்ளார். நண்டு ஜெகன் யாரும் எதிர்பாராத எதிர்மறை சாயல் கொண்ட பாத்திரத்தில் வருகிறார். முண்டாசுப்பட்டி ராமதாஸ் பெரிய தொப்பை கொண்ட போலீஸ்காரராக வருகிறார் .ஆர் சுந்தரராஜன் குற்றவாளியின் தந்தையாக வருகிறார்.

இந்தப் படத்தின் கதை கதாநாயகன் -கதாநாயகி மையப்படுத்தல் கதையாக அமையவில்லை.இதில் எந்த ஒரு தனி நபரையும் உயர்த்திப் பிடிக்கவில்லை.குறிப்பிட்ட பாத்திரங்களைப் பெரிதாகக் காட்டவும் இல்லை.கதை போன போக்கில் காட்சிகள் வருகின்றன.கதையின் பாதையில் பயணம் செய்யும் கதை மாந்தர்களாகவே வருகின்றனர். அந்த வகையில் முதல் பாதியில் மிக விறுவிறுப்பாகப் படம் செல்கிறது.
‘அதர்ஸ்’ என்கிற தலைப்பு குறித்த விளக்கம் கதையை வேறொரு திசையில் அழைத்துச் செல்கிறது.

வித்தியாசமான க்ரைம் திரில்லரைக் கொடுக்க வேண்டும் என முயற்சி செய்துள்ளார் இயக்குநர் அபின் ஹரிகரன் .அவர் கைகாட்டிய திசையில் தனது காட்சிகளின் மூலம் சிறப்பு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது.

இரண்டாம் பாதியில் விசாரணை போலீஸ் அதிகாரிகள் பேசிக்கொண்டே இருப்பது சற்று அலுப்பூட்டுகிறது.

அதிக பொருட் செலவு இல்லாமலேயே வித்தியாசமான திரில்லர் படத்தை படைத்துள்ளார் அபின் ஹரிஹரன்.

திரில்லர் ரசிகர்களைக் குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த ‘அதர்ஸ்’  திரைப்படம் கிரைம் த்ரில்லர் பட ரசிகர்களுக்குப் பிடிக்கும்.

ரேட்டிங் 3.5/5