இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி, ‘செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இயக்கும் இரண்டாவது திரைப்படத்திற்கு ‘மண்டாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தின் தலைப்பு மட்டும் இன்றி படத்தின் கதைக்களமும் வித்தியாசமானதாக மட்டும் இன்றி, இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாததாகும்.
ஆம், கடலும் கடல் சார்ந்த மனிதர்களையும் சுற்றி நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழகத்தின், ராமேஸ்வரம் கடற்கரை கிராமம் ஒன்றில் நடக்கும் ஆபத்து மிக்க பாய்மர படகுப்போட்டியை மையமாக கொண்டு உருவாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார், பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு பிரமாண்ட நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் படத்தின் கதைக்களத்தை விளக்க கூடிய பிரத்யேக வீடியோ ஒன்றும் திரையிடப்பட்டது. படத்தின் மீதான ஆவலை தூண்டும் விதமாக அமைந்த அந்த வீடியோவில் உள்ள ஒவ்வொரு பிரேமும் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கிறது என்றால், படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது உறுதி.
நிகழ்ச்சியில், ‘மண்டாடி’ தலைப்பு குறித்து விளக்கம் அளித்து பேசிய இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, “எனது கனவைப் புரிந்து கொண்டு, என் கதையை கேட்பதற்கு, இந்த வாய்ப்பை அளித்த எல்ரெட் சார் மற்றும் வெற்றிமாறன் சார்க்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். சூரி சாரின் காமெடியன் டூ கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரி சார் போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். வெற்றிமாறன் சார், படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருக்கின்றது எனக்கு ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர். கதிர் அவர்களின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது.
காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர்.மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல, பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி.” என்றார்.
நடிகர் சூரி பேசுகையில், “காமெடி நடிகராக இருந்த என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்தவர் வெற்றிமாறன் சார். அவர் வைத்த நம்பிக்கையால் தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இந்த படத்தின் மூலமாகவும் மீண்டும் அவர் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனால் தான் இப்படி ஒரு படத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். மண் மீது நடக்கும் வீரமிக்க விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றால், கடலில் நடக்கும் வீர விளையாட்டு இந்த பாய்மர படகு போட்டியாகும். ஆனால், இப்படி ஒரு போட்டி தமிழ்நாட்டில் நடப்பது நமக்கே இதுவரை தெரியாமல் இருந்திருக்கிறது. இப்படி ஒரு விசயத்தை, இந்த படம் மூலம் உலகிற்கு சொல்வது, அந்த மக்களுக்கு நாம் செய்யும் நன்றியாக நினைக்கிறேன். இப்படி ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி மூலம் இந்த படத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க தொடங்கி விட்டோம்.
எதுவும் இல்லாமல், கிடைத்த வேலைகளை செய்து, இன்று ஒரு இடத்திற்கு வந்துவிட்டேன். என் சகதிக்கு மீறி, அளவுக்கு அதிகமாகவே பணம் சம்பாதித்து விட்டேன், அனைத்தும் சினிமாவில் தான் சம்பாதித்தேன். அதனால், இனி பணத்தின் பின்னால் போகாமல், நான் நினைத்த, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அதில் ஒரு படமாக மண்டாடி இருக்கும். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.” என்றார்.
சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மஹிமா நம்பியார் நாயகியாக நடிக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஏற்கனவே இப்படத்தின் லுக் டெஸ்ட் முடிந்த கையோடு ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகளுக்காக பட குழு ராம்நாடு சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் குழுமி இருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. காதல், விடாமுயற்சி, மீட்பு மற்றும் உறவுகளின் பின்னணியுடன் விளையாட்டு உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான பயணமாக, இது உருவாகிறது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். டி.ஆர்.கே.கிரண் கலை இயக்குநராக பணியாற்ற, பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹைன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ஆர்.ஹரிஹரன் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளை கையாள்கிறார். ஆர். மோகனவசந்தன், திரள் சங்கர் ஆகியோர் கூடுதல் எழுத்தாளர்களாக பணியாற்றுகிறார்கள்.
இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத கடல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகும் ‘மண்டாடி’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இன்றி இந்திய சினிமா ரசிகர்களுக்கான புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி.