மாஸ்டர் மகேந்திரன், ஜி எம் சுந்தர் ,ஆதிரா, தீபா பாலு, தாசரதி ,முரளிதரன் சந்திரன், சிரிக்கோ உதயா ,மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் நடித்துள்ளனர்.
பீப்பிள் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் சீனிவாசன் தயாரித்துள்ளார். பிரசாந்த் நாகராஜன் இயக்கியுள்ளார். இசை பாலமுரளி பாலு, ஒளிப்பதிவு விஜயகுமார் சோலைமுத்து, கலை ஸ்ரீமன் பாலாஜி, ஸ்டண்ட் டான் அசோக், எடிட்டர் ரூபன் -சி எஸ் பிரேம் குமார்.ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஸ் படத்தை வெளியிட்டுள்ளார்.
‘ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்பார்கள் .ஒரு சிறு ஆத்திரத்தின் விளைவாக படிப்பு வேலை என்று அமைதியாக வாழ வேண்டிய ஒருவன் வாழ்வில் தடம் மாறி திசை மாறி அவன் வாழ்க்கையே தலைகீழாவதைச் சொல்லும் படம் தான் இந்த ‘அமீகோ கேரேஜ்’ .
மாஸ்டர் மகேந்திரனைப் பள்ளியில் கண்டித்த ஆசிரியரைப் பழிவாங்க ‘அமீகோ கேரேஜ்’ அடியாட்களை நாடுகிறார். அதன் பின்பு அவர்கள் அந்த ஆசிரியரைத் தண்டிக்கிறார்கள். இதைப் பார்த்து தாதாயிசத்தின் மீது ஒரு கவர்ச்சி ஏற்பட்டு அவர் பாதை மாறி செல்கிறார். அவரை வெறுப்பேற்ற ரவுடிகள் முயல அதனால் கோபப்பட்டு பழிவாங்க அப்படியே அந்த இருண்ட உலகத்தில் நுழைகிறார். அதன் பிறகு நல்ல வாழ்க்கை, அமையும் வேலை, பெற்றோரை எல்லாம் பிரிந்து குடி, புகை என்று தடம் மாறி வெட்டு குத்து என்று திசைமாறி கூலிக்குக் கொலை செய்யும் இருட்டு உலகத்தில் நுழைந்தவர்,அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். முடிவு என்ன என்பதுதான் கதை. பழகிப்போன டெம்ப்ளேட் தான்.
அமீகோ என்றால் நண்பன் என்று பொருளாம்.இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் பெரிய தாதா போல் நடிக்க வேண்டும் என்று முயன்று உள்ளார்.
ஆனாலும் அவர் தன் உயரம் அறியாமல் இந்தப் பாத்திரத்தை சுமந்து இருப்பதால் நம்பகத்தன்மை இல்லாமல் போகிறது. அவர் எவ்வளவு முயன்றாலும் ஏதோ ஒரு போதாமை நிலவுகிறது. கதாநாயகி ஆதிரா தோற்றத்திலும் நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்குகிறார்
தாசரதி மாஸ்டர் மகேந்திரனை எதிர்க்கும் தாதாவின் கையாளாக வருகிறார். தோற்றம் அளவிற்கு அவருக்கு காட்சிகள் இல்லை. ஜி எம் சுந்தர் குட்டி தாதா ஆனந்தாக வருகிறார். பெரிய தாதா முத்துவாக முரளிதரன் சந்திரன் மிரட்டுகிறார்.
ஒருவரை ஒருவர் பழி வாங்குவது யார் முந்திக் கொள்வது என்று சொல்லி இருக்கிற கதையில் அந்த வன்மத்திற்கான பின்னணியை அழுத்தமாகச் சொல்லாதது ஏன்?அவர்களுக்குள் எழும் பகைமைக்கு வலுவான காரணங்கள் இல்லாததால் காட்சிகள் அழுத்தம் தராமல் போகின்றன.
விஜயகுமார் சோலை முத்துவின் ஒளிப்பதிவும் பாலமுரளி பாலுவின் இசையும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.
வாழ்க்கையில் ஆத்திரத்தில் முடிவெடுக்காமல் ஒரு கணம் யோசித்தாலே நம் வாழ்க்கை தடம் மாறாது என்பதை கிளைமாக்ஸில் தான் சொல்லாமல் சொல்கிறார்கள். அதை வலுவாகச் சொல்லிருந்தால் படத்திற்கு நல்ல கருத்தைச் சொன்ன பெயராவது கிட்டியிருக்கும் . புதுமுக இயக்குநர் தன்னால் எட்டிய உயரத்திற்குப் பூப்பறித்துள்ளார்.