அரசியலில் தடம் மாறினாலும் நடிப்பில் தடுமாறாத நடிகர் ராதாரவி!

ஒரு திரைப்பட உருவாக்கத்தின் போது கதை தயாரான பிறகு அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு எந்த நடிப்புக் கலைஞரைப் பொருந்த வைத்து ஒப்பந்தம் செய்வது என்பது படத்தை உருவாக்கும் இயக்குநருக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்.அப்படிச் சரியாக அமைந்து விட்டாலே அந்தப் படத்தின் கணிசமான வெற்றி உறுதியாகி விடும். அப்படிப்பட்ட சரியான நடிப்புக் கலைஞரைத் தேர்ந்தெடுத்து விட்டால் அந்த பாத்திரத்திற்கான எந்த விளக்க உரையும் தேவையில்லை; அவர்களது தோற்றமும் முக பாவங்களும் உடல் மொழியுமே அந்தக் கதாபாத்திரத்திற்கான நிரூபண விளக்கமாக ஆகிவிடும். அவர்கள் பேசுவது நடிப்பது எல்லாமே கூடுதல் அனுகூலங்கள்.

அப்படி ஒரு இயக்குநரால் சிருஷ்டிக்கப்படும் கதாபாத்திரத்திற்குள் ராதாரவி என்கிற நடிப்புக் கலைஞரை அமர வைத்து விட்டால் போதும் அந்த பாத்திரத்திற்கான தோற்றம் உடல் மொழி உணர்வுகளின் வெளிப்பாடு எல்லாம் தானாகவே வந்து சேர்ந்து கொள்ளும், நடிப்பது வசனம் பேசுவதெல்லாம் உபரி பலாபலன்களாகிப் பலம் சேர்த்து விடும்.

அப்படி ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் ராதாரவி.

திரை உலகில் கறுப்பு வெள்ளை காலகட்டத்திலேயே தனது வில்லத்தனங்களுக்காகவே கைத்தட்டல் பெற்ற நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மகனான இவர், இளையவேள் என்று அழைக்கப்படுகிறார்.ராதாரவி என்கிற நடிகர், நடிப்பு என்கிற கலைக்குச் சிறு சதவீதம் கூட துரோகம் இழைக்காதவர்.நல்லவர், கெட்டவர், பகைவர் , விரோதி,பாசக்காரர், நேசக்காரர், வில்லத்தனம், கள்ளத்தனம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி , கம்பீரம்,நகைச்சுவை என அனைத்து விதமான குணச்சித்திரங்களிலும் பரிமளித்தவர். கலைமாமணி, டத்தோ போன்ற பல்வேறு பெருமைக்குரியவர்.மேடையில் நாடகங்களில் தோன்றி நடித்த அனுபவங்கள் ஏராளம் பெற்றவர்.நடிகர் சங்கம், டப்பிங் யூனியன் போன்ற சங்கப் பணிகளிலும் அனுபவங்கள் கொண்டவர்.

இவர் எப்போதும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசுபவர். அப்படிப் பேசுவதால் இவர் மீது ஒரு எதிர்மறை நிழல் விழுந்துள்ளது என்னவோ உண்மைதான்.ஆனால் அதைப் பற்றி இவர் கவலைப்படுவதில்லை.இவரைப் புரிந்தவர்களும் அதைப் பெரிதுபடுத்துவதில்லை. இவரைப் பற்றி விமர்சிப்பவர்கள் கூட இவர் ஏற்க வேண்டிய கதாபாத்திரத்திற்கு இவரைத் தேடி வருவது திரையுலக இயல்பு.அந்த அளவிற்குத் தவிர்க்க முடியாத இடம் இவருடையது.

இவர் அரசியலில் பல்வேறு கட்சிகளில் பயணம் செய்திருந்தாலும் எதிரெதிர் முகாம்களுக்குச் சென்று வந்திருந்தாலும் இப்படி அரசியலில் தடங்கள் மாறினாலும் நடிப்பு என்கிற கலையில் என்றும் தடுமாறாமல் இருப்பவர் . இவரது தனிப்பட்ட காரணங்களால் திசை மாறிய அரசியல் பயணம் பெரும்பாலும் இவரது திரைப் பயணத்திற்கு இடையூறாக அமைந்ததில்லை.

தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு ,அல்லது தானாக உருவாகி வந்ததை இயல்பாக எடுத்துக் கொண்டு திரையுலகில் தன்னைத் தேடி வரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்பவர்.அதனால்தான் 1976 -ல் மன்மத லீலையில் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு வெள்ளிவிழா தாண்டி இன்றும் உயிர்ப்புடன் நடித்து வருகிறார்.

அதற்குள் எத்தனை எத்தனை இயக்குநர்கள்? எத்தனை எத்தனை திரைப்படங்கள்? எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள்? எல்லா ரகத்திலான, தரத்திலான இயக்குநர்களின் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.நடிப்புக் கலைஞராக மட்டுமல்ல பின்னணிக் குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர்.படத் தயாரிப்பாளராகவும் அனுபவம் பெற்றவர்.
பல்வேறு விதமான குணச்சித்திரங்களில் நடித்த அனுபவம் கொண்ட இவரது நிஜமான குணச்சித்திரம் கரடு முரடானவர், எதையும் வெளிப்படையாகப் பேசுபவர், அது சார்ந்த விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பவர் . யாரையும் எதிரியாக நினைத்துக் கொள்ளாமல் இருப்பது.விமர்சிப்பவர்களைக் கூட விரோதியாக நினைக்காதவர்.

அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.80களில் ஆண்டுக்கு சுமார் 15 படங்களில் நடித்தவர்,பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததே இல்லை. தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் பொன்விழாவை நெருங்கும் வகையில் தனது கலைப்பணியைத் தொடர்ந்து வருகிறார்.

அப்படிப்பட்ட நடிகர் ராதாரவிக்கு நாளை ஜூலை 29-ல் பிறந்தநாள் .
வாழ்க வளமுடன் உடல் நலமுடன் என்று வாழ்த்துவோம்!