கலக்கல் கதை இருக்கும், கலகலப்பான திரைக்கதை இருக்கும், சிரிக்க காமெடி இருக்கும், சீரியஸ் செண்டிமெண்ட் இருக்கும். இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் பிரதான அம்சமாக சேர்ந்துவிட்டது பேய். ‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து மிரட்ட வரும் ‘அரண்மனை 2’வை பார்க்க காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
அதன் முன்னோட்டமாக படத்தின் இயக்குநர் சுந்தர்.சி பட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிலிருந்து…!
‘அரண்மனை’ இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?
“உண்மையிலேயே எந்த பிளானும் இல்லாமல்தான் இருந்தேன். ‘அரண்மனை’யில் பேய் படத்தின் மூடை ஆடியன்ஸ் கடைசி வரை ஃபீல் பண்ணவேண்டும் என்பதற்காக க்ளைமாக்ஸில் ஜன்னலில் பேய் வந்து நிற்பதுபோல் ஒரு சீன் வைத்திருப்பேன். அந்த சீனை பார்த்துட்டு செகண்ட் பார்ட் எப்ப எடுக்கப்போறீங்கன்னு எல்லோரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. வீட்டில் என் குழந்தைகளும் ‘எப்ப டாடி செகண்ட் பார்ட்?’ன்னு கேட்டாங்க. அப்போதான் செகண்ட் பார்ட் ஸ்கிரிப்ட்டுக்கும் பொறி தட்டியது. அதை டெவலப் பண்ண ‘அரண்மனை 2’ ஸ்டார்ட் ஆகிடுச்சு.”
மறுபடியும் ஹன்சிகாங்கறதிலும் முடிவா இருந்தீங்களா?
“கதை ரெடியானதும் முதல் போன் ஹன்சிகாவுக்குதாஅன் அடிச்சேன். விஷயத்தை கேட்டுட்டு இந்த படத்திலும் கண்டிப்பா நான் இருப்பேன்னு நான் கேட்கறதுக்கு முன்னாடியே முந்திகிட்டு கால்ஷீட் புக் பண்ணிட்டாங்க. பார்ட் ஒன்னைவிட இரண்டு செம சூப்பரா வந்திருக்கு. சொல்லமுடியாது ‘அரண்மனை 3’கூட வர வாய்ப்பிருக்கிறது”
சித்தார்த், த்ரிஷா கேரக்டர் எப்படி அமைஞ்சிருக்கு?
“ம் சூப்பர். சித்தார்த் இந்த படத்துக்குள் வந்ததே எதேச்சையாகதான் நடந்தது. ஒருநாள் பேசிட்டு இருந்தபோது செகண்ட் பார்ட் ஐடியாவை சொன்னேன். உடனே நான் பண்றேன் சார்னு ரெடியாகிட்டார். முன்னணி ஹீரோக்கள் நடிக்க தயங்கற அளவுக்கான ஒரு கேரக்டர்தான். ஆனா ரொம்ப ஈடுபாட்டுடன் நடிச்சு கொடுத்திருக்கார். அதேமாதிரி த்ரிஷா. ரெண்டு பேருக்குமே இது முதல் பேய் படம். செமையா என்ஜாய் பண்ணி நடிச்சிருக்காங்க. ஒரு காட்சியில் த்ரிஷா ஆன்னு கத்தனும். தொண்டை கட்டுற அளவுக்கு தொடர்ச்சியா இரண்டு மணி நேரம் கத்தி நடிச்சிருக்காங்க. செம கிளாமராவும் வர்றாங்க”
காமெடி எப்படி வந்திருக்கு?
“முதல்முறையா என் படத்தில் சூரி நடிச்சிருக்கார். டுபாக்கூர் சித்த மருத்துவர் கேரக்டர் அவருக்கு. சூரிக்காக 25 வருஷம் காத்திருக்கிற காதலியாக கோவை சரளா பின்னியிருக்காங்க. சரளாம்மா காமெடி பேய்னே சொல்லலாம். இவரோட அண்ணனா மனோபாலா நடிச்சிருக்கார்.’’
படத்தின் ஹைலட் என்று எதை சொல்வீர்கள்?
“ஒரு அம்மன் பாட்டு. இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதிக்கு மத்த பாட்டு குத்து பாட்டெல்லாம் வரும். ஆனா படத்தில் ஒரு அம்மன் பாட்டு வேணும்னு சொல்லும்போடு அவரால் அதை பண்ண முடியுமான்னு சந்தேகம் வந்தது. ஆனா பிரமாதமா ஒரு அம்மன் பாட்டு போட்டு கொடுத்தார். அந்தப் பாடலை ஷூட் பண்றது பெரிய சவாலாகவே இருந்தது. 150 அடி உயர அம்மன் சிலை முன்னாடி 350 டான்ஸர், ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடிச்சாங்க. ஒவ்வொரு ஷாட் எடுக்கும்போதும் நாலு பேருக்காவது நிஜமாகவே சாமி வந்திடும். ரொம்ப மிராக்கிளாக இருந்த அனுபவம் புதுசா இருந்தது. இந்தப் பாட்டு படத்தின் ஹைலட்டா இருக்கும்”