புதுமுகங்கள் ராம், நீரஜா, ஷாஜி, இளவரசு நடித்துள்ள படம். . ஒளிப்பதிவு சாலை சகாதேவன், இசை எஸ்.ஆர்.ராம். இயக்கம் குபேர்ஜி,தயாரிப்பு ஆஹாஒஹோ புரொடக்ஷன்ஸ்.
இளவரசுவின் மகன் ராம் நண்பர்களுடன் பொறுப்பின்றிச் சுற்றித் திரிகிறார். நண்பர்களுடன் விளையாட்டாக திருட ஆரம்பித்து அதுவே பழக்கமாகிறது.இப்படி ஒரு பெண்ணான நீரஜாவிடமும் தங்கள் கைவரிசையைக் காட்டி செல்போனைத் திருடுகிறார்கள். அப்படியே நாயகன் நாயகிக்குப் பழக்கமாகி, இதயத்தைத் திருடுகிறார். நீரஜாவின் அப்பா ஷாஜி ,போலீஸ் இன்ஸ்பெக்டர். அவருக்கு காதலிப்பது காதலர்கள் என்றாலே பிடிக்காது. காதலுக்குப் பரம விரோதி அவர். காதலியின் அப்பா யாரென்று தெரியாமல் ராம் காதலித்து விடுகிறார் . இதை அறிந்த இன்ஸ்பெக்டர் காதலன்ராமைத் தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்புகிறார். காதலர்கள் பயந்து காட்டுக்குத் தப்பித்து ஓடிப் போய் விடுகிறார்கள். முடிவு என்ன என்பதே ‘ஆரண்யம்’ பட மீதிக் கதை.
படத்தின் முற்பாதி திருட்டு உள்ளூரில் காதலர்கள் சுற்றுவது போலீஸ்காரர் குணச்சித்திரம் என்று கதை போகிறது. மறுபாதியில் காட்டுக்குள் காதலர்கள் போனபிறகு படம் கலர்புல்லாக மாறுகிறது. காடு, மலை, அருவி என பச்சைப் பசேல் என கண்களுக்கு விருந்து. காட்சிகளின் சுவாரஸ்யமின்மை ,குறைகளைக்கூட மறந்து ரசிக்கும்படியாக இயற்கைக் காட்சிகள் உள்ளன.
மறுபாதியில் வரும் சாலக்குடி ,தாய்லாந்து காடுகள் பளிச் .நாயகன் ராம் புதுமுகம் போலத் தெரியவில்லை. நாயகி நீரஜாவும் தோற்றத்தில் , நடிப்பில் பாஸ் ஆகி விடுகிறார். யாரிந்த ஷாஜி ?போலீஸ் இன்ஸ்பெக்டராக மொட்டைத் தலையுடன் வந்தாலும் ஆழமாகவே பதிகிறார். சிங்கமுத்து காதலி சார்ந்த நகைச்சுவைக் காட்சிகள் சிறுபிள்ளைத்தனமான கற்பனை.
படத்தில் இசையும் ஒளிப்பதிவும் வெளிப்பட்ட விதம் இதம். ‘அழகழகா தொலைந்தேன்’,’ காதல் மாயவலை’ பாடல்கள் மனதில் பதிகின்றன
‘ஆரண்யம்’ ஆஹா ஓஹோ ரகமல்ல என்றாலும் பட்ஜெட்பட ரசனை ரகம். குமட்டாத ஜனதா சாப்பாடு போட்டுள்ளார் குபேர்ஜி.