இயக்குநர் பா. இரஞ்சித் ‘ நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் வருகை தந்தார்.
பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகம், அனைத்து விதமான கலை பண்பாட்டு இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்,
உயிரே உறவே தமிழே..
இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும் இதுதான் என்னுடைய வாழ்க்கையின் உண்மை தத்துவம். அலங்காரத்திற்காக சொல்லும் வார்த்தை அல்ல இது. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர்வாழ முடியும். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை.
பா. ரஞ்சித்தின் ஆரம்ப விழாக்களிலெல்லாம் நான் கலந்து கொள்ள வில்லை. ஆனால் நானும் அவரும் இல்லாத போதும் இருக்கும் தாக்கம் இது. அரசியல் என்பதை தனியாகவும், கலாசாரத்தை தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியதுதான் அரசியல்.
ஆளும் கட்சி,ஆளுகிற கட்சி என்ற வார்த்தையே இனி வரக்கூடாது என்று நினைக்கிறேன். நான் நியமித்தவர் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் உதிக்கும் பட்சத்தில் ஜனநாயகம் நீடூழி வாழும். தலைவனை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் இங்கு குடிமகன்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தன்னளவில் தலைவன் தான் என்று நினைக்கும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும்
அரசியலில் என்னுடைய மிக முக்கியமான எதிரி சாதிதான். நான் அதை இன்று சொல்லவில்லை; அதை நான் 21 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இப்போது நான் அதனை தரமான வார்த்தைகளில் பக்குவமாக சொல்கிறேன். ஆனால் கருத்து மாறவே இல்லை. சக்கரத்திற்கு பிறகு மனிதனின் மாபெரும் சிருஷ்டி கடவுள். அதை மறந்து விடாதீர்கள். நம்முடைய உருவாக்கம் நம்மையே தாக்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதன் கொடூரமான ஆயுதம் சாதி.
இது எனக்கு மூன்று தலைமுறைகளை முன்னர் இருந்த அம்பேத்கர் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கிறது; ஆனால் இன்றும் நடந்த பாடில்லை; எழுத்து வேண்டுமானால் வேற வேறயாக இருக்கலாம்.
ஆனால், மய்யமும் நீலமும் ஒன்றுதான்.” என்று பேசினார்.