ஆவணப்படங்களை மீட்டெடுக்கத் தேசிய அளவில் ஆய்வரங்கம்!
சீனு ராமசாமி, சி.வி.குமார், லிங்குசாமி கலந்து கொள்கிறார்கள்.!
சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சென்னை பல்கலைக் கழகத்தின்மெரினா அரங்கத்தில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிவரை ‘ஆவணப்படம் அவசரம் அவசியம்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வரங்கம் தேசிய அளவில் நடக்கிறது.
ஏன் இங்கு மட்டும் இந்த நிலை?
அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஆவணப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி, வெகுஜனத் திரைப்படங்களுக்கு இணையாக வசூல் ஈட்டுகின்றன. ஆவணப்படங்களை மட்டுமே ஒலிபரப்பிவரும் 24 மணி நேரம் தொலைக்காட்சிகள் வெற்றிகரமான பார்வையாளர்களை கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் அத்தகைய சூழல் இல்லை. ஆவணப்படங்களைத் தயாரிக்க முதலீட்டாளர்கள் முன்வருவதில்லை. இதற்குக்காரணம் என்ன; தமிழ் ஆவணப்படங்களின் தரம் சர்வதேசத் தரத்தில் இல்லையா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆவணப்படச் சிக்கல்களை விரிவாக விவாதித்துத் தீர்வுகாண இருக்கிறது இந்த ஆய்வரங்கம்.
சமூகத்தின் கறைகளை எந்தவித பாசாங்குமின்றி நேரடியாகப் பதிவு செய்து நாளைய தலைமுறைக்கு வரலாற்றுப் பாடமாக எடுத்துச் செல்லும் ஆவணப்படங்களைத் தமிழில் அதிக அளவில் உருவாக்கவேண்டிய அவசரமான சூழ்நிலை நிலவுகிறது. ஏனென்றால் பல்வேறு துறைகளில் அனுபவம் புகழும் பெற்று முதிர்ந்த வயதில் இருக்கும் நேரடி சாட்சியங்களை காலத்தே பதிவு செய்யாவிட்டால், வலுவான ஆதாரத்துடன் ஆவணப்படங்களை எடுக்க முடியாது.
மின்னலாய் மறையும்ஆளுமைகள்!
சினிமா நூற்றாண்டு கடந்து செல்லும் இந்த நேரத்தில் அதன் பொற்காலமாகக் கருதப்படும் 50 மற்றும் 60களின் நடிகர்கள், இயக்குநர்கள், படைப்பாளிகளில் வெகுசிலர் மட்டுமே உயிருடன் உள்ளனர். இவர்களை இப்போது ஆவணப்படுத்தாவிட்டால் எப்போதுமே வேறு எப்போதுமே முடியாது. உதாரணமாக தமிழ் சினிமாவின் தனிமனித ஆவணக்காப்பகமாக விளங்கிய பிலிம் நியூஸ் ஆனந்தன் வழியாக ஆவணப்படுத்தப் பட்டிருக்க வேண்டிய அனைத்தும் அவரது கல்லறையுடன் அடக்கமாகிவிட்டது. ஆனந்தன் மட்டுமல்ல ஒவ்வொரு துறையிலும் மூத்த ஆளுமைகள் ஆவணப்படுத்தப்படாமலேயே நம்மைக் கடந்து செல்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும் ஆவணப்படங்களை உலகத்தரத்துக்கு இணையாக உருவாக்குவது எப்படி, அவற்றுக்கான நிதியை உருவாக்குவது எப்படி, ஆவணப்படங்களை உலக அரங்குக்கு எடுத்துச் சென்று வருமானம் ஈட்டுவது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் முழு நாள் நடைபெறும் இந்த ஆய்வரங்கில் மூன்று அமர்வுகள் மூலம் விவாதிக்கப்பட்டுத் தீர்வுகாணப்பட இருக்கின்றன.
முன்னெடுப்பது யார்? பங்கேற்பது யார்?
‘ஒலிவியம் படைப்பகம்’ என்ற தன்னார்வ அமைப்பு, முன்னெடுக்கும் இந்த ஆய்வரங்கைச் சென்னை பல்கலைக்கழகம், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. விவாதம் மற்றும் அனுபவப்பகிர்வு அமர்வுகள் ஒவ்வொன்றிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சர்வதேச அளவிலும் ஆவணப்பட இயக்குநர்களும் ஆளுமைகளும் கலந்து கொண்டு தங்கள் அனுபங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக ஊடகத்துறைப் பேராசிரியர் சொர்ணவேல், சமூகச் செயற்பாட்டாளர் பாமயன், ஆவணப்பட இயக்குநர்கள் பாரதி கிருஷ்ணகுமார் கோம்பை அன்வர், லீனாமணி மேகலை, ரவிசுப்ரமணியன், ஆர்.ஆர்.சீனிவாசன், எழுத்தாளர் பிரபஞ்சன் உள்ளிட்ட இருபத்துக்கும் அதிகமான ஆளுமைகள் அமர்வுகளில் பங்கேற்கின்றனர்.
எதற்காக ஆய்வரங்கம்?
ஆய்வரங்கம் எந்தநோக்கத்துக்காக நடத்தப்படுகிறது என இந்தநிகழ்வை ஒருங்கிணைத்து வரும் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பர்வின்சுல் தானா, ஆவணப்பட இயக்குநருமான பு.சாரோன் ஆகியோரிடம் கேட்டபோது…
“ஆவணப்படங்கள்தான் நம்வரலாற்றின் முகங்கள். வரலாறு வழியே நமக்குக்கிடைக்கும் அனுபவங்கள் அனைத்துமே மிகச்சிறந்த படிப்பினைகள். அதை ஒருசமூகம் கற்றுக்கொண்டால் தான், மீண்டும் நமது சமூகம் தவறுகளில் விழுந்து பின்னோக்கிச் சென்றுவிடாமல் தன்னைக்காத்துக் கொள்ள முடியும். இந்தப் பணியை இன்று நமது கல்வியும் செய்வதில்லை; அரசும் செய்வதில்லை. தனிப்பட்ட மனிதர்களின் கடும் உழைப்பு, பொருட்செலவு ஆகியவற்றால் உருவாகும் ஆவணப்படங்கள் இந்த அறிவையும் விழிப்புணர்வையும் நமக்குத் தந்துவிடும் மிகச்சிறந்த ஊடகமாக விளங்குகின்றன.
ஆனால் ஆவணப்படங்களுக்குப் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், தொலைக்காட்சிகள் என எங்கும் இடமில்லை. ஆவணப்படங்களுக்கு முதலீடு செய்ய அரசோ தனியாரோ முன்வருவதில்லை. இத்தனை இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் இயங்கும் ஆவணப்படத்துறையை காப்பாற்ற வேண்டிய மிகநெருக்கடியான கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆவணப்படங்களுக்கான முதலீடுகளை எப்படித்திரட்டுவது, சர்வதேசத்தரத்துடன் திரைப்படங்களைப் போல மக்கள் பார்க்கும் விதத்தில் அவற்றைச் சுவாரஸ்யமானவிதத்தில் மாற்றுவது, அவற்றைக் காப்பாற்றிமக்களிடம் எடுத்துச்செல்லச் செய்தி மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்கள் எப்படிக் கைகொடுக்க முன் வரவேண்டும் என்பது உட்பட இத்துறையின் அனைத்துச் சாத்தியங்களையும் விவாதித்துத் தீர்வு காண்பதே இந்த ஆய்வரங்கத்தின் நோக்கம்” என்றார்.
நல்லக்கண்ணு பங்கேற்பு!
ஆய்வரங்கத்தின் நிறைவுவிழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, படத்தொகுப்பாளர் பீ.லெனின், திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, திஇந்து தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே. அசோகன், நபார்டு வங்கி நாகூர் அலிஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், ஆய்வரங்கில் சிறந்த ஆவணக்காப்பாளருக்கான 2017-ம் ஆண்டு ஒலிவியம் விருது
திருநின்றவூர் தி.சந்தானகிருஷ்ணனுக்கு வழங்கப்பட இருக்கிறது