இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா சினிமாவையும் தாண்டி சுயாதீன பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அவரது குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் தான் ‘மாத்திக்கலாம் மாலை’.
மியூசிக் வீடியோ சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு எமில் மொஹம்மது இசையமைத்துள்ளார். மணி வி.நாயர் இயக்கியுள்ள இந்த ஆல்பத்தில் சனூஜ் மட்டும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சுகாசினி, இயக்குநர் மாதேஷ், பாடகி பாப் ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் மாதேஷ் பேசும்போது,
“ஜென்டில்மேன் படம் துவங்கிய காலத்திலிருந்தே ஏ.ஆர் ரஹ்மான் வீட்டில் நாங்கள் சாப்பிட்டு வாழ்ந்த அனுபவம் உண்டு. அதன் பிறகு சாக்லேட் படம் பண்ணும் போது மல மல பாடலை பாட வைக்க நிறைய பேரை ஆலோசித்து இறுதியாக ஏ.ஆர் ரெஹைனா அந்த பாடலை பாடினார். அவரது குரலால் அந்த பாடலுக்கு கிடைத்த வீச்சு உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏ.ஆர் ரெஹைனா யாரிடம் பேசினாலும் எப்போதுமே கலை
யைப் பற்றித்தான் அவரது பேச்சு இருக்கும். அவரது கலைப்பயணம் தன்னுடனே நின்று விடாமல் இருக்கும் விதமாக தேசிய விருது பெற்ற ஒரு மகனையும் இந்தத் துறையில் களம் இறக்கியுள்ளார். தேசிய விருது பெற்ற படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்த ஒரு மகளையும் கொடுத்துள்ளார். தேசிய விருதை நோக்கி அவருடைய பயணம் இருக்க வேண்டும்” என வேண்டிக்கொள்கிறேன் என்றார்.
ஏ.ஆர் ரெஹைனா பேசும்போது ,
பிரபலமான ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு தான் பாடல்கள் ஹிட் ஆகி வந்தன. ஆனால் இப்போது படங்களில் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றது. பாடகர்கள், இசையமைப்பாளர்கள் நிறைய பேர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான வருமானம் எங்கே இருக்கிறது ? உலகம் முழுவதும் சுயாதீன பாடல்கள் மூலமாக இசைக்கலைஞர்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கே தான் நாம் திரையுலகையை சார்ந்து அதை மட்டுமே நம்பிக்கொண்டே இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். பாடல் என்பது சினிமாவில் இருந்தால் என்ன, தனி ஆல்பமாக இருந்தால் என்ன ? ரசிகர்கள் எப்போதும் கேட்கத்தான் போகிறார்கள்.
இதில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு டீனேஜ் பெண் போல தான் பாடி இருக்கிறேன். கவிஞர் ருத்ரா இந்த பாடலை எழுதியுள்ளார். தோசை சுடுகின்ற வேகத்தில் பாடல் எழுதி விடுவார். ரம்யா இந்த ஆல்பத்தின் டிராக்கை பாடியுள்ளார். எமில் மிகத் திறமையானவர். அனிருத், ரஹ்மான் போன்று வரக்கூடியவர். எதனாலோ தெரியவில்லை அவரது திறமை வெளியே தெரியாமல் அமுங்கிக் கிடக்கிறது. அனேகமாக இதுபோன்ற சுயாதீன ஆல்பங்களில் அவரது பெயர் பெரிதாக வரும் என எதிர்பார்க்கிறேன்.. கனடாவில் அவர் பெரிய ஆளாக இருப்பது போல இங்கே இந்தியாவிலும், குறிப்பாக தென்னிந்தியாவிலும் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். மணி வி வி நாயர் இதை இயக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு நான் கூப்பிட்டதுமே உடனே ஓடோடி வந்த பாப் ஷாலினிக்கு நன்றி. அவர் சினிமாவில் பாடுவதற்கு முன்பாகவே நிறைய பாப் பாடல்கள் பாடியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் நான்கு வரிகள் தான் முதலில் பாடினேன். அதைக் கேட்டு விட்டு ஏ.ஆர் ரஹ்மானிடம் இந்த குரல் யாருடையது முழு பாடலையும் பாட வையுங்கள் என்று கூறிவிட்டார். அதுவே எனக்கு ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது போன்றது. மணிரத்னம் படங்களில் நான் பாடிவிட்டால் என் பாடலை தூக்கக்கூடாது என விட்டுவிடுவார். அதன்பிறகு மாதேஷ் என்னை நம்பி ஒரு முழு பாடலை கொடுத்து ரசிகர்களுக்கு இன்னும் என்னை அடையாளம் காட்டினார்” என்றார்.
பின்னணி பாடகி பாப் ஷாலினி பேசும்போது,
“ஏ.ஆர்.ரெஹைனாவை நீண்ட நாட்களாகவே எனக்கு தெரியும். அவரிடம் எப்போதும் ஒரு உற்சாகம் இருக்கும். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஒரு ஆர்வம் இருக்கும். இப்போது சுயாதீன பாடல்கள் பெரிய அளவில் வந்து கொண்டிருக்கிறது இந்தப் பாடலை பார்த்ததும் ஆடல், பாடல், நடிப்பு என அவர் அடுத்த லெவலுக்கு சென்று விட்டார் என தெரிகிறது.: என்றார்.
நடிகை கோமல் சர்மா பேசும்போது,
“ஏ.ஆர்.ரெஹைனா பற்றி பேச வேண்டுமென்றால் சரஸ்வதியே கீழே இறங்கி வந்து பாடினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருப்பார். ஒரு பக்கம் அவர் திறமையின் உச்சம் என்றால் இன்னொரு பக்கம் இந்த திரைத்துறையில் அவரை மதர் தெரசா என்று சொல்லலாம். ஒரு திறமையான கலைஞராக மட்டுமல்ல அற்புதமான மனிதராக, மனித நேயம் கொண்டவராகவும் அவரை பார்க்கிறேன். அவரை பார்த்து நான் மயங்கிய ஒரே விஷயம் என்றால் அவருடைய உதவும் குணம், அறக்கட்டளை பணி தான். இந்த ஆல்பம் மூலமாக கூட எத்தனை பேருக்கு நல்லது பண்ண முடியும் என்பதுதான் அவர் எண்ணம். அதைக்கூட விளம்பரப்படுத்தாமல் செய்து வருகிறார். பல பேருக்கு இந்த விஷயமே தெரியாது.
இந்த பாடலை கண்ணை மூடி கேட்கும்போது ஒரு சர்வதேச பாடகர் பாடியது போன்று இருக்கும். யாராலும் இந்த லெவலில் பாட முடியாது. அந்த அளவிற்கு இதை சர்வதேச ஆல்பம் என்றே சொல்லலாம். ஒரு ஆல்பமோ அல்லது படமோ பெரிதாக வரும்போது இந்த திரைத்துறைக்கு நிறைய பயன்கள் இருக்கின்றன. பெரிய வருமானங்களும் பல பேருக்கு வாய்ப்புகளும் கிடைக்கின்றன” என்று கூறினார்.
நடிகை சுகாசினி பேசும்போது,
“இது வித்தியாசமான படைப்புகள் உருவாகும் ஒரு காலகட்டம் என்று சொல்லலாம். முன்பு சினிமா, நாடகம் மட்டும் தான் இருந்தது. ஆனால் இன்று நிறைய தளங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது தான் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பல கலைஞர்களை கண்டுபிடிக்க முடிகிறது. இந்த சின்ன பையன் சாய் அபயங்கர் திப்பு-ஹரிணியின் மகன் என்பது எனக்கு தெரியவே தெரியாது. என்னுடைய படத்திற்காக ஹரிணியை அழைத்து வந்து நிலா காய்கிறது பாடலை பாட வைத்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.
இந்தப் பாடலின் இசை எங்கே போய் சேர வேண்டுமோ அதற்கு ஏற்ற மாதிரி இருக்கிறது. சில புத்திசாலித்தனமான இயக்குனர்கள் என்னிடம் கேட்கும்போது, என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை அந்த சமயத்தில் வெளியான பிரபலமான பாடல் அந்த சூழ்நிலைக்கு எது சரியாக பொருந்துமோ அதை வைத்து தான் அந்த நிகழ்வுகளை ஞாபகம் வைத்துக் கொள்வேன் என்று கூறினேன். சங்கீதம் இல்லை என்றால் என்ன வாழ்க்கை இருக்கிறது ? சங்கீதம் தான் எல்லாமே. 1997ல் நான் சுகம் இல்லாமல் இருந்தபோது அடிக்கடி என் வீட்டிற்கு வந்து நான் குணமடைய வேண்டும் என்பதற்காக நான் படுத்திருந்த இடத்தில் ஏ.ஆர் ரெஹைனாவின் அம்மா விளக்கேற்றி வைத்துவிட்டு செல்வார்கள். அந்த தாயின் ஆசிர்வாதத்துடன் ஏ.ஆர் ரெஹைனாவின் எதிர்காலம் இன்னும் பிரகாசிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று கூறினார்
பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்து ஏ.ஆர் ரெஹைனா பேசும்போது,
“நான் முதன்முதலில் பண்ணிய ஆல்பம் ரீங்காரம். அதற்கடுத்து ழா என்கிற பாடல் பண்ணி இருந்தேன். சுயாதீன ஆல்பங்கள் என்பது எப்போதுமே எங்களுக்கு விருப்பமானது. இந்த மாத்திக்கலாம் மாலை பாடலில் என்ன புதுமை என்று கேட்டால் புதுமை எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் வேலை செய்துவிட்டு களைத்துப் போய் வரும் தொழிலாளிகளுக்கு இது போன்ற பாடலை பார்க்கும்போது அவர்களது மூட் அப்படியே மாறிவிடும். அவர்களுக்கு அடுத்த நாள் உற்சாகம் தருவதே இதுபோன்ற பாட்டுக்கள் தான்.
நான் இப்படி படபடவென பேசுவதற்கு காரணம் கொஞ்ச நாள் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துள்ளேன். அதன்பிறகு சின்மயி மூலமாக ஆர்ஜேவாக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதிருந்து இப்படி மாறி விட்டேன். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த பாடலை அனுப்பி வைத்தேன். அவர்தான் பெரிதாக பேச மாட்டாரே. ஒரு தம்ஸ் அப் மெசேஜ் மட்டும் அனுப்பி வைத்தார்.
இது இந்த புதிய தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட ஆல்பம். உலக அளவில் பார்க்கும்போது இசையமைப்பாளர்கள் நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள். இங்கே நாம் இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறோம். படத்திலும் பாடல்களை குறைத்து விட்டால் இசையமைப்பாளர்கள் எங்கே செல்வார்கள் ? அதனால் தான் நாங்களே பாடல் காட்சிகளில் தோன்ற ஆரம்பித்து விட்டோம். அதற்காக ஹீரோயினாக நடிப்பேன் என்று நினைத்து விட வேண்டாம். என் பாட்டுக்கு மட்டும் தான் நான் ஹீரோயின். எனக்கு என்ன பொருந்துமோ அதைத்தான் பண்ணுகிறேன். சில பேரை தூங்க வைப்பதற்காக தான் பாட்டு என்றாலும் தூங்காமல் இருக்கும் சிலருக்காக இது போன்ற பாட்டுக்கள் தேவை. ஏ.ஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் தான் இந்த பாடலை படமாக்கினோம்.
இந்த பாடலை ரிலீஸ் வீடியோக்களாக வெளியிடுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன அதில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவுக்கு பரிசாக இரண்டு பேருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்
சாலிகிராமம் அப்புசாலி தெருவில் புதிதாக கரீமா டைனிங் ஸ்பாட் என்கிற பிரியாணி கடை துவங்கியுள்ளேன். அருமையான பிரியாணி அங்கே கிடைக்கும். ஆயிரம் பிரியாணி கடைகள் இருந்தாலும் என்னுடைய டேஸ்ட்டுக்கு என் வீட்டிற்கு பிடித்த மாதிரி அது இருக்கும். எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் அம்மா அவர்களை வரவேற்று உபசரிப்பார். அவரது பிரியாணி ரொம்பவே ஸ்பெஷல். அவரிடம் இருந்து நானும் கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என சொல்லலாம். அவரது ஞாபகார்த்தமாகத்தான் இந்த கடையை துவக்கி உள்ளேன்” என்றார்.