குமுதம் பத்திரிகையும், இளையராஜா பேன்ஸ் கிளப் அமைப்பும் இணைந்து சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடத்திய இசைஞானி ‘இளையராஜாவின் பிறந்த நாள் விழா’ கோலாகலாமாக கொண்டாப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர்கள் பஞ்சு அருணாச்சலம், பாலா, இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், இயக்குநரும், எழுத்தாளருமான சுகா, எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த விழாவில் இளையராஜா குமுதத்தில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்வி பதில்களின் தொகுப்பான ‘இளையராஜாவைக் கேளுங்கள்’ எனும் புத்தகம், வெளியிடப்பட்டன.
மேலும் இது இளையராஜாவின் பிறந்தநாளாக மட்டுமில்லாமல் 71௦௦1 மரக் கன்றுகள் நாடு விழாவாகவும் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள்:
S.ராமகிருஷ்ணன் பேசும்போது,
‘’நான் ஒருமுறை வெளிநாடு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நின்ற விமானம் திரும்பக் கிளம்ப எட்டுமணி நேரமாகும் என்பதால் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அதே ஏர்போர்ட்டில் சதீஷ் என்கிற இளைஞனும், இளையராஜாவின் பாடல்களை செல்போனில் ஒலிக்கவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். உடனே நான் அவனிடம் ஓடிச்சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னிடமுள்ள இளையராஜா பாடல்களை அவனும், அவனிடமுள்ள இளையராஜாவின் பாடல்களை நானும் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் இருவரும் அங்கே எங்களை மறந்து, போட்டிபோட்டுக்கொண்டு கேட்ட இளையராஜாவின் பாடல்களை அங்கே வெளிநாட்டினரும் ரசிக்க ஆரம்பித்து, பாராட்டிவிட்டு சென்றார்கள்’’ என்றார்.
மேலும், ‘’அதுபோல் எந்த ஊருக்கும், எந்த நாட்டுக்கும் சென்றாலும் அங்கே இளையராஜா பாடல்களைக் கேட்கும் தமிழன் ஒருவனை சந்திக்காமல் இருக்கவே முடியாது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதல் ஆதாரமே இசைஞானியின் இசைதான்’’ என்றார்.
இயக்குநர் பாலா பேசும்போது,
‘’இந்த மேடையில் அவருக்கு சமமாக என்னை அமரவைத்ததே எனக்குக் கிடைத்த கவுரவம். அவரின் ‘இளையராஜாவைக் கேளுங்கள்’ என்ற புத்தகத்தில் அவர் எழுதிய விஷயங்களிலேயே அவரின் குணம் வெளிப்பட்டது. அந்தப் புத்தகத்தின் கடைசியில் ‘’என் பதில்களால் யாராவது புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று எழுதியிருப்பார். அதுதான் அவரின் குணம், பண்பு. அவர் நெடுநாட்கள் வாழ அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன்’’ என்றார்.
இயக்குநர் பார்த்திபன் பேசும்போது,
‘’இளையராஜாவின் இந்த பிறந்தநாள் விழாவை நடத்த ஆசைப்பட்டு அவரிடம் அனுமதி வாங்க அவரை சந்தித்தேன். ஆனால் அவரோ அனுமதி தராமல் மறுத்துவிட்டார். எனக்கு அதனால் துளியும் வருத்தமில்லை. காரணம் இளையராஜாவை இந்த விழாவிற்கு சம்மதிக்க வைக்கமுடியவில்லையே என்று வருத்தத்தைவிட, அவரை நேரில் சந்தித்துப் பேச எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்ற எனக்கு கிடைத்த சந்தோசமே அதிகம். பாலா சொன்னதுபோல் இந்த மேடையில் இசைஞானிக்கு இணையாக என்னையும் அமரவைத்ததே எனக்குக் கிடைத்த சந்தோசம். அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருப்பதே எனக்குக் கிடைத்த பெரும் பேரு’’ என்றார்.
இயக்குநர் பஞ்சு அருணாச்சலம் பேசும்போது,
நான் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளேன் என்பதோ, நான் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்பதோ, நான் ஒரு நல்ல வசனகர்த்தா என்பதோ, அல்லது நீண்ட காலம் சினிமாவில் இருந்ததோ எனது பெருமையாக நான் சொல்லமாட்டேன். நான்தான் இளையராஜாவை அறிமுகப்படுத்தினேன் என்பதே எனக்குக் கிடைத்த பெருமை.
ஒரு தாய் தன் மகனைக் கொஞ்சும்போது, அவனை கண்ணே!, மணியே! என்றுதான் கொஞ்சுவாள். அவனை வருங்கால முதல்வரே, என்றெல்லாம் புகழமாட்டாள். ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு சாதனைகள் செய்யும். அதுபோலத்தான் ‘அன்னக்கிளி’ படத்தில் நான் இளையராஜாவை குழந்தையாகத்தான் பார்த்தேன். அவர்தான் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்று வளர்ந்துவிட்டார்.
எந்த ஒரு துறையிலும் ஒரு கட்டத்திற்கும் மேல் சலிப்பு வந்துவிடும். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்தது போல இன்னும் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார்கள். அந்த பாக்கியத்தை இளையராஜாவுக்குக் கொடுத்த கடவுளுக்கு என் நன்றிகள்’’ என்றார்.
இயக்குநர் சுகா பேசும்போது,
‘’ஒரு இசை உயிரோட்டமாக மக்களிடையே கலந்திருப்பதற்கு மிக முக்கியமானது திறமையோ, உழைப்போ அல்ல. அன்புத் ஒன்றேதான். இசைஞானியின் அன்புதான் அவர் இசையின் வெளிப்பாடு’’ என்றார்.
இளையராஜா பேசும்போது,
‘’இது பிறந்தநாள் விழா என்பதைவிட புத்தக வெளியிட்டு விழா என்றே சொல்லலாம். இவ்விழாவிற்கு வந்திருக்கும் பஞ்சு சார், பாலா, பார்த்திபன், ராமகிருஷ்ணன், சுகா அனைவருமே அவரவர் துறைகளில் சாதித்தவர்கள்தான். பொதுவாக அழைப்பிதழ்கள் அடித்து பிறந்தநாள் விழா கொண்டாடுவது எனக்குப் பிடிக்காது. ஆனால் இது புத்தக வெளியீட்டு விழாவோடு பிறந்தநாள் விழாவும் சேர்ந்த இந்த நாளில் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு எழுதி சாதிக்க வேண்டுமென்றோ, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி சாதிக்க வேண்டுமென்றோ எனக்கு எண்ணம் கிடையாது.
அதேபோல, இங்கே வந்திருக்கும் பஞ்சு அண்ணனோ ஒரே சமயத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சரி கல்யாணராமன், ஆறிலிருந்து அறுபதுவரை என்ற இரண்டு படங்களை ஒரே சமயத்தில் இயக்கி, ஒரே வாரத்தில் ரிலீஸ் செய்து, இரண்டு படந்களையும் சக்சஸ் செய்தவர். கமலும், ரஜினியும் அவர்கள் வாழ்க்கையில் அதிக வெற்றிப் படங்களில் நடித்திருப்பது பஞ்சு அண்ணன் இயக்கத்தில்தான். எனவே அவர் இந்த விழாவிற்கு வருகை தந்து என்னை வாழ்த்தியது எனக்கு மகிழ்ச்சி. உங்களை சந்தித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி’’ என்றார்.