இசைப்பேராளுமையின் இசைப்பயணம்: தங்கர் பச்சான் பெருமிதம்!

இளையராஜாவின் சிம்பொனிப் பயணம் குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் இன்று விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

‘அறியாமையினால் இசைப்பேராளுமை இளையராஜா அவர்களை தூற்றியவர்களும்,சாடியவர்களும் கூட அவரின் புகழ் பாடத்தொடங்கி விட்டனர்!

ஒரு சிம்பொனியை உருவாக்கியதால் இன்று அனைவரும் அவரை இப்பொழுது பாராட்டுகிறார்கள். திரைத்துறையில் அறிமுகமாகிய ஓராண்டுக்குள்ளாகவே ரசிகர்களையும் தாண்டி இசை அறிஞர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டவர்.
வணிக வெற்றி அடைந்த படப்பாடல்களில் இருந்தும் வெற்றி அடையாத சில படப்பாடல்களைக்கொண்டும் அவரின் திறமையை நாம் மதிப்பிடுகின்றோம்! இருநூறு முன்னூறு திரைப்பாடல்களையே மீண்டும் மீண்டும் கேட்டு விட்டு நாம் வியந்து போகின்றோம்!

படத்தின் பெயர் அறியாத,மக்களுக்குத் தெரியாத நடிகர்கள் நடித்த படங்களில்தான் இளையராஜா மிகச்சிறந்த இசையை வடித்திருக்கிறார்! மீண்டும் மீண்டும் கேட்டு இன்புற வேண்டிய இசைக்கோர்வைகள் அவ்வாறான படங்களில்தான் கொட்டிக்கிடக்கின்றன!
பொதுவாகவே புகழ் பெற்ற நடிகர்கள் நடிக்கும் அதிக முதலீட்டுப் படங்களில் புதுமைகளையும்,பரிசோதனை முயற்சிகளையும் கலைஞர்களால் கையாள முடிவதில்லை. சிறிய எளிய படைப்புகளிலேயே அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இளையராஜா என்பவர் திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் ஒரு இசை அமைப்பாளர் என்பதையும் தாண்டி உலக இசைமேதைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு பேராளுமை என்பதை நாம் அறியத் தவறி விட்டோம்!

இலண்டன் மாநகரில் இன்று அரங்கேறும் முதல் சிம்பொனி இசைக்கோர்வைத் தொகுப்பு இளையராஜாவை இந்தியாவைக்கடந்து உலகம் முழுமைக்கும் கொண்டு செல்லும் காலத்தைத் தாண்டிய காவியப்படைப்பாக இருக்க வேண்டும் என்பது என் பேராசை!

இசைமேதை அமேடியாஸ் மொசார்ட் பிறந்து வளர்ந்த இல்லம் இன்று அருங்காட்சியகமாக இருப்பதைக் காண நான் வியன்னா (ஆஸ்த்ரியா ) சென்றிருந்தபோது, உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து குவிவதைக் கண்டேன்!அந்த இல்லம் இப்பொழுது அந்நாட்டின் முதல் அடையாளமாக மாறிவிட்டது!
அதேபோல் உலகம் தமிழ்நாட்டை நோக்கி வரும் நாள் எதிர்காலத்தில் நடந்தேறும் என நம்புகின்றேன்!

இளையராஜா அவருடைய இசையின் மூலம் இன்று வரை எண்ணற்ற இதயங்களுக்கு ஒரு மனநல மருத்துவராக மருத்துவம் அளித்து வருகிறார்! இனி இந்த சிம்பொனி இசைக்கோர்வைத் தொகுப்புக்குப் பின் அறியப்பட்ட அவருடைய திரைப்பாடல்களும் கண்டறியப்படாத பாடல்களும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்றுக்கொண்டே இருக்கும்!

தமிழ்த்திரைப்பாடல்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தவர்களின் செவிகளை சிம்பொனி இசைகளையும் கேட்கும்படி செய்து விட்டாரே இதைக்காட்டிலும் பெரிய சாதனை எதுவும் இல்லை!!’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.