லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை: அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு இயக்குநர்: ரவிவர்மன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி.முத்துராஜ்
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத்
இந்தியாவின் தேசிய நோயான லஞ்சம் ஊழலுக்கு எதிராக ஓர் இந்தியன் தன் வழியில் போராடும் கதை.
சரி இந்தியன் 2 படத்தின் கதை எப்படி ?
சித்தார்த் மற்றும் நண்பர்கள் இணைந்த ஒரு யூடியூபர்கள் குழு நாட்டில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்த முயல்கிறது. ஊழலை ஒழிப்பதற்குச் சரியான வழி, இந்தியன் தாத்தா திரும்பிவர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அதற்காக அவரை அழைத்திடும் விதத்தில் வலைதளத்தில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்கள். COME BACK INDIAN ஹேஷ்டேக் உருவாக்கி வைரல் ஆக்குகிறார்கள். அவர்களின் சமூக வலைதளப் பிரச்சாரம் தைவானில் வர்மக்கலை ஆசானாக இருக்கும் இந்தியன் தாத்தா கண்ணில் படுகிறது. ஊழலுக்கு எதிரான தன் போராட்டத்தில் இறங்கித் தொடர இந்தியாவுக்கு கிளம்பி வருகிறார் சேனாபதி.அது நேதாஜி பாணியிலான இரண்டாவது சுதந்திரப் போராக மாறுகிறது.
இந்தியா வந்த சேனாபதி யாராக இருந்தாலும் சரி,உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி ஊழல் செய்தால் அம்பலப்படுத்துங்கள் என்று நாட்டு இளைஞர்களை வலியுறுத்துகிறார் . பிறகு சேனாபதியின் ஆட்டம் ஆரம்பம் ஆகிறது.அவர் லஞ்சம் ஊழலுக்கு எதிரான இந்தப் போரில் வென்றாரா இல்லையா? விளைவுகள் என்ன ?என்பதன் முடிவை நோக்கிச் செல்வதுதான் இந்தியன் 2 படத்தின் திரைக்கதை செல்லும் பாதை.
முதல் பாகத்தில் சில்லறையாக ஐநூறு, ஆயிரம் என்று லஞ்சம் வாங்கியவர்களை வேரறுத்த தாத்தா இந்த இரண்டாம் பாகத்தில் பெரிய லஞ்ச ஊழல் முதலைகளை வர்மக்கலை மூலம் வித்தியாசமாக வீழ்த்துகிறார்.
இந்தியன் முதல் பாகத்தில் ஒரு தோற்றத்தில் வந்தவர் இதில் யாரும் எதிர்பாராத விதமான பல்வேறு வித தோற்றங்களில் வருகிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். ஷங்கர் அளித்துள்ள பிரமாண்டமான களத்தில் தன் பாணியில் இறங்கி ஆடியுள்ளார்.
சித்தார்த்தின் நடிப்பு உணர்ச்சிகரமாக உள்ளது. நெடுமுடி வேணு, விவேக், மனோ பாலா போன்றவர்களின் நடிப்பை பார்க்கும் போது வி மிஸ் யூ என்று மனம் வருந்துகிறது. படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்களைப் பயன்படுத்த ஆங்காங்கே ஆச்சரிய மின்னல்களை அளிக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
ரவி வர்மனின் பிரமாண்டத்தைக் கண் முன் நிறுத்தும் ஒளிப்பதிவு நம்மை படத்துடன் பயணிக்க வைக்கிறது.
அனிருத் முழுக்க முழுக்க வணிக இசையைக் கொடுத்துள்ளார்.
இந்தியன் தாத்தா இந்தியாவுக்கு தேவை. இந்தியன் 2 போன்ற படங்களும் நம் மக்களுக்குத் தேவைதான் .அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்கலாம்.