
அதைத்தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் மற்றும் பல தனியிசைக்கலைஞர்கள் பங்குபெறும் மெட்ராஸ் மேடை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனம். சென்னை கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ. பெயின் பள்ளி வளாகத்தில் மே மாதம் 19ம் தேதி (19.05.2018) சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெறுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்ளும் இடவசதி கொண்ட வளாகத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்த மாபெரும் இசைக் கொண்டாட்டத்திற்கான அனுமதி முற்றிலும் இலவசம்

“சினிமா என்பது நிறைய கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு மீடியம். இங்கு எல்லோருக்கும் பயந்துகொண்டு தான் கலைஞர்கள் ஒரு படைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆனால், தனி இசைக் கலைஞர்களுக்கு அப்படியில்லை, அவர்களுக்கு எல்லையற்ற சுதந்திரமுள்ள ஒரு கலை வடிவம் வாய்த்திருக்கிறது. அந்த கலை வடிவங்களைப் பயன்படுத்தி எதைப் பேசுகிறோம், எப்படியான உரையாடல்களை உண்டாக்குகிறோம் என்பதே இங்கு முக்கியம். அதற்கான முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது தான் “THE CASTELESS COLLECTIVE” . எதிர்பார்த்ததைப் போலவே அந்நிகழ்ச்சி சமூகத்தில் பல விவாதங்களை உண்டாக்கியது.
அதைத்தொடர்ந்து மெட்ராஸ் மேடை நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருக்கிறது. கவனிக்கப்படாத தனியிசைக் கலைஞர்கள் பலர் இதில் பங்குபெறுகிறார்கள். இங்கு கலை இலக்கியத்தை கர்வமாகவும், அரசியல் புரிதலுடனும் அணுகிக் கொண்டாடக் கூடிய நவீன நாடகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவையாவும் நம் கவனத்திற்கு வருவதேயில்லை. அதைப் போல அல்லாமல், இந்தக் கலைஞர்களை மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் தனியிசைக் கலைஞர்கள் மீதான பொதுப்புத்தியின் பார்வையை மாற்றும் நிகழ்வாகவும் இந்த “மெட்ராஸ் மேடை” இருக்கும் என நம்புகிறேன்.
சினிமாவின் இசை மட்டும் தான் மக்களுக்கான இசை என்பதாக ஒரு பிம்பம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பிம்பத்தை இந்த “மெட்ராஸ் மேடை” உடைக்கும். வாழ்க்கையின் சூழல் சார்ந்து, அதன் அர்த்தத்துடனே கூடிய விடுதலை உணர்வை பாடக்கூடிய இடமாக இந்த “மெட்ராஸ் மேடை” அமையும். “மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்” மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு கண்டிப்பாக “நீலம் பண்பாட்டு மையம்” தோள்கொடுக்கும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என இயக்குநர் பேசினார்.