இயக்குநரின் உழைப்பு தான் படம் வெற்றிபெறக் காரணம்: “சைரன்”பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி பேச்சு!

ஹோம் மூவி மேக்கர்ஸ்  சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்..

தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் பேசியதாவது…

இதுவரை நாங்கள் தயாரித்துள்ள படங்களுக்கு உங்கள் ஆதரவைத் தந்துள்ளீர்கள் அதேபோல் இந்த சைரனுக்கும் ஆதரவு தாருங்கள். ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் இந்த சைரன் படம். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் எங்கள் அன்பு ஜெயம் ரவி இந்தப்படத்திலும் அசத்தியுள்ளார். என் மருமகன் என்பதால் கூறவில்லை. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். நந்தினி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார். இந்தப் படம் அவர் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். ஜெயம் ரவிக்கு இணையாக எதிர்த்து நிற்க, அவரால் முடியுமா என முதலில் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது, ஆனால் இந்தப்படத்திற்காக 5 கிலோ எடைகூட்டி அந்த போலீஸ் உடையில் கச்சிதமாக இருந்தார். அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி எல்லா பாத்திரங்களிலும் எல்லா மொழிகளிலும் அசத்துகிறார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். யோகி பாபு படம் முழுக்க வருகிறார். அவர் நடிப்பு பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன். அவருக்கு வாழ்த்துக்கள். அழகம் பெருமாள், அஜய், துளசி மேடம், சாந்தினி இன்னும் பலர் நடித்துள்ளனர். அனுபமா பரமேஸ்வரன் ப்யூட்டிஃபுல்லான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த விழா நாயகன் ஜீவி அருமையான நான்கு பாடல்கள் தந்துள்ளார், அவருக்கு நன்றி. கேமராமேன் செல்வகுமார் அவ்வளவு அற்புதமான விஷுவல்கள் தந்துள்ளார். திலீப் மாஸ்டர் சண்டைக்காட்சிகள் நன்றாக எடுத்துள்ளார். படத்தில் எல்லோரும் தங்கள் உயிரை தந்து உழைத்துள்ளனர். ரூபன் எங்கள் ஃபேமிலி மாதிரி. எல்லா படத்திலும் இருப்பார். அந்தோணி பாக்யராஜை ரூபன் தான் அறிமுகப்படுத்தினார். நிறைய வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார். எனக்கு முதலில் சொன்னது காமெடி கதை. ரவியிடம் தான் இந்தக் கதையைச் சொன்னார். சொன்ன மாதிரி நன்றாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசியதாவது…

மாநகரம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க இரவில் நடக்கும் கதையில் வேலை செய்கிறேன். டைரக்டர் அந்தோணி கதை சொல்லும் போதே சுவாரஸ்யமாக இருந்தது. அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை எதிர்பார்க்கவில்லை. ஷூட்டிங் செம ஜாலியாக இருந்தது. ஆனால் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எல்லாமே இருக்கும். ஜெயம் ரவி ரொம்ப எளிமையாகப் பழகினார். எனக்குப் பிடித்த படி எடுத்திருக்கிறேன். எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். சுஜாதா மேடம் எனக்கு நிறைய ஆதரவு தந்தார்கள். இந்த வருடத்தில் தமிழில் மிக முக்கியமான படமாக இப்படம் இருக்கும்.

எடிட்டர் ரூபன் பேசியதாவது…

ஒரு படத்திற்கு இயக்குநரின் பார்வைதான் முக்கியம், ஆனால் அவர்களின் பார்வை இங்கு எளிதாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. கதையை நம்பி பல நல்ல இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கும் ஜெயம் ரவி அவர்களுக்கு நன்றி. என்னை நம்பி கதை கேட்டு, அதை ஒப்புக் கொண்டார். எனக்கு உரிமையான ஃபேமிலியாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை நினைக்கிறேன். அதனால் தான் வாய்ப்பு கேட்க முடிந்தது. என்னை அவ்வளவு நம்புவார்கள். அந்தோணி என் காலேஜ் ஜூனியர் தான். நிறைய பெரிய படங்களில் ரைட்டராக வேலை பார்த்திருக்கிறார். இயக்குநராகும் அவரது கனவு இந்த படத்தில் நிறைவேறியுள்ளது. மிக நன்றாக படத்தைக் கொண்டு வந்துள்ளார். இந்தக் குழு எனக்கு ஃபேமிலி மாதிரி தான். இப்படம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. படத்தில் நடித்த அனைவருமே நன்றாக பணியாற்றியுள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் அழகம் பெருமாள் பேசியதாவது…

ஜெயம் ரவி உடன் மிக அருமையான பயணம். கீர்த்தி, அனுபமா எல்லோருடனும் மிக இனிமையான அனுபவமாக இருந்தது. அந்தோணி ரைட்டராக இருந்த காலத்திலிருந்தே தெரியும். அவரது முதல் படம் வெற்றிப்படமாக வாழ்த்துக்கள். ஜீவிக்கு இந்தப் படம் மிக நல்ல படமாக அமையும். ஜெயம் ரவிக்கு மிகச் சிறந்த வெற்றி படமாக இருக்கும். உங்கள் அன்பையும் ஆதரவையும் இப்படத்திற்கு தாருங்கள் நன்றி.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…

இந்த நிறுவனத்தில் 18 வருடங்களுக்கு முன் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறேன். தயாரிப்பாளர் சுஜாதா அவர்கள் நான் சின்னத்திரையில் இருக்கும் போதே என்னை வாழ்த்தி கொண்டே இருப்பார் . நான் பெரிய ஆளாக வருவேன் எனச் சொல்வார். சினிமாவில் எல்லாமே தெரிந்த ஒரு தம்பி ஜெயம் ரவி. அவரது திறமைக்கு இன்னும் பெரிய இடம் காத்திருக்கிறது. அவரோடு இன்னும் 100 படங்கள் நடிக்கலாம். அவருடன் நிமிர்ந்து நில் படம் பணியாற்றினேன். அந்தப்படத்தில் அவர் போட்ட உழைப்பு மிகப்பெரியது. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் அவர்களுக்குத் தேவையானதைச் சிரித்துக்கொண்டே வாங்கி விடுவார்கள். எடிட்டர் ரூபன் இந்த வருடம் இயக்குநராகிவிடுவார். அழகம் பெருமாள் அண்ணனுடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். 108 அலுவலகம் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அதை நான் வாழ்நாளில் மறக்கவே முடியாது அத்தனை பெரிய அமைப்பு. அந்த உழைப்பாளர்களுக்கு சமர்ப்பணமாக இப்படம் இருக்கும் நன்றி.

ஜீவி பிரகாஷ் பேசியதாவது…

அந்தோணி டார்லிங் படத்திலேயே துணை இயக்குனராக வேலை பார்த்தவர். பல படங்களில் வேலை பார்த்துள்ளார். இந்தப் படம் இயக்குநராக முதல் படம் அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு கிஃப்டட் ரைட்டர். கண்டிப்பாக அவருக்கு இது வெற்றி படமாக இருக்கும். ஜெயம் ரவி மிக மெச்சூர்டா நடித்திருக்கிறார். இந்த வருடம் எனக்கு நல்ல வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஒரு சிலர் மட்டும் தான் என்னிடம் மெலடி கேட்பார்கள். இந்த படத்தில் அந்த மாதிரி நல்ல பாடல்கள் வந்துள்ளது. கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் நன்றி.

இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேசியதாவது…

இந்தப் படம் எனக்கு கனவு மாதிரி. முதலில் ரூபன் என் காலேஜ் சீனியர். அவர் சொல்லி அனுப்பி தான் இரும்புத்திரை படத்தில் ரைட்டராக மாறினேன். பின்னர் இயக்குநராக வேண்டி அலைந்து கொண்டிருந்தேன். ரூபன் அண்ணா ஒரு நாள் ரவி சார் எப்படி இருப்பார் என்றார். உடனே அவரிடம் அனுப்பி வைத்தார், எல்லாமே நடந்தது. அவர் தான் சுஜாதா மேடத்திடமும் என்னை அறிமுகப்படுத்தினார். ரவி சாருக்கு கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்து உடனே ஆரம்பிக்கலாம் என்றார். ரவி சார் என்னை முழுமையாக நம்பினார். நடிக்கும் போது என்ன எடுத்தீர்கள் என்று கூட அவர் கேட்டதில்லை. அவர் வைத்த நம்பிக்கையை உடைத்துவிடக்கூடாது என்பது தான் எனக்கு முக்கியமாக இருந்தது. புது இயக்குநர்கள் பெரிய ஹீரோக்கு செய்யும் படம் ஜெயிக்க வேண்டும். அப்போது தான் இனி புது இயக்குநர்கள் பலர் வர முடியும். அழகம் பெருமாள் சாரை ஷீட்டிங்கு முதல் நாளில் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். கனி அண்ணனிடம் கதை சொன்ன போதே, இந்தக்கதை ஹிட்டுடா என்றார். இந்தக்கதையைத் தாங்கும் ஜெயம் ரவி இருக்கிறார், படம் ஜெயிக்கும் என்றார் நன்றி அண்ணா. ஜீவி அண்ணாவின் மெலடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும் தான் எனக்குத் தெரிந்த இசையமைப்பாளர், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். இந்தப்படத்திற்காக 20 ட்யூன் தந்துள்ளார். அவருக்கு நன்றி. செல்வா, வேறு வேறு களங்களில் படம் செய்தவர். இந்தப்படத்தை அவ்வளவு லைவ்வாக எடுத்துத் தந்தார். திலீப் மாஸ்டர் கதைக்குள்ளேயே யோசிப்பார், எனக்காக நிறையச் செய்தார். சுஜாதா மேடம் இந்தக்கதையை முழுசாக கேட்கவில்லை. ரவி சாருக்காக செய்தார். நானே காம்ப்ரமைஸ் செய்தாலும் அவர் செய்யவிட மாட்டார். ரொம்ப ரொம்ப நன்றி மேடம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே தங்கள் படம் போல வேலை செய்தார்கள். கீர்த்தி அற்புதமாக நடித்துள்ளார். அனுபமாவிற்கு முக்கியமான ரோல். தமிழில் இது அவங்களுக்கு முக்கியமான படமாக இருக்கும். மக்களிடம் கொண்டு போய் இப்படத்தைச் சேர்க்க உங்கள் உதவி முக்கியம். நன்றி.

நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது…

மிகச் சந்தோஷமான தருணம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம். இப்படம் ரிலீஸுக்கு வருகிறது. நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர் தான் அனுப்பி வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி. இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றியடையும். எப்போதும் எனக்கு அவர் ஃபேமிலி மாதிரி தான். இந்தப்படம் வேறு புரடியூசர் போகலாம் என்ற போது, சுஜாதா அம்மா விடவே இல்லை. கண்டிப்பாக நம்ம தான் பண்ணனும் என்று பிடிவாதமாக இருந்தார். ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும் , அந்த நம்பிக்கை அவரிடம் இருந்து ஆரம்பித்தது எனக்குச் சந்தோசம். இந்தப்படத்தில் எமோஷன் மிக முக்கியம், அதைத் திரையில் கொண்டுவருவது முக்கியம். ஜீவி தான் பண்ணனும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒத்துக்கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த மியூசிக் டைரக்டர்களில் ஒருத்தர் ஜீவி. இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி. கனி அண்ணனுக்கு இன்னும் ஒரு முக்கியமான பாத்திரம். நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துக்கள் சொல்பவர், அவரை அதற்கு நேர்மாறாக நடிக்க வைத்துள்ளோம். என்னப்போய் இப்படிப் பேச வைக்கிறீங்களே என்பார், ஆனால் எனக்காக நடிக்க வந்தார் அருமையாகச் செய்துள்ளார் நன்றி. அழகம் பெருமாள் சார் அடங்கமறு படத்தில் அவருடன் நடிக்க ஆரம்பித்தேன். அவருடனான ஜர்னி இன்னும் தொடர வேண்டும். இயக்குநரும் செல்வாவும் டிவின்ஸ் மாதிரி அத்தனை ஒற்றுமையாக இருப்பார்கள். அவர்கள் உழைப்பை மக்கள் பாராட்டுவார்கள். இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இன்னும் நிறைய மேடைகளில், வெற்றி மேடைகளில் அவரை நீங்கள் பார்ப்பீர்கள். நான் புது இயக்குநர்கள் கூட படம் செய்கிறேன் என்கிறார்கள். நான் ஒரு கருவி அவ்வளவு தான். இயக்குநரின் உழைப்பு தான் படம் வெற்றிபெறக் காரணம், இந்தப்படம் ரெண்டு ரோல் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். யோகிபாபு நானும் டிவின்ஸ் மாதிரி ஒன்னாவே இருந்தோம். கோமாளி படம் மாதிரி இந்தப்படத்திலும் அழகான டிராவல். மக்கள் ரசிப்பார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ரசியுங்கள்.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.