தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்வருக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.
பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று குறைத்தது. அதற்கு அடுத்த நாளே சட்டமன்றத்தை கூட்டிய முதல்- அமைச்சர், இவர்களை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் விடுதலை செய்வதாக அறிவித்தீர்கள். அன்று தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் முதல்-அமைச்சர் அம்மாவுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்கள்.
ஆனால் அந்த தீர்ப்புக்கு தடை வாங்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில் டிசம்பர் 2 அன்று வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு, குற்றவியல் நடைமுறை சட்டத்தை பயன்படுத்தும்பொழுது அது மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே விடுதலை செய்ய முடியும் என்று அறிவித்தது. ஆனால் அதே உச்சநீதிமன்ற அரசியல் அமர்வு மாநிலங்களுக்கு இருக்கும் அரசியல் அமைப்பு அதிகாரம் 161 அல்லது குடியரசு தலைவருக்கு உள்ள அதிகாரம் 72 ஆகிய கட்டற்ற அதிகாரங்களில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது என்றும் தெளிவாக விளக்கியுள்ளது.
இந்த நிலையில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய புலனாய்வு அதிகாரி தியாகராஜன் இன்று அந்த வாக்குமூலம் தவறானது என்று அறிக்கை கொடுத்திருப்பது நம் நாட்டில் இல்லாத நிகழ்வாக நடந்து இவர்களின் குற்றத்தன்மையின் மேல் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே இந்த வழக்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கருணையோடு அணுகி இவர்களின் கால் நூற்றாண்டு கால சிறைவாசத்தை கணக்கில் கொண்டு இவர்களின் அப்பழுக்கற்ற நன்னடத்தை ஆவணங்களையும் கணக்கில் கொண்டு மீதமுள்ள இவர்களின் ஆயுட்காலத்தை பயனுள்ள வகையில் செலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சங்கம் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.