இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் ‘VD18 ‘ படப்பிடிப்பு விறுவிறு!

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் ‘VD18 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘VD18’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘ஜவான்’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ.. திரைத்துறையில் தன்னுடைய உதவியாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக ஏ ஃபார் ஆப்பிள் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இந்நிறுவனம் சார்பில் ‘சங்கிலி புங்கிலி கதவை திற’ மற்றும் ‘அந்தகாரம்’ என இரண்டு திரைப்படங்களை தயாரித்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறார்.

இதனிடையே தமிழில் வெற்றிகரமான இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்த அட்லீ.. தற்போது இந்தி திரையுலகில் ஷாருக் கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கி, அங்கும் இயக்குநராக தன்னுடைய வெற்றியைத் தொடர்கிறார் என்பதும், தற்போது இந்தி திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராகி, அங்கும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.