விக்ரம் பிரபு ,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,விதார்த் ,அபர்ணதி ,ஸ்ரீ, சானியா ஐயப்பன், மனோபாலா, பசி சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். யுவராஜ் தயாளன் எழுதி இயக்கி உள்ளார். இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு கோகுல் பினாய்.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ளனர்.
மனோகர் மித்ரா தம்பதிகளில் மித்ரா குடும்ப நல உளவியல் ஆலோசகராக இருக்கிறார். ஆலோசனைக்கு வரும் தம்பதிகளிடம் நடந்து கொள்வது போல, சொந்தக் கணவரிடமும் எந்திரத்தினமாக நடந்து கொள்வதாக ஒரு பிரச்சினை.
ரங்கீஷ் -பவித்ரா தம்பதிகளில் மனைவி உடல் பருமனாக இருக்கிறார் என்று ஒரு பிரச்சினை.
அர்ஜுன் திவ்யா ஜோடிக்குள் ஒருவரை ஒருவர் குறை சொல்வதால் ஒருவரது திறமையை அங்கீகரிப்பதில் ஆணவச்சிக்கல் குறுக்கே வந்து விலகல் வருகிறது.
இப்படி மூன்று வெவ்வேறு புதுமணத் தம்பதிகளிடமும் மனவிலகல் நிலவி விரிசல்கள் ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கிறது . அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை அழகாகக் கூறியுள்ள படம் தான் ‘இறுகப்பற்று’.
இப்படி மூன்று பெரிய கேள்விக்குறிகளின் கதையாக எடுத்து சுவையான காட்சிகளாகவும் நகர்த்தி அழகான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
”கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு காரணம் தேவை இல்லை. கணவன் மனைவியாக இருப்பதே ஒரு காரணம் தான் ”என்று இயல்பான ஒரு வசனத்தின் மூலம் தொடங்குகிறது படம்.போகப் போக நம்மை உட்கவர்ந்து ஈர்த்துக் கொள்கிறது.
இன்று பணத்தை தேடி அவசர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் பணநிறைவு உள்ள அளவுக்கு மனநிறைவு இல்லை என்ற கசப்பான உண்மையை நல்லதொரு கதை மூலம் எடுத்துக்காட்டி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.வணிக மசாலாக்களுக்கு நடுவே இப்படி ஓர் அழகான- காலத்துக்குத் தேவையான கருத்துள்ள படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்தையும் பாராட்ட வேண்டும்.
படத்தில் மனோகராக வரும் விக்ரம் பிரபு தனது அடக்கமான நடிப்பால் நம்மைக் கவர்கிறார். மனோகரின் மனைவி மித்ராவாக வரும் ஷ்ரத்தா படத்தைப் பெரிதும் தாங்கிப் பிடிக்கும் பாத்திரத்தில் வந்து பிரமாதப்படுத்தியுள்ளார்.தனக்கு ஸ்கோர் செய்யக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் அருமையாகப் பயன்படுத்தியுள்ளார். சபாஷ். ரங்கீஷாக வரும் விதார்த் நடிப்பில் பல படிகள் மேலேறி உள்ளார்.பவித்ராவாக வந்து உடல் எடை கூட்டி அந்தப் பாத்திரத்தின் மதிப்பைக் கூட்டி அனுதாபத்தையும் அள்ளுகிறார் அபர்ணதி. அர்ஜுன் ஆக வரும் ஸ்ரீ, திவ்யாவாக வரும் சானியா ஐயப்பன் மட்டும் சளைத்தவர்களா என்ன? அவர்களும் தங்களது பாத்திர நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார்கள்.சில காட்சிகளில் வரும் மனோபாலா கூட மனதைத் தொடுகிறார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் கோகுல் பினாயின் ஒளிப்பதிவும் இயக்குநரின் இரு இறக்கைகளாகப் பயணித்துள்ளன.
மனித மனத்தின் பாவனைகளையும் அதன் வேஷங்களையும் முகமூடி கழற்றி சின்னச் சின்ன காட்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
நீண்ட நாட்களுக்குப் பின் ஓர் உணர்வு ரீதியான படத்தைப் பார்த்த திருப்தி.இப்படத்திற்காக இயக்குநரின் இரு கரங்களையும் இறுகப் பற்றிக் கைக்குலுக்கலாம். படக்குழுவினருக்குப் பாராட்டிப் பூங்கொத்து கொடுக்கலாம். தனக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர்களை, தன் மீது அன்பு காட்டுபவர்களை, சின்ன சின்ன குறைகளைப் பெரிதாக்கி அவர்களை விலக்கி வைத்து விடாதீர்கள்.விரிசலுக்கு வழி வகுத்து விடாதீர்கள். உண்மையான அன்பைப் புரிந்து கொண்டு அவர்களை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது படம்.
திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகப் போகிறவர்கள், குடும்பத்தினர் அனைவரும் இதை ஒரு முறை பார்த்து தங்கள் மன இயல்புகளை ஒருமுறை பரிசீலித்துக் கொள்ளலாம்.
.