காமன் மேன் மீடியா ‘காமன் மேன் ‘சதீஷ் ஏராளமான திரைப்படங்களுக்கு ஆன்லைன் மார்க்கெட்டிங் செய்து வருபவர் .இந்தப் பணியை அவர் சுமார் பத்தாண்டு காலமாகச் செய்து வருகிறார்.
வெறும் வியாபாரம் சந்தைப்படுத்தல் சார்ந்து அவரது ஆர்வம் நின்றுவிடவில்லை .படைப்பு சார்ந்த தாகமும் கொண்டவர் அவர்.
சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார் .இரண்டு குறும்படங்கள் இயக்கி இருக்கிறார் .முதல் குறும்படம் சர்வதேச கவனம் பெற்றது .25 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடைந்தது.
இரண்டாவது குறும்படம் ‘நொடிக்கு நொடி’ அண்மையில் மாநாடு படம் டைம் லூப் கதையால் பேசப்பட்டது. இப்படத்திற்கு முன்பே டைம் லூப் சார்ந்த கதையை வைத்து நொடிக்கு நொடி குறுப்படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தைப் பார்த்த பல திரையுலகப் பிரபலங்கள் இதை முழு நீளப்படமாக எடுக்கலாம் என்று கேட்டிருக்கிறார்கள். சரியான காலம் கனியட்டும் என்று அவசரப் படாமல் காத்திருக்கிறார் சதீஷ்.
இதற்கிடையில் ஒரு ஆல்பம் பாடல் உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
‘இவளைப் போல ‘எனும் தலைப்பில் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார். ஐந்து பேரை மட்டும் கொண்ட படக்குழுவை உருவாக்கிக்கொண்டு ஒரே நாளில் அந்தப் பாடலை எடுத்துள்ளார்கள். காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் அந்தப் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
நாயகியாக நடித்துள்ள அக்க்ஷிதா ரவீந்திரன் பாடலுக்கான நடனத்தையும் அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சிவராஜ் கேமராவுடன் ட்ரோன் கருவியையும் இயக்கி படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார் . பொறியாளன் படத்திற்கு இசையமைத்த ஜோன் தான் இதற்கும் இசையமைத்துள்ளார்.ஜி.பி. ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
இப்படி 5 பேர் கொண்ட குழுவே இந்தப்படத்தை முடித்துள்ளது .
இது எந்த அளவுக்குச் சிறப்பாக அமைந்துள்ளது என்றால் பல திரையுலகப் பிரபலங்கள் இதைக் தங்களது சமூக ஊடகத்தில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள் .
தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் முரளி, தாணு, ஜீ. வி .பிரகாஷ்குமார், நடிகர் விஷால், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இயக்குநர் கார்த்திக் ராஜு, சி.வி.குமார் போன்றவர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.
அவர்களின் ட்விட்டர் மூலம் அன்றைக்கு இந்தியாவின் டிரண்டிங்கில் சில மணி நேரம் நம்பர் ஒன் இடத்தில் இந்தச் செய்தி இடம் பெற்றது.
அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் பிரபலங்கள் சுரேஷ் , சனம், ஆரி போன்றவர்கள் தனியாக வாழ்த்து தெரிவித்துப் பேசி வீடியோ அனுப்பி உள்ளனர்.
ஆல்பம் பாடலை பார்த்த AP இன்டர்நேஷனல் வாங்கி வெளியிட்டு உள்ளனர். இப்படி திரையுலக பிரபலங்களைக் கவர்ந்த இந்தப் பாடல் இதுவரை 5 லட்சம் பேரை சென்றடைந்து இருக்கிறது.
“இதை சென்றடைய வைத்துள்ள பிரபலங்களுக்கு எனது மிகப்பெரிய நன்றி” என்கிறார் காமன்மேன் சதீஷ்.