ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது. இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது
கவின் -அபர்ணாதாஸ் நடித்துள்ள ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10, 2023 ல் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
படத்தில் இருந்து வெளியான ஹிட் பாடல்கள் மற்றும் அதன் காட்சிகள் அனைத்தும் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகமாக்கியுள்ளது. கவின் மீது ரசிகர்கள் மத்தியில் இருக்கக்கூடிய புகழ் குறிப்பாக பெண் பார்வையாளர்கள் மத்தியில் இருக்கக்கூடிய புகழ் இந்த படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிட இதன் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
படத்தின் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பேசியதாவது, “டாடா’ திரைப்படம் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். இந்தப் படத்தில் நிறைய குழந்தைகள் நடித்துள்ளனர். அதனால் இந்தப் படம் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் இருக்கும். ’டாடா’ உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் அம்பேத் குமார் சார் மற்றும் உதயநிதி சார் இருவருக்கும் நன்றி. எல்லாரும் இந்த படத்தைப் பார்த்து ஆதரவு தரவேண்டும்” என்றார்.
ஒளிப்பதிவாளர் எழில் அரசு பேசியதாவது, “’டாடா’ திரைப்படம் நடிகர்களுக்கு நடிப்பதற்கு இடம் கொடுத்துள்ள ஒரு கதை. எல்லாருமே தங்களது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். கவின் மற்றும் அபர்ணா மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர்”.
எடிட்டர் கதிரேஷ் அழகேசன், “கவின் மற்றும் அபர்ணா இருவருமே எமோஷனலாக தங்களது கதாபாத்திரத்துடன் இணைந்துவிட்டனர். இயக்குநர் கணேஷூடைய கதை சொல்லல் முறை எங்கள் அனைவரது வேலையையும் எளிதாக்கிவிட்டது. தயாரிப்பாளர் அம்பேத் குமார் சார் மற்றும் உதயநிதி சார் இருவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் ஹரிஷ் பேசியதாவது, “’முதல் நீ முடிவும் நீ’ படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு கவின் அண்ணா என்னுடைய பெயரை இயக்குநர் கணேஷ்ஷிடம் சொன்னார். கவின் ஒரு திறமையான நடிகர். இந்த மொத்தப் படத்திலும் நாங்கள் அனைவரும் நண்பர்களாக இணைந்தே வேலைப் பார்த்தோம். கவின் மற்றும் அபர்ணா இருவருமே தங்களது சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர். அவர்களது நடிப்புத்திறன் முற்றிலும் வேறாக இருந்தது”.
இயக்குநர் கணேஷ் கே பாபு பேசியதாவது, “கவின் மற்றும் அபர்ணா இருவருமே தங்களை முழுமையாக ஒப்படைத்து இந்தப் படத்தைக் கொடுத்துள்ளனர். இவர்கள் இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்தாலும் இவர்கள் அளவிற்கு நடித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். கவினுக்கு என்னுடைய நன்றி. தமிழ் சினிமாவில் 2023-ல் சிறந்த நடிகராக கவின் இருப்பார். அபர்ணா அவருடைய அறிமுகத்துக்காக நிறைய விருதுகள் வாங்குவார். பொதுவாக ரெட்ஜெயண்ட் மூவிஸ் அனைத்துப் படங்களையும் வாங்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் இதில் ஆர்வம் காட்டி வாங்கியதில் மகிழ்ச்சி. தயாரிப்பாளர் அம்பேத் குமார் சார் இந்தப் படத்தை முழுமையாக எடுத்து வந்ததற்கு அவருக்கு நன்றி”.
கதாநாயகி அபர்ணாதாஸ் பேசியதாவது, “கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ்ப் படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின்தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமால் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்றார்.
நடிகர் கவின் பேசியதாவது, ”நான்கு வருடங்களாக ‘டாடா’ படத்திற்காக நாங்கள் திட்டமிட்டோம். இத்தனை வருடங்களும் நாங்கள் இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்றுதான் உழைத்தோம். பிரதீப், பாலு நாங்கள் அனைவருமே கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் படத்தைக் கொண்டு வந்துள்ளது. எனக்குத் தெரிந்த பாபு இவ்வளவு மெச்சூர்டான கண்டெண்ட் யோசிப்பானா என்பது தெரியாது. எங்கள் கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் அம்பேத் சாருக்கு நன்றி. ஜென் மார்ட்டின் அருமையான இசையைக் கொடுத்துள்ளார். எழில் பிரதரும் சிறப்பான அவுட்புட்டைக் கொடுத்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்தை ஒத்துக் கொண்ட அபர்ணாதாஸூக்கு நன்றி. அபர்ணாவை நான் முதன்முதலில் ‘பீஸ்ட்’ செட்டில்தான் பார்த்தேன். கதை மேல் இருந்த நம்பிக்கை அவர் மேலேயும் இருந்தது. சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார். படத்தில் நடித்துள்ள என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஹரிஷ் கதாபாத்திரம் அனைவராலும் கவனிக்கப்பட்டு நிச்சயம் பாராட்டப்படும். விடிவி சார் போர்ஷன்ஸ் அனைவராலும் ரசிக்கப்படும். ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. ’டாடா’ திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டும்”.