எந்தவித திறமைசாலிகளும் பல தடைகளையும் இடையூறுகளையும் கலந்துதான் மேலே வரவேண்டியுள்ளது .குறிப்பாக விளையாட்டுத் துறையில் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு எதிராக நடக்கும் அரசியலையும் மேட்டிமை வர்க்க ஆதிக்கத்தையும் பேசும் படம் ‘ எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ இப்படத்தை ஹரி உத்ரா இயக்கியுள்ளார்.
கிராமத்தில் சாதிக்கத் துடிக்கும் உண்மையான திறமைசாலி விளையாட்டு வீரர்களுக்கு மேலே செல்ல, தடை போடுகிற அதிகார வர்க்கத்தினரை துடிப்பான வீரர்கள் ஆவேசமாக எதிர்கொண்டு என்ன மாதிரியான பாடம் கொடுக்கிறார்கள் என்பது தான்
‘எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’
படத்தின் கதைக்களம்.
இக்கதைக்குள் காதல், வன்மம், பழிவாங்கல், சாதி, ஏற்றத்தாழ்வுகள் என்று கலந்து கொடுத்துள்ளார்கள்.
தான் ஒரு பெரிய வீரராக முயன்றும் சதிகளால் அது முடியாமல் போன அந்தப் பயிற்சியாளர் அவ்வூரில் ஆர்வமுள்ள கால்பந்தாட்ட வீரர்களுக்கு முறையான பயிற்சியளிக்கிறார். முறைப்படுத்திப் போட்டிகளில் பங்கேற்க வைக்கிறார். ஆனால் தகுதி இருந்தும்
மேல்நிலைப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
தாங்கள் தான் ஜெயிக்கவும் சாதிக்கவும் பிறந்தவர்கள் என்கிற அதிகார மேட்டிமைக் குண கொண்ட சிலர் தடைக்கல்லாக எதிரே நிற்கிறார்கள்.
அவர்களுக்கெதிராக என்ன செய்ய முடியும் என யோசிக்கும் திறமைசாலிகள் எடுக்கும் முடிவும் அதன் விளைவுகளுமே படத்தின் திரைக்கதைப் பயணம்.
நாயகனாக சரத் நடித்துள்ளார். சினிமா நாயகனுக்காக எந்த விதமான பகட்டும் அலங்காரமும் இல்லாத முகம். உள்ளம் கொதிக்கும் கோபத்தை மூக்குக் கண்ணாடி முகம் வழியே வெளிப்படுத்துகிறார்.
நாயகி ஐராவிடம் இளமை, அழகு கலந்த தோற்றம்.
கதையோட்டத்துக்கு ஏற்ற வெளிப்பட்டுள்ளது நடிப்பு.‘தாக்கு தாக்கு தாக்குறா’ பாடலுக்கு உற்சாக நடனமாடியுள்ளார்.
கால்பந்தாட்ட பயிற்சியாளராக ‘அருவி’ மதன். காலில் ஊனம், பேச்சில் திக்கல், ஆனாலும், அவர் தரும் பயிற்சி முயற்சிகள் சிறப்பு .தேர்ந்த நடிப்பு.
ஒரு காட்சியில் வருகிறார் சோனா .அந்த அலட்டல் நடிப்பு காட்சிக்குப் பொருத்தம்.
அந்த கிராமத்தின் அதிகார வர்க்க ஆளாக ரத்தினமாக வருகிறார் நரேன். முடிந்த வில்லத்தனத்தை செய்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக, வில்லனின் அடியாளாக வரும் முத்துவின் நடிப்பு பளிச் .
கஞ்சா கருப்புக்கு உணர்வுபூர்வமாக நடிப்பதற்கான வாய்ப்பு. அதைச் சரியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.
கால்பந்தாட்ட வீரர்களாக வருகிற இளையா போன்ற இளைஞர்கள், தேர்வுக் குழு கஜராஜ், அவரது உதவியாளராக இயக்குநர் ராசி அழகப்பன் என அத்தனைப் பேரின் தோற்றமும் நடிப்பும் படத்தின் பலம்.
நாயகன் நாயகி காதல் சினிமாவுக்கான தேவையாக இணைந்துள்ளது. அதில் இன்னும் கொஞ்சம் உணர்வோட்டம் இருந்திருக்கலாம்.
இசையும், ஒளிப்பதிவும் காட்சிகளின் நகர்வுகளுக்கு வேகமூட்ட முயற்சித்திருக்கின்றன.
மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சார தொனி கூறுமுறை படத்துடன் ஒன்றுவதற்குத் தடையாக உள்ளது.
எதிர்த்துப் போராடுங்கள் என்று கூறுவதை விடுத்து, எதிரியை கொலை செய்ய வேண்டும் என்பது சரியா?
அடுத்து இது தான் நடக்கும் என்று கதையை நம்மை முன்கூட்டியே யூகிக்க முடிவது படத்தின் பலவீனம்.
நோக்கத்தில் குறை சொல்ல ஏதுமில்லை என்றாலும் சினிமா உருவாக்கத்தில் பலவீனப்பட்டு உள்ளது படம்.
திறமைசாலிகளின் வாழ்க்கை போராட்டத்தைக் காட்டியதற்காக இயக்குநர் ஹரி உத்ராவைப் பாராட்டலாம்.