மறைந்த பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு நடிகர் புகழஞ்சலி செலுத்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
பால முரளி கிருஷ்ணா அவர்களைக் கர்நாடக சங்கீதத்தில் ஒரு பீஷ்மர் என்று சொல்லலாம் .அகில இந்திய அளவில் மத்திய அரசு வழங்கிய பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். அப்படிப்பட்ட மனிதர் எல்லாம் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள். ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் ஏ.பி..நாகராஜன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ‘திருவிளையாடல் ‘ படத்தில் டி.எஸ். பாலையா அவர்களுக்கு ‘ஒரு நாள் போதுமா ? இன்று ஒரு நாள் போதுமா?’ என்ற பாடலைப் பாடினார். அந்தப் படம் வெற்றிப் படமாக ஓடியதற்கு அந்த பாடல் 25% சதவிகிதம் காரணமாக அமைந்தது .ஏனென்றால் அவரது மாறுபட்ட குரலும் மேலும் டி.எஸ்.பாலையா வின் நடிப்பும் அப்படி அமைந்து இருந்தன. அதன் பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் இளையராஜா இசையில் ‘கவிக்குயில் ‘ படத்தில் எனக்காக அவர் பாடினார் .சிக்மகளூர் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணர் ,ராதா வேடத்தில் நடித்தோம் . அவர் பாடிய அந்த ‘சின்ன கண்ணன் அழைக்கிறான் ‘ என்கிற பாடலுக்கான காட்சிகள் எடுத்தோம். அந்தப் பாடல் தமிழ்சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத பாடல்.
அன்று அந்த மாமனிதர் எனக்காகப் பாடினார் . அதை என்னால் என்றுமே மறக்க முடியாது. அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.