என்னை மாதிரி நீங்கள் இருந்து விடாதீர்கள் என்று இயக்குநர் டி. ராஜேந்தர் திரையுலகினருக்கு ஒரு படவிழாவில் ஆதங்கமான அறிவுரை கூறினார். இது பற்றிய விவரம் வருமாறு:
ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்துள்ள படம் ‘போக்கிரிராஜா’ ..இப்படத்தை பி.டி.எஸ். பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார். ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.
டி.இமான் இசையில் இப்படத்தின் ‘அத்துவுட்டா’ என்கிற சிங்கிள் ட்ராக் பாடல் பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று வெளியிடப் பட்டது. .பாடலை இயக்குநர் டி.ராஜேந்தர் வெளியிட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார்.
பாடலை வெளியிட்டு விட்டு டி.ராஜேந்தர் பேசும் போது.
” நான் ‘புலி’ படத்தின் விழாவுக்குப் பிறகு சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை. பேசுவதில்லை என்று இருந்தேன்.எனக்கு ஒரு ஆதங்கம் இருந்தது.
அந்த விழாவில் நான் புலியை அப்படி அடுக்கி வர்ணித்ததை பல லட்சம் பேர் பார்த்தார்கள். பாராட்டினார்கள். ஆனால் சில டிவிகளில் விமர்சித்தார்கள். அவர்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். புலி பற்றி அவ்வளவு நான் பேசக் காரணம் ஈழத்தமிழர்களின் ஆதரவாளன் நான்.
நான் சிறு சேமிப்புத் துறையில் அமைச்சர் போல நல்ல பதவியில் இருந்த போது ஈழத்தமிழர்களுக்காக பதவியை உதறியவன். புலிப் பேச்சை பலரும் விமர்சித்ததும் மன உளைச்சலுக்கு ஆளானேன். யாரை கிண்டல் செய்ய வில்லை? கடவுளையே கிண்டல் செய்ய வில்லையா?’ நான் ஒன்றுமே இல்லை.
வாலு’ படத்துக்கு பிரச்சினை வந்த போது உதவியது விஜய் மட்டும்தான் அவர் செல்வகுமாரை தூதராக அனுப்பி உதவினார்.அப்போது உதவிய ஒரே இதயம் அவர் மட்டும் தான்.’புலி’ படப் பிரச்சினையில் ‘உடுக்கை இழந்தவன் கை போல’ நட்புக்காக உதவினேன். நட்புக்கு உதவுவது தவறா? இந்த சினிமாவில் நன்றி மறப்பவர்கள் அதிகம். ‘புலி’ வெளியீட்டுக்காக நான் போராடினேன். சண்டை போட்டேன்.
‘புலி’ வெளிவர நான் உதவினேன் என்று செல்வகுமாரை விட சிபுதமீன்ஸ் சொன்னதில் மகிழ்ச்சி. ஏனென்றால் சினிமாவில் நன்றி மறந்தவர்கள் அதிகம்.
இன்று அடுக்கு மொழியில் பேச வரவில்லை.இன்று நல்ல தமிழை கேட்க ஆளில்லை. அன்று நான்’இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் ,இது மேற்கில் தோன்றும் உதயம்’ என்று எழுதினேன். அன்று தமிழை ரசித்தார்கள். தமிழ் தெரிந்தது.
இன்று ‘உடுக்கை இழந்தவன் கை போல’ என்று வள்ளுவர் சொன்னதைக் கூட தெரியாதவன் இருக்கிறான். நான் கதை, திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு பாடல்கள்,இசை ,எடிட்டிங் டைரக்ஷன் எல்லாம் செய்தவன். இன்று ஒரு பீப் பாடலால் ஏகப்பட்ட பிரச்சினைகள்.ஒரு தந்தையாக எல்லாவற்றையும் மீறி வந்து கொண்டிருக்கிறேன்.இந்த சினிமாவில் நன்றி மறப்பவர்கள் அதிகம் அதனால்தான் இன்று கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.என்ன இருந்தாலும் இன்று கஷ்டபட்டுக் கொண்டு இருக்கிறேன். நீங்களும் என்னை மாதிரி சினிமாவில் இருந்து விடாதீர்கள்.கஷ்டபடுவீர்கள்.’
இப்படத்தில் நடித்துள்ள ஜீவா ,சிபிராஜ் இருவருமே நல்ல பிள்ளைகள். காரணம் அவர்கள் அப்பாக்களை எனக்குப்பிடிக்கும்.இந்த ஹன்சிகா நல்ல நடிகை. எனக்காக ‘வாலு’ படத்துக்கு எதுவும் வாங்காமல் ஒரு பாடலில் நடித்தார்.”
என்று கூறியவர் படக்குழுவினரை வாழ்த்தினார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது ” தயாரிப்பாளர் செல்வகுமாரின்ஒவ்வொரு முன்னேற்றத்தையும் கவனித்து வருகிறேன். நானும் விஜய்யும் வளரக் காரணமாக இருந்திருக்கிறார். எங்கள் வளர்ச்சியில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு.
என் கூட இருப்பவர்கள் உயர வேண்டும் என்று நினைப்பவன் நான். என் கூட இருப்பவர்கள் மேலே, வந்தால் மகிழ்ச்சி.இங்கே வந்திருக்கும் டி.ராஜேந்தர் போராட்ட குணம் உள்ளவர். நானும் அப்படித்தான். ‘புலி’ படத்தின் போதும் சிரமங்கள் வந்தது.ஜீவா ஆறுதலாக இருந்தார்.
வெற்றி வரும் போது எல்லாரும் வருவார்கள். துவண்டு இருக்கும் போது தூக்கி விடுபவன் கடவுளுக்கு சமமானவன். அப்படி வந்த ஜீவாவுக்கு நன்றி. ஜீவாவின் நல்ல மனசுக்கு இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். உங்களிடம் ஃபயர் இருக்கிறது. உழைத்தால் உயரலாம். நான் படிக்காதவன்தான். ஆனால் உழைப்பேன். இன்று வருகிற இளம் இயக்குநர்களைக் கண்டு மலைத்துப் போகிறேன். புது கோணத்தில் சிந்திக்கிறார்கள். இந்த இளைஞர்களோடு நானும் ஓட வேண்டும். என்னை உதவியாளர்களாக வைத்துக் கொள்ளுங்கள். ” என்று கூறி வாழ்த்தினார் .
தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும் போது” ஒரு படம் எடுக்க, சொன்னபடி எடுக்கும் இயக்குநர் முக்கியம். கதாநாயகன் முக்கியம். எனக்கு இரண்டும் சரியாக அமைந்தது.என்னை விஜய் தயாரிப்பாளர் ஆக்கினார். சோர்ந்திருந்த போது தூக்கிவிட்டவர் ஜீவா.
புலி படத்தின் போது பிரச்சினை வந்தது.
அப்போது 2 கோடி ரூபாய்க்கு பத்திரத்தைக் கொடுத்து படம் எடுங்க என்றார் ஜீவா.. நான் கண்கலங்கி விட்டேன். இப்படிக் கூட ஹீரோக்கள் இருப்பார்களா? என்று ஆச்சரியப் பட்டேன். ‘புலி’ வெளிவரும் முதல்நாள் எங்களை கைது செய்து விட்டார்கள். அடுத்த நாள் படம் வெளியாகுமா எனத் தெரியாது. அப்போது டி.ஆர். வந்து போராடினார். ‘புலி’ திரைக்குவரக் காரணம் நண்பர் டி.ஆர் தான்” என்றார்.
இசையமைப்பாளர் டி, இமான் பேசும் போது” இந்த ‘அத்துவுட்டா’ பாடலை நம்மால் பாட முடியுமா என தயக்கம். பாடிய போது கரகரப்பான குரல் வேண்டும். பலமுறை பயிற்சி செய்தேன். தொண்டை கட்டிக் கொண்டது. மதியம் 2 மணி முதல் இரவு 9.30வரை எடுத்தேன். வீட்டுக்குப் போனால் குரல் கம்மி விட்டது. குரல்வரவில்லை. தொண்டையிலிருந்து ரத்தம் வந்தது. வீட்டில் பயந்து விட்டார்கள்.” என்றார்.
சிபிராஜ் பேசும் போது-” இமான் எனக்கு பள்ளிப் பருவத்திலிருந்து பழக்கம். அவர் இசைக் குழுவுக்கு என்னை இசைக்கருவிகளைத் தூக்க வைத்திருக்கிறார். இயக்குநர் கதை சொன்ன போது இப்படி எல்லாம் கதை செய்யமுடியுமா என வியந்தேன். படப்பிடிப்பு அனுபவம் பிக்னிக் போனது போல இருந்தது.ஜீவாவும் நானும் நல்ல நண்பர்களாகி விட்டோம்..”என்றார்.
ஜீவா பேசும் போது ” இது என் 25 வது படம். இது நான் எதிர்பாராதது. நான் கதை கேட்கும் மனநிலையில் இல்லாத போது கதை சொன்னார் இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பா. என்னடா கதை என்று அலுப்புடன்தான் கேட்க ஆரம்பித்தேன். முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை சிரிக்க வைத்தார்.
சினிமாவில் படக்குழுவில் உள்ள 120 பேரையும் ஒரே குடும்பமாகத்தான் நான் பார்க்கிறேன். நானும் சிபியும் ஒன்றாகவே வளர்ந்தோம். இது ஒரு மகிழ்ச்சியான படக்குழு. இமானுடன் ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தில் இணைந்தேன். என்னை அதில் ‘வாடா பையா வாடா பையா’ பாடலுக்கு முழுமையாக ஆடவைத்தார். இதிலும் இணைந்துள்ளது மகிழ்ச்சி.” என்றார்.
ஹன்சிகா பேசும் போது ” இது ஜாலியான டீம்.. படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாதது. நன்றி. ” என்றார்.
இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசும் போது
” படம்பற்றி நானே பேசக்கூடாது. ஒரு பாடலுக்கே இவ்வளவு பெரிய விழாவாகிவிட்டது. தயாரிப்பாளர் பெரிய அளவில் கொண்டு போய்விட்டார்.
படப்பிடிப்பின் போது எஸ்.ஏ.சி. போல காலை 7மணிக்கே முதல் ஷாட் வைக்கச் சொல்வார் .நினைத்தது போல நடிகர்கள் கிடைப்பது சிரமம் எனக்கு கிடைத்தார்கள். உதவி இயக்குநர்களை பிழிந்து வேலை வாங்கி இருக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். ” என்றார்.
நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் ஆஞ்ச நேயலு, பாடலாசிரியர் விவேக், விநியோகஸ்தர் காஸ்மோ சிவகுமார், ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவிஅரசு , தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ், வசனகர்த்தா ஞானகிரி, கலை இயக்குநர் வனராஜா ஆகியோரும் பேசினார்கள். நிகழ்ச்சியை ‘ஆதித்யா டிவி’ ஆதவன் தொகுத்து வழங்கினார்.