பெங்குயின் பதிப்பகம், ஆர்.கண்ணன் எழுதியிருக்கும் “எம்ஜிஆர் எ லைஃப் “என்கிற புத்தகத்தை பதிப்பித்திருக்கிறது. மெட்ராஸ் புக் கிளப் மற்றும் பெங்குயின் பதிப்பகம் இணைந்து நடத்திய இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பெற்றுக் கொண்டார்.
”சிறு வயதில் இருந்து திராவிட இயக்கங்களில் இருக்கும் கண்ணன், எம்ஜிஆர் பற்றிய புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஐநா சபையில் இருந்தவர் இந்த கண்ணன். 7 வருடங்கள் உழைத்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். எம்ஜிஆரின் இளம் வயது, சினிமா, அரசியல், ஆட்சி, அவரின் மாமனிதர் இமேஜ், பெரியார், அண்ணா, கலைஞர், சிவாஜி, கலைவாணர், ஜெயலலிதா ஆகியோருடனான உறவு குறித்தும் இந்த புத்தகத்தில் சிறப்பாக எழுதியிருக்கிறார். ஜல்லிக்கட்டு போன்ற ஒரு மாபெரும் இயக்கம் நடந்து முடிந்த வேளையில் இந்த புத்தகம் வெளியாவது சரியாக இருக்கிறது ‘என்றார் பெங்குயின் எடிட்டர் காமினி மகாதேவன்.
”வட இந்தியாவில் புத்தக வெளியீட்டு விழாக்களில் இந்த மாதிரி ஒரு கூட்டத்தை நான் கண்டதில்லை. சென்னை மிகச்சிறந்த இடம், நான் பாலக்காட்டில் பிறந்த மலையாளி என்றாலும் என் அம்மா 15 ஆண்டுகள் கோயமுத்தூரில் வசித்தவர் என்பதால் எனக்கு தமிழ்நாடு மிகவும் பரிச்சயம். எம்ஜிஆரும் என் ஊரான பாலக்காட்டை சேர்ந்தவர் தான் என்பது கூடுதல் தகவல். சிறு வயதில் எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக இருந்தேன், என் சகோதரர்களோடு சேர்ந்து பல எம்ஜிஆர் படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்.
எம்ஜிஆர் தான் அரசியலில் சாதித்த முதல் சினிமா சூப்பர் ஸ்டார். எம்ஜிஆர் “1” என்றால் அவரை சுற்றி இருந்தவர்கள் “0”. அவரால் தான் மற்றவர்களுக்கு மதிப்பு. தமிழ்நாட்டில் தேசிய கட்சிக்கும், மாநில கட்சிக்கும் இருந்த அரசியல் போட்டியை, மாநில கட்சிக்கும் மாநில கட்சிக்கும் இடையேயான போட்டியாக மற்றியவர் எம்ஜிஆர் தான். எம்ஜிஆரும் ஒரு காங்கிரஸ்காரர் தான். 1967ல் எம்ஜிஆர் குண்டடிபட்ட புகைப்படம் அந்த தேர்தலில் பெரும் பங்காற்றியது.
எம்ஜிஆரின் புகழால் அண்ணா கவரப்பட்டார். எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு எம்ஜிஆர் கிங் மேக்கராக மாறினார். எம்ஜிஆரின் வறுமை, இமேஜ் பற்றி எல்லாம் கண்ணன் எழுதியிருக்கிறார். நடிக்க ஆசைப்பட்டு வந்தவரல்ல எம்ஜிஆர், வறுமையினால் தான் நடிக்க வந்தார். சமூகத்துக்கு தாராளமாக நிறைய உதவிகளை செய்ததையும், ஜெயலலிதாவோடு அவருக்கு இருந்த உறவை பற்றியும் எழுதியுள்ளார் கண்ணன். காமராஜரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியது அவர் செய்த மகத்தான சாதனைகளில் ஒன்று. பசியோடு இருக்கும் குழந்தைகளால் எப்படி நன்றாக படிக்க முடியும் என்று உணர்ந்திருந்தார். அவரை வியக்கிறேன், அவர் வாழ்க்கை எனக்கும் உந்துதலாக இருக்கிறது.
மற்ற தலைவர்களை பற்றிய புத்தகங்களையும் எழுதி வெளியிட வேண்டும் என்று பதிப்பகத்தாரையும், கண்ணனையும் கேட்டுக் கொள்கிறேன். பொது வாழ்வுக்கு வந்தாலும் கண்ணன் புத்தகம் எழுதுவதை விடக்கூடாது ‘என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்.
”எம்ஜிஆரை பற்றி எழுதியது போல காமராஜர், அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, ஆகியோரின் வாழ்க்கையையும் புத்தகமாக எழுத வேண்டும். பெரியாரின் புத்தகத்தை யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். புத்தகம் எழுதும் வரலாற்று ஆய்வாளர்கள் தாங்களாகவே ஜட்ஜ் செய்து எழுதக்கூடாது. திமுகவை ஒரு தலைவர் கூத்தாடி கட்சி என்றெல்லாம் விமர்சனம் செய்தார். திராவிட இயக்கத்தை ஒரு போதும் குறைத்து மதிப்பிட கூடாது. 1967ல் நிரந்தர ஆட்சியான கங்கிரஸை கீழிறக்கி, நிரந்தரமாக ஆட்சி அமைத்தது திராவிட கட்சிகள்.
காமராஜர் மீது பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் ஆகியோர் பெரிதும் மரியாதை வைத்திருந்தனர். எம்ஜிஆர் மறைந்த பிறகு அந்த அரசியல் நாகரிகம் முற்றிலும் மறைந்து போய் விட்டது. ஒரு முறை ஜேப்பியார் எம்ஜிஆருடன் காரில் போய்க் கொண்டிருந்தபோது, கருணாநிதி என சொல்லி பேசியதால் கோபப்பட்டு அந்த இடத்திலேயே அவரை இறக்கி விட்டு போனார் எம்ஜிஆர். அந்த அளவு நண்பர் மேல் மதிப்பு வைத்திருந்தவர் எம்ஜிஆர். அதே மாதிரி எம்ஜிஆர் மறைந்த போது முதல் ஆளாக, தனியாக போய் இறுதி மரியாதை செலுத்தினார் கலைஞர்.
எம்ஜிஆர் திராவிட இயக்கங்களில் உழைத்து வளர்ந்து ஆட்சியை பிடித்தவர். வானத்தில் இருந்து குதித்து அரசியலில் ஜெயித்து விடலாம் என நினைத்து இனி அரசியலுக்கு வருபவர்கள் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார் ‘இந்து’ ராம்.
”புத்தக வெளியீட்டு விழாவில் வெறும் 100, 200 பேர் தான் வழக்கமாக இருப்பார்கள். ஆனால் இங்கு நிறைய பேர் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என சொன்னார் சசி தரூர். இது தமிழ்நாடு, அப்படி தான் இருக்கும். எம்ஜிஆரின் தொடக்கம், சினிமா பயணம், அரசியல், இறுதிகாலம் வரை எம்ஜிஆர் பற்றி மட்டுமல்லாமல் அவருடன் பயணித்தவர்களை பற்றி எல்லாம் சிறப்பாக எழுதியிருக்கிறார். அவருடன் பயணித்தவர்களுக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் எழுதியிருக்கிறார். காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி என சொன்னபோது அவரை நீக்க சொல்லி திமுகவில் போராட்டம் வெடித்தது.
அவர் நடித்துக் கொண்டிருந்த போது 8 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் எம்ஜிஆர். ராஜா மாதிரி வாழ்ந்தவர். அவர் ஊழல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். கொடுப்பதில் இன்பம் கண்டவர். நாகப்பட்டினம் புயல், மழையில் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்க நீரில் இறங்கி நடந்து சென்று என்ன வேண்டும் என்று கேட்டதற்கு அவரை பார்த்ததே போதும் என்றனர் மக்கள். அவரை மக்கள் எப்போதும் எம்ஜிஆர், வாத்தியார் என்று சொல்லியே கோஷம் போட்டனர்.
1989ல் ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் முதலமைச்சராக வருவதற்கு முக்கிய காரணம் காங்கிரஸின் ராஜீவ் காந்தியுடன் அவர் அமைத்த வலுவான கூட்டணி தான். காங்கிரஸை குறைத்து மதிப்பிட வேண்டாம். 40 ஆண்டு கால எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல, 50 ஆண்டுகால தமிழக அரசியலைப் பற்றிய புத்தகமாகவும் இது அமைந்திருக்கிறது ”என்றார் திருநாவுக்கரசர்.
”ஏவிஎம்மிடம் 50 ஆயிரம் கடன் வாங்கி தான் முதன் முதலாக நாடோடி மன்னன் படத்தை எடுத்தார். லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்தார், ஆனாலும் தனக்கென சொத்து சேர்த்தது இல்லை. இந்திய சீனப் போருக்கு 75 ஆயிரம் கொடுத்து உதவினார், அதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் ஜவஹர்லால் நேரு நமது எம்ஜிஆருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயமும், அந்த கடிதத்தையும் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கண்ணன். அண்ணா மீது எம்ஜிஆருக்கு கோபம் வந்திருக்கிறதே தவிர, எம்ஜிஆர் மீது அண்ணா கோபப்பட்டதே இல்லை. காமராஜரிடம் எம்ஜிஆர் மலையாளிகளை தான் உடன் வைத்துக் கொள்வார் என யாரோ சொல்லியிருக்கிறார்கள். எம்ஜிஆருக்கு மலையாளம் பேசினாலே பிடிக்காது. அப்படி யாரையும் அவர் சேர்த்துக் கொண்டதும் இல்லை
நாடோடி மன்னன் படத்திலேயே திராவிட இயக்கம் ஆட்சி வந்தால் என்ன செய்வோம் என்பதை சொல்லியிருக்கிறார். 1967ல் விருதுநகரில் காமராஜர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே சீனிவாசன் என்ற மாணவரை நிறுத்தினார் அண்ணா. அந்த நேரத்தில் தான் எம்ஜிஆர் கழுத்தில் குண்டடி பட்ட புகைப்படங்களை வெளியிட்டோம்.
பல நேரங்களில் திமுகவை எம்ஜிஆர் கட்சி என்றே சொல்வார்கள். எம்ஜிஆர் கட்சி என்று சொல்வது நமக்கு தான் பெருமை என சொன்னவர் அண்ணா. பல உதவிகளை ஓடி ஓடி செய்தவர், அது திமுகவின் வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக அமைந்தது. எம்ஜிஆர் மறைந்தாலும் எம்ஜிஆரின் புகழை அழிக்க யாராலும் முடியாது” என்றார் ஆர்எம்வீரப்பன்.
விழாவில் மெட்ராஸ் புக் கிளப் சார்பில் முத்தையா நன்றியுரை வழங்கினார்.