‘எம்புரான்’ திரைப்பட விமர்சனம்

மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், அபிமன்யு சிங், சானியா ஐயப்பன்,கிஷோர், இயக்குநர் பாசில், சச்சின் கெடேக்கர், நந்து,சுராஜ் வெஞ்சர மூடு நடித்துள்ளனர். பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். இசை தீபக் தேவ்,தயாரிப்பு ஆசிர்வாத் சினிமாஸ், கோகுலம் மூவிஸ்,லைகா ப்ரொடக்‌ஷன்ஸ்.

ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் தொடர்ச்சியாக, பெயரளவுக்காக இல்லாமல் உண்மையிலேயே கதையின் தொடர்ச்சியாகவும் உருவாகியுள்ள படம் தான் ‘எம்புரான்’.

கோளாவில் மக்களிடம் மரியாதை பெற்றுள்ள தலைவராக இருந்து நல்லாட்சி நடத்திய முதல்வர் பி.கே.ஆர் எனப்படும் பிகே ராம் தாஸ் இறக்கிறார். அவர் மறைவுக்குப் பிறகு மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றைத் தீர்த்து வைக்கும் மோகன்லால், முதல்வரின் மகன் டோவினோ தாமஸை புதிய முதல்வராக்கிவிட்டு கேரளாவில் இருந்து வெளியேறுகிறார். அந்த அளவில் ‘லூசிஃபர்’ முதல் பாகம் முடிவடைந்திருக்கும்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்துள்ளது எம்பிரான். இதில், மோகன்லால் மூலம் முதல்வரான டோவினோ தாமஸ், மதவெறி அரசியல் தேசியக் கட்சி ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்.அதிகார துஷ்பிரயோகங்கள் செய்கிறார். அதனால் மீண்டும் கேரள அரசியலில் குழப்பம் விளைகிறது.அது மட்டுமல்ல மாநிலத்தின் கலாச்சாரத்திற்கே ஆபத்துவரும் சூழல் ஏற்படுகிறது.காணாமல் போய்விட்டார், இறந்து போய்விட்டார் என்று பேசப்பட்ட மோகன்லால் மீண்டும் கேரளா வருகிறார். அவர் தனது அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சினைகளை எப்படித் தீர்த்து வைக்கிறார்?அவர் இத்தனை நாள் எங்கே இருந்தார்? அவரது நிழல் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதையும் விரிவாகச் சொல்வதுதான் ‘எல்2 : எம்புரான்’.

முதல் பாகத்தில் பிரதேச நலன் பேசி மாநில அரசியல் பேசிய இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், இந்த இரண்டாம் பாகத்தில் தேசிய அரசியல் பேசுகிறார். மாநிலங்களை ஆக்கிரமிக்கத் துடிக்கும் காவிக் கூட்டத்தின் சூழ்ச்சிகளை படையெடுப்புகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்.இப்படத்தை ஒரு அகில இந்தியப் படமாக நவீன தொழில்நுட்பம் கொடி கட்டிப் பறக்கும் படமாக உருவாக்கி உள்ளார்.

குரேஸி ஆப்ராம் என்கிற ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்லாலுக்கு பெரிய அளவில் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், அவரது தோற்றமே அனைத்தையும் ஈடு செய்கிறது.

முதல் பாகத்தில் மோகன்லாலின் விசுவாசியாக,சேவகனாக சில சண்டைக்காட்சிகளில் வந்த பிரித்விராஜ் சையத் மசூத் ரசூல் என்ற கதாபாத்திரம் மூலம் பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாகப் பதிகிறார்.மஞ்சு வாரியர் தனது தோற்றத்தின் மூலமே அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுகிறார்.

டோவினோ தாமஸ், அபிமன்யு சிங், இந்திரஜித் சுகுமாரன், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வுகள்.தங்களது வேலையைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், ஒவ்வொரு வினாடியையும் பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என கடுமையாக உழைத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் வெளிநாட்டு காட்சிகளை கையாண்ட விதம் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

இசையமைப்பாளர் தீபக் தேவின் பின்னணி இசை வழக்கமான வாத்திய சேரமானங்களின் இசையாக இல்லாமல் புதுமையாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளது.

179 நிமிடப் படமாக இருந்தாலும் படம் தொய்வின்றி  காட்சிகளை நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன்.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தோடு தொடங்கும் கதையை, ‘லூசிஃபர்’-ன் தொடர்ச்சியாக கையாண்ட விதம், மோகன்லாலின் நிழல் உலகத்தையும், அதன் நடவடிக்கைகளையும் காட்சிப்படுத்திய விதம் மற்றும் கதாபாத்திரங்களை கையாண்ட விதம் என படம் முழுவதையும் மிக பிரமாண்டமாக கையாண்டிருக்கும் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன், தற்போதைய கேரள அரசியல் மற்றும் தேசிய அரசியலையும், மத பிரச்சனைகளையும் மிக சாமர்த்தியமாக கையாண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

கதை கேரளா, மும்பை, ஆப்கானிஸ்தான், ஈராக், பிரான்ஸ் ,லண்டன் என்று சிறகடித்துப் பறக்கிறது.அதற்கான படப்பிடிப்பு இடங்கள் மிரள வைக்கின்றன.

முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் இரண்டாம் பாகத்தை பான் இந்திய கதையாகவும், சர்வதேச தரத்திலும் சொல்ல முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

மொத்தத்தில், ‘எல்2: எம்புரான்’ மலையாள வாசனையுடன் ஓர் அகில இந்தியப் படம்.