‘தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கம்’ தனது பொன் விழாவைக் கொண்டாட இருக்கிறது.
இதற்கான அறிவிப்புக் கூட்டம் இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கம் 4 பிரேம்ஸ் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் தலைவரான டைமண்ட் பாபு, செயலாளரான பெருதுளசி பழனிவேல், பொருளாளரான விஜயமுரளி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த சங்கம் ஆரம்பித்து இப்போது 60 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த சங்கத்தை தமிழ்த் திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன்தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘மக்கள் தொடர்பாளர்’ என்ற துறையை ஏற்படுத்திக் கொடுத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, அவரது நூற்றாண்டு விழாவையும், திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததன் விழாவையும், ‘மக்கள் தொடர்பாளர்கள் சங்க’த்தை முறையாகப் பதிவு செய்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சேர்த்து வரும் ஜனவரி 3, 2018 அன்று முப்பெரும் விழாவாகக் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள் தற்போதைய சங்க நிர்வாகிகள்.
இந்த விழாவை, அரசியல் கலப்பில்லாமல் முழுக்க, முழுக்க திரைப்படத் துறை சார்ந்த விழாவாகக் கொண்டாட முடிவு செய்து பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக முதலமைச்சர், தமிழக கவர்னர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் திரைப்படத் துறையின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உட்பட 76 பேரை நிகழ்ச்சிக்கு வரவழைத்து கெளரவப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
அன்றைய விழாவில் இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ் குழுவினர் எம்.ஜி.ஆர் பாடல்களை இசைக்கவுள்ளார்கள். நடன அமைப்பாளர் கலா குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்க தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் விஜய முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பிரம்மாண்ட அளவில் செய்து வருகிறார்கள்.
இந்த முப்பெரும் விழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.