சார்லி, எம் எஸ் பாஸ்கர், ஜார்ஜ் மரியான் ,மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், பரவை சுந்தராம்பாள் நடித்த படம்.சுரேஷ் ஜி இயக்கி உள்ளார் .ஒளிப்பதிவு கே. எஸ் .காளிதாஸ், இசை அருண் ராஜ் ,தயாரிப்பு சுரேஷ் குணசேகரன்.
சார்லி கரும்பு வெட்டும் தொழிலாளி. அவருக்கு முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தைகள்.உடன் வாழும் இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தை உள்ளது.குடும்பம் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கந்து வட்டிக்காரரான எம்.எஸ்.பாஸ்கரோ பணத்தைத் தரச் சொல்லி மிரட்டுகிறார்; அவமானப்படுத்துகிறார்.இந்நிலையில் சார்லியும் அவரது மனைவி சூசனும் கரும்பு வெட்டுவதற்காக வெளியூர் செல்கிறார்கள்.
முதல் தாரத்துப் பிள்ளைகள் மோனிகாவும் சக்தி ரித்விக்கும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.தம்பி சித்தியை நம்புவதை விட அக்காவை நம்புகிறான்.
சார்லி இரண்டாவது மனைவியின் குழந்தைக்கு ஒரு மோதிரம் உள்ளது.சித்தி ஊரில் இல்லாத சமயத்தில் ஆசையாக அதைப் போட்டு பார்க்கிறான் ரித்விக். பெருமையுடன் கையில் போட்டுக் கொண்டு விளையாடுகிறான். மோதிரம் தொலைந்து விடுகிறது.ரிதவிக் பதற்றமாகி சித்தியை நினைத்து பயந்து கொண்டிருக்கிறான்.நடமாடிய இடங்களில் எல்லாம் தேடியும் கிடைக்கவில்லை.எப்படியாவது காசு சேர்த்து அந்த மாதிரி வாங்கி விட அக்காளும் தம்பியும் முயல்கிறார்கள்.அதற்காக வேப்பங்கொட்டை பொறுக்குவதிலிருந்து கடலை உடைப்பது, முயல் பிடிப்பது என்று பல வேலைகளில் இறங்குகிறார்கள். ‘எறும்பு ‘போல காசு சேர்க்க பாடுபடுகிறார்கள். முடிவு என்ன என்பதுதான் ‘எறும்பு ‘படத்தின் கதை .
காணாமல் போன மோதிரம் கிடைத்ததா இல்லையா என்கிற ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு சிறுவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரு முழு நீளத் திரைப்படமாக எடுத்திருக்கிறார் சுரேஷ் ஜி.
ஒரு படத்தின் வெற்றி என்பது அதில் முகம் காட்டும் நடிப்புக் கலைஞர்களில் தேர்வைப் பொறுத்துதான் அமைகிறது.
இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவருமே அந்தந்த பாத்திரத்திற்கு அப்படிப் பொருந்திப் போகிறார்கள். அப்படி ஒரு வெற்றிகரமான நட்சத்திரத்தேர்வாக இயக்குநர் செய்துள்ளார்.
குடும்பம் குழந்தைகள், இரண்டாவது மனைவி,வறுமையின் அழுத்தம், கடன் சுமை என்று நெருக்கடிக்கு உள்ளாகும் குடும்பத் தலைவராக சார்லி அசலாக வாழ்ந்துள்ளார்.
அவரது இரண்டாவது மனைவியாக எதிர்மறை நிழல் படியும் பாத்திரத்தில் சூசன் பொருத்தமாக நடித்துள்ளார்.அதிகம் பேசாமல் உடல் மொழி மூலமே தன் பாத்திரத்தை உணர வைத்துள்ளார்.
இதுவரை நகைச்சுவைக் காட்சிகளில் வந்த எம்எஸ் பாஸ்கர் வட்டிக்கு கொடுக்கும் கறார் பேர்வழியாக வில்லத்தனம் காட்டுகிறார்.
அப்பாவியான சிட்டு கதாபாத்திரத்தில் வரும் ஜார்ஜ் தன் இயல்பான நடிப்பால் மனதில் பதிகிறார்.
எல்லாவற்றையும் விட பச்சையம்மா, முத்து பாத்திரங்களில் அக்காள் தம்பியாக வரும் மோனிகாவும் சக்தி ரித்விக்கும் பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்கிறார்கள். சிறுவர்கள் என்றாலும் மிகை நடிப்பில்லாமல் மிக இயல்பாக நடித்துள்ளார்கள்.
குறிப்பாக வெளியூர் சென்ற சித்தி திரும்பி வரும்போது அவருக்கு மோதிரம் காணாமல் போனது தெரிந்து விடுமோ என்ற அவர்களின் பயமும் பதற்றமும் தவிப்பும் நம்மை மனம் கனக்க வைத்து விடும். மோதிரம் வாங்குவதற்காக கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்ப்பதன் பொருளிலேயே எறும்பு என்று படத்திற்குப் பெயர் வைத்துள்ளார்கள்.
படத்திற்கு ஒளிப்பதிவும் இசையும் பெரும்பலமாக உள்ளன.காளிதாசின் ஒளிப்பதிவு சாதாரண காட்சிகளைக் கூட அழுத்தமாக மனதில் பதிய வைக்கிறது.
,அருண்ராஜின் இசையும் பாடல்களும் சிறப்பாக உள்ளன.அத்தனை பாடல்களும் வெற்றி ரகங்கள்.
குறிப்பாக முயலுக்கு வாழ்த்து கூறும் அந்தப் பாடல் இதுவரை தமிழ் திரை காணாத சூழலும் கொண்டது.
இப்படிச் சிறுவர்களின் உலகத்தைப் படம் பிடிக்கும் இந்த ‘எறும்பு’ திரைப்படம் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கும்.