“எல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் – நடிகர் ஆர்கே
எல்லாம் அவன் செயல் படத்தை தினமும் ஏதாவது ஒரு சேனலில் வடிவேலு காமெடி மூலம் நினைவுபடுத்திக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் வடிவேலு காமெடி மட்டுமே அந்த படத்தைக் காப்பாற்றவில்லை.
படத்தின் அனல் பறக்கும் வசனங்களும் ஆர்கேவின் அதிரடி சண்டைக் காட்சிகளும், விறுவிறுப்பான திரைக்கதையும் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது. இப்போது அதே ஆர்கே – ஷாஜி கைலாஷ் கூட்டணியில் வைகை எக்ஸ்பிரஸ் படம் ரிலீஸ் ஆகிறது. முந்தைய படத்தை விட இந்த படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார் ஆர்கே. ‘இந்த கதையே ஒரு ரயிலில் நடப்பது போல் அமைந்துள்ளது. படம் ஆரம்பித்த உடனேயே வேகமெடுக்கும். அந்த வேகம் இறுதிக்காட்சியில் ரசிகர்களை சீட்டு நுனிக்கே கொண்டுவிடும். எல்லாம் அவன் செயலை விட பத்து மடங்கு விறுவிறுப்பைப் படத்தில் அனுபவிக்கலாம்’ என்றார்.
ஏன் அடிக்கடி பார்க்க முடியவில்லை? என்று கேட்டதற்கு ‘எனக்கு சினிமா என்பது பேஷன். பணத்துக்காக நடிக்கவோ படம் எடுக்கவோ வரவில்லை. சினிமா மீதான காதல் மட்டுமே என்னை சினிமாவுக்குள் ஈர்த்தது. எனவே என்னை பாதிக்கும் கதைகளில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
சம்பாதிக்கும் நோக்கில் சினிமாவுக்கு வராத ஆர்கேவே சினிமாவில் எப்படி சம்பாதிக்கலாம் என்பதை உணர்ந்து அதற்கு ஹிட் பாக்ஸ் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். சினிமாக்காரர்கள் ஆர்கேவையும் அவரது புதிய முயற்சியையும் பயன்படுத்திக்கொள்வது அவர்களுக்கு நல்லது.
முதன்முறையாக இரட்டை வேடத்தில் நீத்து சந்திரா!
யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை படங்களில் நடித்த நீத்து சந்திரா ஆதிபகவன் படத்துக்கு பிறகு தமிழில் ஆளையே காணவில்லை. இருந்தாலும் உள்ளேன் ஐயா சொல்வதற்காக சேட்டை, சிங்கம் 3 படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். நீத்து சந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகியாக வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் களம் இறங்குகிறார்.
வெறுமனே பாடல்களுக்கு மட்டும் வந்து போகும் நாயகியாக இல்லாமல் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறாராம். “முதன்முறையாக டபுள் ஆக்ஷன் பண்ணியிருக்கிறேன். இதுவரை நீங்கள் பார்க்காத வித்தியாசமான இரண்டு வேடங்கள் அவை. ஆதிபகவன் படத்திலேயே சில காட்சிகளில் ஆக்ஷன் பண்ணியிருந்தேன். வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் எனக்கும் ஆக்ஷன் காட்சிகள் உண்டு’ என்றார்.
வைகை எக்ஸ்பிரஸ் தனக்கு தமிழில் செகண்ட் இன்னிங்ஸாக இருக்கும் என்று நம்புகிறார் நீத்து சந்திரா.
—