எல்லாம் கடந்து போகும் : லிங்குசாமி பேச்சு

lingoo2எல்லாம் கடந்து போகும் ; காசு பணம் வேண்டாம் கவிதை போதும் பிழைத்துக்கொள்வேன் என்று தனது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசினார்.

தமிழ்த்திரைப்பட இயக்குநர் லிங்குசாமி  ஏற்கெனவே’ லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். அவர் இப்போது  தனது இரண்டாவது  படைப்பாக ‘லிங்கூ-2’ ‘ வாக ‘செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்’ என்கிற ஹைக்கூ  கவிதைகள்  நூலைக் கொண்டு வந்திருக்கிறார். இதை டிஸ்கவரி புக் பேலஸ்  பதிப்பித்துள்ளது.இதன் வெளியீட்டு விழாவை நேற்று மாலை வித்தியாசமாக நடத்தி புதுமை செய்திருந்தார்.   லிங்குசாமியின் நண்பரும் இயக்குநருமான கௌதம் வாசுதேவ்மேனனின் திருவான்மியூர் கடற்கரையோர அலுவலகத்தில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘லிங்கூ-2’  கவிதை நூலை கவிக்கோ அப்துல்ரகுமான் வெளியிட இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ்மேனனும் பார்த்திபனும் பெற்றுக்கொண்டார்கள்.

lingoo-sittingவிழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும் போது ,” நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்குள் ஆதியில் தோன்றியது  கவிதையாகவே இருந்திருக்ககிறது. பிறகுதான் கதை எல்லாம் வந்தது என்பேன்.

ஊரிலிருந்து சென்னை வந்த போது  ரெண்டு மூணு கவிதைகளும் கொஞ்சம் நம்பிக்கையுடன்தான் இங்கு வந்தேன். கையில் காசு பணம் வேண்டாம் கவிதை போதும் பிழைத்துக்கொள்ள்ளலாம் என்றிருப்பேன்.எதுவுமே இல்லைன்னாலும் கவிதை இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என்றிருப்பேன். அப்போதே அப்படி இருந்தேன்.இப்போது இவ்வளவு பேர் கிடைத்திருக்கிறீர்கள்.எனக்கென்ன கவலை?

கவிதை சொல்வது என்பது என்னைச்சுற்றித் தொற்று நோய் போல வந்து கொண்டிருக்கிறது என் டிரைவர் முதல் ஆபீஸ் பாய் வரை இப்போதெல்லாம் கவிதை சொல்கிறார்கள். .

நான் எப்போதும் கவிதை ரசிக்கும் மனசோடு இருப்பவன்,  எவ்வளவு சோதனை வந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால அதெல்லாம்  உண்மையிலேயே பெரிதாகத் தெரியாது. அந்த மனசு மட்டும் இருந்தால் போதும்.எவ்வளவு சோதனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.இப்போது கூட வருகிற மிஸ்டுகாலில் 6 காலில் 3 கால் பணம் திருப்பித்தரக் கேட்கும் பைனான்சியராகக்கூட இருக்கலாம்..கடன் இருக்கிறது கவலை இல்லை. காரணம் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன். நான் உதவி இயக்குநராக சிரமப் பட்ட காலத்தில் கூட எல்லாக்கடையிலும் கடன் இருக்கும் 4 மாதம் கழித்து ஊர் போய்விட்டு வந்து  எல்லாருக்கும் திருப்பிக் கொடுப்பேன். எங்கள் குடும்பம் ஊருவிட்டு  வேறு ஊர் வந்த போது கூட ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பதற்காக மாட்டை விற்றுக் கொடுத்துவிட்டு வந்தவர் எங்கள் அப்பா. அந்த நேர்மை என் ரத்தத்திலேயே இருக்கிறது.எனக்குபொறுப்பும் கடமையும் இருக்கிறது.
இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன்.நீங்கள் எல்லாம் இருக்கிற போது எனக்கு எதுவுமே பிரச்சினை இல்லை.எல்லாக் கஷ்டங்களும் கடந்து போய்விடும்.இதுவும் கடந்து போகும். எல்லாம் கடந்து போகும்.

இதை  என் தனிப்பட்ட விழாவாக நினைக்கவில்லை.எல்லாரையும் சந்திக்கிற ஒரு வாய்ப்பாக நினைக்கிறேன்.அதற்காகவே நானாக ஏற்படுத்திக்கொண்ட சந்தர்ப்பமே இது .இங்கு வந்த அனைவருக்கும் நன்றி.நாம் தொடர்ந்து சந்திப்போம்..” என்றார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசும் போது, ” நான் எவ்வளவோ கூட்டங்களில் பேசியிருக்கிறேன்.இது வித்தியாசமான சந்தோஷமான விழாவாகத் தெரிகிறது.நல்லவர்கள் அன்பர்கள்  சங்கமமாகிற விழாவாகத் தெரிகிறது மகிழ்ச்சியாக உள்ளது.”என்றார்.
lingoo-grp
இயக்குநர் சசி பேசும் போது,” நல்ல கவிதை என்பது அதைப் படித்தவனை எழுத வைக்கும். இக்கவிதைகளைப் படித்ததும் நான் மொட்டமாடி போய் மழையில் நனைந்தேன்.லிங்குவின் கவிதை படித்ததும்  என்னை அப்படிச் செய்ய வைத்தது.”என்றார்.எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன் பேசும் போது, ஹைக்கூவின் வரலாற்றை தொட்டுக்காட்டி லிங்குசாமியின் நூலில்  பிடித்த கவிதைகளை எடுத்துக் கூறினார்.

இயக்குநர் பார்த்திபன் பேசும் போது , ”சினிமா கூட கஷ்டத்தையோ நஷடத்தையோ கொடுக்கலாம் .ஆனால் கவிதை இஷ்டத்தைத்தான் கொடுக்கும்.” என்றார்.

இயக்குநர்  எழுத்தாளர் பிருந்தா சாரதி பேசும் போது ,”லிங்குசாமி எனக்கு 25 ஆண்டுகால நண்பன்.அவரது எல்லாக் காலகட்டத்திலும் அவருடன் இருந்திருக்கிறேன்.  அவர் பகுதி நேர இயக்குநர்,ஆனால் முழு நேரக் கவிஞர்.எப்போதும் கவிதை மனசோடு இருப்பவர்.சமீப ஆண்டுகளில் சினிமாவில் அவருக்குப் பல கஷ்டங்கள், நஷடங்கள் வந்தன. அப்போது விடிய விடிய பேசி அதிகாலை 3.30 வரை பஞ்சாயத்து செய்து அவரது வீடு அலுவலகம் எல்லாமும் எழுதி வாங்குகிறார்கள். அப்படியும் மறுநாள் படம் வரவில்லை. அந்த மன உளைச்சலிலும் மறுநாள் எனக்கு போன் செய்து ஒரு கவிதை சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.அப்படி எப்போதுமே கவிதையோடு வாழ்பவர்.” என்றார்.

விழாவில்  தயாரிப்பாளர்கள் யூடிவி தனஞ்ஜெயன்,  ஞானவேல் ,ஊடகர் ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், ‘ஆனந்த விகடன்’ குழும பத்திரிகையாளர்  ரா.கண்ணன், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல்,வசந்தபாலன்,மிஷ்கின்,எஸ்.எஸ்.ஸ்டேன்லி,மாரிமுத்து,நந்தாபெரியசாமி,ராஜுமுருகன், நலன் குமாரசாமி,
மணிபாரதி,விஜய்மில்டன்,நடன இயக்குநர் ராஜு சுந்தரம், கவிஞர்கள் அறிவுமதி,விவேகா,நெல்லை ஜெயந்தா,ஜெயபாஸ்கரன்,யுகபாரதி,வெண்ணிலா, டிஸ்கவரி புக் பேலஸ்  பதிப்பாளர் வேடியப்பன்,ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் என ஏராளமான படைப்பாளிகள்  கலந்து கொண்டனர். தங்கள் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆசுவாசமாகத் தரையில் உட்கார்ந்து கொண்டு  நேருக்கு நேர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு கவிதைகள் பற்றியும் அவற்றின் தோற்றுவாய் பற்றியும் தாங்கள் பிறரது கவிதைகளில் கரைந்த அனுபவங்களையும்  பகிர்ந்து கலந்துரையாடினர் ; அவ்வப்போது இடை வினையும் புரிந்தனர்.மாலையில் தொடங்கிய இச்சந்திப்பு  மாலை மயங்கி  இரவான பிறகும் தொடர்ந்து அனைவரையும் கவிதை அனுபவத்தில்  திளைக்க வைத்தது.

விழாவில் பேசிய பலரும் இது போல இலக்கியச் சந்திப்புகளை அடிக்கடி  நடத்த வேண்டும் என்று லிங்குசாமியைக் கேட்டுக்கொண்டார்கள்.தன் கவிதை நூல்வெளியீட்டு விழாவை அனைவருக்குமான இலக்கிய சந்திப்பாக லிங்குசாமி மாற்றியிருந்ததை அனைவரும் பாராட்டினார்கள்.

முன்னதாக பாடகி அனுராதா ஸ்ரீராம் ‘அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே’  என்கிற பாடலைப் பாடினார். நிகழ்ச்சியை நெறிப்படுத்திய கவிஞர் நெல்லை ஜெயந்தாவும் இடையிடையே கவிதைகளைத் தூவி விழாவில்  கவிமணம் கமழச்செய்தார்.