இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஜெய்பீம் மன்றம் இணைந்து சென்னை காமராஜர் அரங்கத்தில் “மஞ்சள்” நாடகம் நிகழ்த்தப்பட்டது.
‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய இந்த நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
60 நாடக கலைஞர்கள் தெளிவான ரிகர்சலுக்குப் பின் அரங்கேற்றிய, “மஞ்சள்” நாடகத்தை எழுதியர், ஜெயராணி. இயக்கியவர் ஸ்ரீஜித் சுந்தரம், மேற்பார்வை செய்தவர்கள் பாரதி செல்வா மற்றும் சரவணன்.
கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைத்தது.
நாடகத்திற்கு பின் நிகழ்ந்த கருத்துரையில், திருமாவளவன், ஜக்கையன் பேசிய போது இது யாருக்கான நாடகம், யாருக்கு செல்லவேண்டும் என்று தெளிவாக எடுத்துச்சொன்னார்கள்.
இயக்குநர் சமுத்திரக்கனி பேசுகையில், ‘எல்லா சாதியிலயும், சாதி வேணும்னு சொல்றவன விட வேணாம்னு சொல்றவன்தான் அதிகமா இருக்கான். அவன்லாம் அமைதியா இருக்கறதாலதான் சில சில்லறைக சத்தம் அதிகமா கேக்குது. இனி அவங்க எல்லாரும் பொதுவில் வந்து பேசணும். சாதி ஒழியணும்’ என்று குறிப்பிட்டார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், ‘மனுசனே மனுச மலம் அள்ளுற வேலைய நிறுத்தறதுக்கு ஒரு சிம்பிள் வழி இருக்கு. வாரம் ஒவ்வொரு சாதிக்காரன் மலம் அள்ளணும்னு சொல்லிப் பாருங்க. உடனே டிசைன் டிசைனா மெஷின் கண்டுபுடிச்சு மலத்த அள்ள ஆரம்பிச்சுருவானுங்க’ என்ற பகடியாக பேசினாலும் உண்மை நிலையை சொன்னார்.
இறுதியில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், ‘இத்தனை நாள் எங்க வலியா மட்டுமே இது இருந்துச்சு. அத நீங்களும் உணரணும்னு தான் இதை நாடகமா போட்டோம். எந்த ஒரு விசயமும் கலை மூலமா போகும்போதுதான் ஒரு விஷயம் நிறைய மக்கள சென்றடையும். அதுதான் நம்ம இலக்கு. இது நமக்கான உரிமை, நாமளே அதை எடுத்துக்குவோம் ”என்று முடித்தார்.