இனியவன் என்கிற இனியவரால் வேடந்தாங்கலில் தொடங்கிய அமைப்பு’ இலக்கிய வீதி’ .இந்த அமைப்பை, ஐம்பது ஆண்டுகாலமாக நடத்தி வரும் இனியவன், எழுத்தாளர்களைக் கவுரவித்து, அன்னம்
விருது வழங்கும் விழா ஒன்றினை நடத்தி வருகிறார்.
அன்னம் விருது வழங்கும் விழா நேற்றிரவு பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்றது. சிறந்த எழுத்தாளருக்கான விருது எழுத்தாளர், சுந்தரபுத்தனுக்கு வழங்கப் பட்டது. விருதுவிழா சம்பிரதாயமான பாராட்டு விழாவாக இல்லாமல் நல்ல இலக்கிய விருந்தாகவும் இருந்தது.
இவ்விழாவில் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் தலைப்பில் மறுவாசிப்பில் பிரபல எழுத்தாளர்கள் ஆய்வுரை மூலம் பேசப்படுவர். இந்தத் தொடர் நிகழ்வில் ‘மறுவாசிப்பில் மு.வ’ஆய்வுரையும் நிகழ்த்தப் பட்டது. உரை நிகழ்த்திய ஞானசுந்தரம் மு.வ.வின் உலகத்தில் பார்வையாளர்களை உலவவிட்டார்.
விருதுபெற்ற சுந்தரபுத்தன் இதழாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர் என பல படிகளில் ஏறி உயர்ந்து பல நிலைகளில் தடம் பதித்தவர். பல்வேறு ஊடகங்களின் வெவ்வேறு தட்ப வெப்பச் சூழல்களில் பயணம் செய்தவர்; இன்றும் பயணத்தைத் தொடர்பவர்.
சென்னையின் மாநகரப் புழுக்கத்தில் சிக்குண்டு இழுபட்ட போதும் தான் ஒரு கிராமவாசி என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர். தன் கிராமத்து ஈரத்தை இன்றும் நெஞ்சில் உலரவிடாமல் வைத்துக் கொண்டிருப்பவர். நகர ஊடக புறச் சூழல்களால் மாறிவிடாமல் என்றும் எளிமை என்கிற. சுயம் பராமரிப்பவர். அவருக்கு விருது கிடைத்திருப்பது பொருத்தமே.
பொதுவாக விருதுகள் ஓய்வு வயதில் கொடுக்கப்பட்டு அதன் எதிர்விளைவாக வெறும் பூரிப்புணர்வை மட்டுமே தரும்.விருதுகள் என்றால் இருமலும் இளைப்பும் மூச்சுத்திணறலும் முதுகுத்தண்டு வளைவுமான முதியப் பருவத்தில்தான் வழங்கவேண்டுமா? இந்த விஷயத்தில் அன்னம் விருது முன்மாதிரியாக திகழ்கிறது.
இளைஞர்களுக்கு தரப்பட்டால் பெருமையும் மேலும் படைக்க ஊக்கத்தையும் தரும் .
இவ்வகையில் இளைஞரான சுந்தரபுத்தன் பெற்றுள்ள விருது அவருக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல ஊக்கத்தையும் தரும் என நம்பலாம்.
இந்த அன்னம் விருது வழங்கும் விழாவில் சுந்தரபுத்தன் பற்றிய அறிமுகவுரையை வாசுகி பத்ரிநாதன் நிகழ்த்தினார். டாக்டர் மு.வ.வின் மகன் டாக்டர். வ.நம்பி முனைவர் தெ. ஞானசுந்தரம் ஆகியோர் விருதை வழங்கினார்கள்.
சுருக்கமாக ஏற்புரை நிகழ்த்தி,தான் என்றும் எளியவர் என்று சுந்தரபுத்தன் நிரூபித்தார்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன ஆதரவுடன் அன்னம் விருதை இலக்கிய வீதி வழங்குகிறது.இனியவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.