சன் லைட் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் துரைமுருகன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘எவன்’. இதில் திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார் இவர்களுடன் ஜே. கே. சஞ்சீத், உஜ்ஜயினி ராய், கானா பாலா, பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஏ.கே. சசிதரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பாலா கவனிக்க, இப்படத்தில் இடம்பெறும் பாடல்களை மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானா பாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
“தமிழ் திரையுலகில் அம்மா -மகன் உறவை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் அம்மா மகன் உறவைப் புதுவிதமான கோணத்தில் உணரும்படி, திரைக்கதையை அமைத்திருக்கிறோம். அதாவது கதையின் நாயகன் அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான். உயிரையும் எடுப்பான் .இதுதான் இந்தப் படத்தில் ஒரு வரிக் கதை.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக ‘எவன்’ தயாராகி இருக்கிறது.
இப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதற்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு முறை கூத்துப்பட்டறைக்குச் சென்ற போது என் கண்ணில் பட்டு க்ஷண நேரத்தில் மனதில் கதாபாத்திரமாகப் பதிந்தவர் தான் திலீபன். அதன் பிறகு அவரைப் பற்றி விசாரித்த போது, அவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன் என்று தெரிந்தது. பொருத்தமான நபரைத்தான் திரையுலகில் அறிமுகப்படுத்துகிறோம் என்னும் உற்சாகம் ஏற்பட்டது. இந்தத் திரைப்படம் பல தடைகளைக் கடந்து ஏப்ரல் ஏழாம் தேதியன்று வெளியாகிறது. ” என்றார்.






இந்தப் படத்தில் உள்ள எல்லா சண்டை காட்சிகளிலும் எந்த வித டூப்பும் போடாமல் நடித்துள்ளார் ,முறையாக சண்டைப் பயிற்சி கற்ற திலீபன் .படப்பிடிப்பில் இருந்தவர்கள் சொன்ன போதும் கூட 20 மாடியில் இருந்து குதிக்கும் காட்சியில் நடிகர் ஜாக்கிசானைப் போல ஒரே டேக்கில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் .இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்களில் நடிகர் அஜித்தைப் போல வித்தை காட்டும் திறமை படைத்தவர் எவன் (YEVAN ) பட நாயகன் திலீபன்.