அண்மைக்காலமாக சில படங்களில் கதையே இருப்பதில்லை என்று பார்வையாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். சிலவற்றில் கதையைத் தேடவேண்டும் என்கிறார்கள்.
ஆனால் ஒரே படத்தில் ஏழு கதைகள் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு படமாக உருவாகியிருப்பதே ‘ஒவ்வொன்றும் ஒருவிதம்’ திரைப்படம்.
இப்படத்தின் அறிமுக விழா இன்று கூத்துப்பட்டறை அலுவலகத்தில் நடைபெற்றது.படக்குழுவினர் பங்கேற்றனர்.
இப்படத்தில் வருகிற கதைகள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் ஒவ்வொன்றும் ஒரு தன்மையில், ஒவ்வொன்றும் ஒரு பாணியில் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இப்படம் ‘ஒரே கல்லில் ஏழு மாங்காய்’ அடித்த திருப்தியைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்கும்.
இதை எழுதி இயக்கியிருப்பவர் வினேஷ்வைரா, இவரே தன் ‘தி ப்ளாக் ஹோல் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்தும் இருக்கிறார்.
ஒரே படத்தில் இப்படி பல கதைகள் இருப்பதை ஆந்தாலஜி பிலிம் என்பார்கள். ‘ஒவ்வொன்றும் ஒருவிதம்’ படமும் அவ்வகையில்ஆந்தாலஜி படம்தான் இதுமாதிரி ஏற்கெனவே சத்யஜித்ரே இயக்கியுள்ளார். ‘பாம்பே டாக்கீஸ்’,’கேரளா கபே’, ‘அவியல் போன்ற படங்கள் இவ்வகையில் பேசப்பட்டவை.
இப்படத்தில் வரும் கதைகள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை நகைச்சுவை, பேண்டஸி, மோட்டிவேஷன், காதல் , பாலியல் , கேங்ஸ்டர், ஹாரர் என ஒவ்வொன்றும் ஒருவிதம்.
வினேஷ்வைரா கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர். அங்கு பயிற்சி பெற்ற நண்பர்கள் கை கொடுக்கவே திறமையாளர் குழு ஒன்று உருவாகியுள்ளது.
நாமே ஏன் ஒரு படக்குழு உருவாக்கி முன்னெடுக்கக் கூடாது என்று வினேஷ்வைரா முடிவெடுக்கவே, படத்தின் வேலைகள் தொடங்கின
இயக்குநர் வினேஷ்வைராவுடன் ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபாணி, இசையமைப்பாளர் டேவிட் கே. பாஸ்கல், படத்தொகுப்பாளர் ஈ.ஜி. கிருஷ்ணா என்று திறமைக் கரங்கள் இணைந்துள்ளன.
இதில் வினேஷ்வைராவும் நடித்துள்ளார் அவர் தவிர பாண்டிஜீவா, தகுநம்பி, கார்த்திக், ஞானி, தினேஷ், ராஜ்கபூர், சதீஷ்,பொற்கொடி, மாயா, உஷா என மற்றவர்களும் நடித்து இருக்கிறார்கள். இவர்களும் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்களே.
படக்குழுவிலுள்ள இந்த நடிகர்கள்தான் ஏழு கதைகளில் வலம் வருகிறார்கள். விதவித பரிமாணம் காட்டுகிறார்கள். ஏற்கெனவே மேடை நாடக அனுபவம் பெற்றிருந்தாலும் இந்த நடிகர்களுக்கு முறையாக ஒத்திகை பார்த்து, திட்டமிட்டு இப்படம் உருவாகியுள்ளது.
சென்னை ,மற்றும் சென்னையைச்சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
பட அனுபவம் பற்றி இயக்குநர் நடிகர் வினேஷ்வைரா பேசும் போது,
” எனக்குச் சொந்த ஊர் மதுரை. நடிப்பில் ஆர்வம் வந்து கூத்துப்படறையில் பயிற்சி பெற்று முழுமையான நடிகனாகத் தயாரிக்கப் பட்டேன். இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் ,இதன் மூலம் திறமையுடன் வெளியே தெரியாமல் போராடிக் கொண்டிருக்கும் பல கலைஞர்களுக்கு வெளிச்சம் பெற ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றுதான் இம் முயற்சியில் இறங்கினேன். ” என்கிறார்.
இப்படத்திலுள்ள ஏழு கதைகளையும் இணைத்து ஒன்றிணைப்பது எது? படத்தைப் பார்த்தால் தான் தெரியுமாம்.
தங்களைத் ,தங்கள் திறமையை வெளி உலகிற்கு வெளிக்காட்டும் முயற்சிதான் இது. எனவே பொருளாதார சவால்களைச் சந்தித்திருக்கிறது படக்குழு .ஆகவேதான் ஒவ்வொரு கதையையும் சிற்சில மாத இடைவெளிவிட்டே படப்பிடிப்பு செய்துள்ளார்கள்.
எடுத்த படத்தை மாதிரிக் காட்சியாக திரையிட்ட போது பார்த்தவர்கள் ஏழில் ஐந்து கதைகளை பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள். எனவே முழுத் திரைப்படமாக உருவாக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
வெளியிட திரையரங்குகள் கிடைக்க வேண்டுமே.. சுமார் ரகக் கதைகளாக இருந்தாலும் நட்சத்திரங்கள் நடித்தால்தானேதிரையரங்குகள் கிடைக்கும்?
எனவே திரையரங்குகளுக்காக ப் போராடுவதை விட்டுவிட்டு ‘யூ டியூப்’ பில் ஆன் லைனில் மக்களிடமே நேரடியாக வெளியிடுவது என்று தைரியமாக ஒரு முடிவெடுத்து இருக்கிறார்கள்.
யூடியூப் சேனலில் இப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளார்கள்.
பொருளாதாரம் சாராத முயற்சி இது,வியாபாரம் கலவாத சவால்தான் என்றாலும் தங்கள் திரைவாழ்வுக்கு அடிப்படையாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் துணிச்சலாக படத்தை வெளியீடு செய்கிறார்கள்.
தைரியம் மனித லட்சணம்.எனவே இந்த துணிவான இளைஞர் குழுவை ஊக்கப்படுத்துவோம்!.