‘ஏஸ்’ திரைப்பட விமர்சனம்

விஜய் சேதுபதி , ருக்மணி வசந்த் , யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவர்களுடன் திவ்யா பிள்ளை, பப்லு பிருத்விராஜ், கே ஜி எஃப் புகழ் பி.எஸ். அவினாஷ், ராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஆறுமுக குமார் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.இவர் ஏற்கெனவே ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை இயக்கியவர் .ஒளிப்பதிவு கரண் பி.ராவத்,ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பின்னணி இசை சாம் சி.எஸ், கலை ஏ.கே. முத்து, எடிட்டிங் பென்னி ஆலிவர் ,தயாரிப்பு நிறுவனம் 7CS எண்டர் டெய்ன்மெண்ட். மே 23 ஆம் தேதி வெளியீடு.

சரி ‘ஏஸ்’ படத்தின் கதை என்ன?
சீட்டாட்டத்தில் ஏஸ் என்பது ஒரு சின்னம். அப்படி    நாயகன் வில்லனுக்குமான நீயா நானா என்கிற ஓர் ஆடு புலி ஆட்டம் தான் இந்தக் கதை.

போல்ட் கண்ணன் என்பது விஜய் சேதுபதியின் பெயர். அவர் மலேசியா செல்கிறார், தன் பழையதையெல்லாம் மறந்து, புது வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ விரும்புகிறார். அவருக்கு ஆதரவு தருகிறார், அறிவுக்கரசன் என்கிற யோகிபாபு. அங்கே
அருகில் வசிப்பவர் ருக்மணி வசந்த். தாய் இல்லாத அவர், தன் வளர்ப்புத் தந்தையுடன் ஒரு சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார்.விஜய் சேதுபதிக்கு ருக்மணியுடன் முதலில் மோதல், பிறகு காதல். ஒரு கடையில் விற்பனை பெண்ணாக இருக்கும் காதலிக்கு விஜய் சேதுபதி விலையுயர்ந்த உடையை வாங்கிப் பரிசளிக்க விரும்புகிறார். அதற்காக கடன் வாங்க முயல்கிறார். போன இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் பெரிய கடனாளியாக மாட்டிக்கொள்கிறார்.

இன்னொரு பக்கம் யோகிபாபுவும், அவரது தோழி திவ்யாபிள்ளையும் கடனில் மூழ்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். இருவரது பிரச்சினையின் பின்னணியில் பெரிய தொகை கொண்ட பணம்தான் இருக்கிறது.சம்பாதித்து அதைத் தீர்க்க முடியாது. எனவே திட்டமிட்டுக் கொள்ளை முயற்சியில் இறங்குகிறார்.வங்கிக் கொள்ளையில் இறங்குகிறார்.இதை அறிந்த வில்லன்கள் பி.எஸ்.அவினாஷ், பப்லு பிருத்விராஜ் இருவரும் விஜய் சேதுபதியிடமிருந்து அந்தப் பணத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.போலீஸ் விசாரணை ஒரு பக்கம் தீவிரமடைகிறது. போலீஸ் விஜய் சேதுபதியை நெருங்கியதா?அவர் போலீஸ் இடம் இருந்து தப்பித்தாரா? கொள்ளையடித்த பணம் என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதே 156.09 நிமிடங்கள் கொண்ட ‘ஏஸ்’ படத்தின் மீதிக் கதை.விஜய் சேதுபதி அலட்டிக் கொள்ளாமலே தனது முக பாவனைகள் மூலம் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.அவர் ருக்மணியிடம் வசனங்கள் இல்லாமலேயே மெல்லிய உணர்வு ரேகைகளை முகத்தில் மலரவிட்டு காதலை வெளிப்படுத்தும் அந்த தருணம், ஓர் உதாரணம். இப்படிக் காதல் மட்டுமல்ல சண்டைக்காட்சிகளில் ஆப்ஷனிலும் யோகி பாபுவுடன் நகைச்சுவையிலும் அவர் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.அலட்டிக் கொள்ளாத நடிப்பில் மிளிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள ருக்மணி வசந்த் பளிச் தோற்றம், இயல்பான நடிப்பு என்று திரைத்தோற்றத்திலும் நடிப்பிலும் கவர்கிறார்.இருவரிடமும் காதல் மலரும் அந்த இடம் அழகு.

தொழில் அதிபர் என்று பாசாங்கு காட்டிக்கொண்டு மலேசியாவில் இருக்கும் அறிவுக்கரசனான யோகி பாபு விஜய் சேதுபதியுடன் படம் முழுக்கப் பயணித்து கலகலப்பூட்டுகிறார்.அவர் அடி வாங்கும் காட்சிகளில் கூட சிரித்து நமது அடிவயிறு குலுங்குகிறது.காட்சிகளில் காமெடி முலாம் பளபளக்கிறது.

திவ்யாபிள்ளை அறிமுகம் என்றாலும் அழகான முகம். தர்மாவாக வரும் பி.எஸ்.அவினாசும், ராஜதுரையாக வரும் பப்லு பிரித்விராஜும் வில்லத்தனத்தில் போட்டிபோட்டு மிரட்டியுள்ளனர்.

கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. மலேசியப் பின்புலக் காட்சிகளை சரியாக எடுத்துக்காட்டிப் படம் பார்ப்பவர்களுக்குப் புதிய திரைக்காட்சி அனுபவத்தைச் சாத்தியமாக்கி உள்ளார்.இரண்டாம் பாதியில் கதை வேகம் எடுக்கிறது. குறிப்பாக வரும் துரத்தல் காட்சிகள் பரபர.

சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை நேர்த்தி. இது முழுக்க முழுக்க வணிக ரீதியிலான படமாக எடுக்கப்பட்டுப் பார்ப்பவரைக் கவரும் வகையில் உருவாகியுள்ளது. அதற்கான கூட்டணியில் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

கலகலப்பான கதைக்களத்தில்  பொழுதுபோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து,தர்க்கங்களை மறந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான படத்தை இயக்கி கவனம் பெறுகிறார்,இயக்குநர் ஆறுமுககுமார்.பொழுதுபோக்கு நோக்கத்தில் திருப்தி அளிக்கும் திரையனுபவம் எனலாம்..