‘ஐந்தாம் வேதம் ‘இணையத் தொடர் விமர்சனம்

சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், பொன்வண்ணன்,விவேக் ராஜகோபால், கிருஷ்ணா குரூப் ,ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ் நடித்துள்ளனர்.மர்ம தேசம் புகழ் இயக்குநர் நாகா  இயக்கியுள்ளார்.அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்திருக்கிறார்கள்.

ஆத்திகத்தின் முடிவு நாத்திகம், நாத்திகத்தின் முடிவு ஆத்திகம் என்பார்கள். தொன்மங்களும் அறிவியலும் இரு வேறு திசையிலானவை போல் தோன்றினாலும் அந்த இரு துருவப் பயணம் ஒரு முனையில் இணையக்கூடும். அப்படித்தான் இரு வேறு துருவங்களான புராணத்தையும் அறிவியலையும் பயணிக்க விட்டு இணையும் ஒரு புள்ளியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இணையத் தொடர் தான் ஐந்தாம் வேதம் .வேதங்கள் நான்கு ரிக், சாம, யஜுர் ,அதர்வணம் என்பதை அனைவரும் அறிவர். ஐந்தாம் வேதம் என்ன என்கிற தேடலுடன் தான் இந்தத் தொடர் பயணம் செய்கிறது.

புராணக் கதைகள் மாயாஜாலம் நிறைந்தவை, அச்சமூட்டக்கூடியவை. அதேபோல் அறிவியலின் விளைவான குளோனிங், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றின் விளைவுகளும் அச்சமூட்டக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த இரண்டையும் இணைத்து இந்தத் தொடரில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நாகா.மர்மங்கள் அமானுஷ்யத்திற்குப் பெயர் பெற்ற நாகா தனது முத்திரையை இதில் பதித்துள்ளார்.

ஐந்தாம் வேதம் மூலமாகவே பிரம்மன் மனித உயிர்களைப் படைத்தார், என்றொரு கற்பனையைப் புராணம் , அறிவியல் கலவையில் சொல்லியிருக்கும் மர்மம் நிறைந்த திகில் இணையத் தொடர் தான் ‘ஐந்தாம் வேதம்’.

அந்தக் காலத்தில் தீர்க்கதரிசிகள் வரவுக்காக மக்கள் காத்திருந்தது போல ஐந்தாம் வேதம் வெளியாகும் நாளுக்காக ஒரு பழைய சிவன் கோயிலில் அர்ச்சகர் காத்திருக்கிறார்.அறிவியல் ஆட்களும் காத்திருக்கிறார்கள்.அவர்களில் சிலரும் அந்த ஐந்தாவது வேதத்தை தேடுகிறார்கள். மறுபக்கம், மாமிசத்தை கொண்டு 3டி நகலெடுப்பு மூலம் அப்படியே அசல் மாமிசத்து உருவத்தை உருவாக்க சிலர் முயல்கிறார்கள். அவர்களும் ஐந்தாம் வேதத்தின் மீது குறி வைக்கிறார்கள்.இறுதியில், ஐந்தாம் வேதம் என்பது உண்மையா?, அதைக் கண்டுபிடித்தார்களா? தேடும் முயற்சியில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்னென்ன? என்பதை மர்மம் நிறைந்த காட்சிகளோடும், சுவையான முடிச்சுகள் கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை வழிநின்று சொல்வதே ‘ஐந்தாம் வேதம்’.

மர்ம கதைகளுக்கு புகழ் பெற்ற நாகா ஐந்தாம் வேதம் என்பதைக் கற்பனையாகத்தான் உருவாக்கி இருக்கிறார். ஆனாலும் அதன் பின்னணியில் புராணம் மற்றும் அறிவியல் இரண்டையும் இணைத்து வடிவமைத்த காட்சிகள் அனைத்தும் அக்மார்க் சஸ்பென்ஸ் ரகங்கள்.

இந்த இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், தேவதர்ஷினி, கிரிஷ் குரூப், ராம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், பொன்வண்ணன், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்ட அனைவருமே பொருத்தமான தேர்வுகள். தொடர் முழுவதும் பயணித்து கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜன், மர்மம் மிக்க திகில் காட்சிகளைப் பார்ப்பவர்களைப் பதற்றம் கொள்ளும் வகையில் படமாக்கி உள்ளார்.ரேவாவின் பின்னணி இசை கதையின் பதற்றத்தைத் தூக்கிப் பிடிக்கிறது.படத்தொகுப்பாளர் ரஜீஷ்.எம்.ஆர், புராண -அறிவியல் சார்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்வையாளர்களுக்குப் புரியும்படி காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.கலை இயக்குநர் ஏ.அமரனின் கலைப் பணி தொடரில் நாகா சிருஷ்டித்த உலகத்தை நமக்குக் கண்முன் காட்ட உதவுகிறது.

’மர்ம தேசம்’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த இயக்குநர் நாகா அதை இந்தத் தொடரில் மூலம் தக்க வைத்துள்ளார்.

அனைத்து அத்தியாயங்களையும் எந்த வித கவனம் பிசகலும் ஏற்படாத வண்ணம் பார்க்கும்படிச் சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.பல இடங்களில் கதாபாத்திரங்கள் அதிகம் பேசுவது தொலைக்காட்சி தொடர் உணர்வைத் தருகிறது. இருந்தாலும் இறுதியில் நிகழும் திருப்பங்கள் கதையோடு ஒன்ற வைக்கிறது.

மொத்தத்தில், ‘ஐந்தாம் வேதம்’ திருப்தி அளிக்கும் திகில் அனுபவம்