யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், சண்முகம் .ஆர் நடித்துள்ளார்கள்.
ராகுல் ஆர் .கிருஷ்ணா இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு விஷ்ணு கண்ணன், எடிட்டிங் அருண் ராகவ், இசை கே .ஆர். ராகுல்.பாடல்கள் அருண் மணியன்.
எக்சாடிக் பிலிம்ஸ் சார்பில் சண்முகம் ராமசாமி தயாரித்துள்ளார்.
ஐமா என்றால் கிரேக்க மொழியில் ரத்தம் என்றொரு பொருள் உண்டாம். ஐமா என்பதற்கு இறைவனின் சக்தி என்றும் பொருள் சொல்லப்படுகிறது.
இது ஒரு முழு நீள சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ளது.
ஆதாம் (யூனஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறாள். ஒரு கட்டத்தில் எலிப்பொறியில் மாட்டிக்கொண்ட எலிகள் போல பொறி வைத்துப் பிடிக்கப்பட்டு, கடத்தப்பட்ட நாயகனும் நாயகியும் தனித்தனி அறைகளில் சிறை வைக்கப்படுகின்றனர்.
கண்கள், கை, கால்கள் கட்டப்பட்ட அவர்கள் எப்படித் தங்கள் உயிரைத் தற்காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். அதிலிருந்து வெளியே வருகிறார்களா இல்லையா என்பதுதான் ‘ஐமா ‘படத்தின் கதை செல்லும் பாதை.தங்கள் உயிர்த் தப்பித்தலுக்கான போராட்டங்களில் அவர்கள் என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது தான் காட்சிகள்.
ஒரு தேவாலயத்தில் தனது வாழ்க்கையில் விரக்தியுற்ற நாயகி மரியா தனது சிலுவை மாலையைக் கழற்றி வைத்துவிட்டு அதுவரை யாதுமற்ற தனக்கு நம்பிக்கை தந்த இறைவனின் திரு வசனங்களுக்கு நன்றி கூறிவிட்டு இறைவனின் கைப்பற்றுதலில் இருந்து விலகிச் சென்று விடை பெறுவதாகப் படம் தொடங்குகிறது.அவளுக்கு என்ன ஆயிற்று என்று நாம் நினைக்கும் போது சில நிமிடங்களில் மருத்துவமனையில் நாயகி பலத்த ரத்தக் காயங்களோடு சேர்க்கப்படுகிறாள்.நாயகன் பதற்றத்துடன் அவள் கரம் பற்றுகிறான்.
சிறிது நேரத்தில் நாயகன் கண்கள் கை கால்கள் கட்டப்பட்டு ஒரு பாழடைந்த அறையில் அடைக்கப்படுகிறான்.கைக்கட்டுகளை அவிழ்த்துவிட்டு, அங்கிருந்து வெளியே செல்லும்போது இன்னொரு அறையில் கதாநாயகி அதே நிலையில் இருக்கிறாள். இருவரும் சேர்ந்து தப்பிக்க எண்ணுகிறார்கள் இடையில் வில்லன் குறுக்கிடுகிறான்.வில்லனோ ரத்த வெறி பிடித்த ஒரு டாக்டர். வில்லன் அவர்களைக் கடத்துவதற்கான காரணம் என்ன ? குறிப்பிட்ட வகையான இரத்த வெறிக்குக் காரணம் என்ன? என்பதை அடுத்தடுத்த காட்சிகள் சொல்கின்றன.அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் வில்லனுக்கும் அவர்களுக்கும் இடையில் என்னென்ன நடக்கின்றன என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதியின் காட்சிகள்.
இப்படி 114 நிமிடங்கள் கொண்ட இந்தப் படம் ,முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் திரைக்கதையில் தொய்வு ஏற்படுவதை உணர வைக்கிறது.
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் அண்ணன் தங்கை மீது வைத்துள்ள பாசம் , மகன் அம்மா மீது வைத்துள்ள பாசம் என இரண்டும் காட்டப்படுகிறது. அதற்கு விலையாக வைக்கப்படும் உயிர் என்று அதற்கான முன்கதை சொல்லும் காட்சிகளும் உண்டு.
கதாநாயகனாக நடித்த யூனஸ் துடிதுடிப்பான இளைஞராக வருகிறார். சில கோணங்களில் தோற்றத்தில் நடிகர் விஜய்யை நினைவூட்டுகிறார்.நடிப்பில் இயக்குநர் சொன்னதைச் செய்துள்ளார். குறை சொல்ல ஒன்றும் இல்லை.கதாநாயகி எவ்லின் ஜூலியட் தப்பிக்கும் காட்சிகளில் நல்ல முக பாவங்களைக் காட்டியுள்ளார். அவரது திரைத் தோற்றம் திருப்தியாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி குறையில்லாத நடிப்பைக் கொடுத்து வில்லத்தனம் காட்டுகிறார்.
நாயகன் -நாயகி பாத்திரங்களின் மூலம் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்பித்து உயிர் வாழவே எண்ணுகிறார்கள் என்ற உளவியல் உண்மையைக் காட்டியுள்ளார்கள். அவர்களின் உயிர் தப்பித்தல் முயற்சிகளை அணு அணுவாக ரசிக்கும் வில்லனின் குரூர குணமும் காட்டப்பட்டுள்ளது.
ஒரே இடத்திற்குள் கதை சிக்கிக் கொள்வதால் பார்த்த முகங்கள் பார்த்த இடங்கள் என்று வருவதால் ஒரு கட்டத்தில் அலுப்பூட்டுகின்றன. காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாமல் கதை திக்கித் திணறுகிறது.அந்தத் தனிமை அறைக் காட்சிகளைச் சுவாரஸ்யப் படுத்தியிருந்தால் இரண்டாம் பாதிப் படத்தில் வரும் தொய்வைச் சரி செய்து இருக்கலாம்.
சஸ்பென்ஸ் திரில்லர் படம் எடுக்கும் போது அதை அறிவியல் தரப்போடு எடுக்க வேண்டும். அல்லது ஆன்மீக நம்பிக்கை சார்ந்து எடுக்க வேண்டும். இதில் இரண்டையும் கலந்துள்ளார்கள்.படத்தில் பல இடங்களில் பைபிள் வசனங்கள் பேசப்படுகின்றன.
படத்தில் இயக்குநரை விட ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் திறம்படப் பணியாற்றி உள்ளார்கள்.
குறைந்தபட்ச லொகேஷன்களில் ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணனின் உழைப்பால் காட்சிகள் ஓரளவிற்கு நிறைவாகத் தெரிகின்றன. சஸ்பென்ஸ் படம் என்றால் வழக்கமான வாத்திய ஒலிகள் தான் ஒலிக்கும். இப்படத்தில் அப்படி இல்லாமல் வேறு வகையான வாத்தியங்களைப் பின்னணிக்குப் பயன்படுத்தி வித்தியாசம் காட்டியுள்ளார் இசையமைப்பாளர் கே.ஆர். ராகுல். ஒரு கட்டத்தில் படத்தை நகர்த்திச் செல்பவர் அவர்தான்.
படத்தில் பத்துப் பாடல்கள் வருகின்றன. ஆனால் ஆங்காங்கே துண்டு துண்டாகத் தூவிஇருப்பதால் பாடல்கள் வேகத்தடைகளாக இல்லை. பச்சமரம் சாயப் பாக்குது,
போராடி நீ வெல்லடா,
குளிரும் இதயத்தில் நுழைகிறாய் போன்ற பாடல்கள் அளவில் சிறியவை என்றாலும் ஈர்க்கின்றன.
இப்படிப்பட்ட படத்திற்குப் பாடல்கள் தேவை இல்லை. நல்ல மெட்டுகளையும் வரிகளையும் வீணடித்திருக்கிறார்கள். ஆனால்
படத்தில் அழுத்தமான வசனங்கள் இல்லாத குறையை அப்போது ஒலிக்கும் பாடல் வரிகள் ஈடு செய்கின்றன.
மொத்தத்தில் ‘ஐமா ‘படம் புதியவர்களின் குழந்தைத்தனமான முயற்சியாக முடிந்துள்ளது.காட்சிகளின் நம்பகத் தன்மைக்கு இயக்குநர் கொஞ்சம் சிந்தித்துப் பாடுபட்டிருந்தால் படம் முழுமை பெற்று இருந்திருக்கும்.
நம்பிக்கை தரும் நடிப்பு கலைஞர்கள், பக்கபலமாகத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தும் இயக்குநர் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளதால் படம் பலவீனமாக மாறிவிட்டது.