சென்னை மக்களின் இசையான கானா பாடல்களுடன் ராக் மற்றும் ராப் இசையை கலந்து “ப்யூஷன்”(Fusion) வடிவத்தில் உருவாக்கப்பட்ட 20 பாடல்கள் முதல் முறையாக மேடையில் இசைக்கப்பட்டது. சென்னை கானா பாடகர்களுடன் மும்பையில் தாராவி பகுதியில் இருந்து வந்திருந்த ராப் இசைக்கலைஞர்கள் இணைந்து பாடிய பாடல்களை ரசிகர்கள் கைத்தட்டி ஆடிப்பாடி கொண்டாடினர்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸூம் இணைந்து “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” என்கிற பெயரில் இதை நடத்தினர்.
வழக்கமான இசைக்கச்சேரிகள் போல பொழுதுபோக்கு இசைக்கச்சேரியாக இல்லாமல் ஆப்பிரிக்க கறுப்பினக்கலைஞர்களின் பாடல் போல சமூக நீதியையும் சமத்துவத்திற்கான தேடலையும் தட்டி எழுப்பும் உணர்வுப்பாடல்களாக “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” பாடல்கள் உருவாக்கப்பட்டிருந்தன.மீனவர் பாடல், விவசாயிகள் பாடல், இட ஒதுக்கீடு பாடல், பிளாட் ஃபார்ம் பாடல், காதல் பாடல், ஆணவக்கொலை பாடல், கறிப்பாடல், ராப் இசையில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றுப் பாடல், வட சென்னைப்பாடல்… என வெரைட்டியாக இருந்த பாடல்களால் ரசிகர்களால் உற்சாகம் அடைந்தனர். அனைத்து பாடல்களுக்கும் ஒன்ஸ்மோர் கேட்கப்பட சில பாடல்கள் நிகழ்ச்சி முடிவில் மீண்டும் பாடப்பட்டன.
மேடையில் இந்த நிகழ்ச்சியை நிகழ்த்திய அத்தனை கலைஞர்களும் சினிமா வெளிச்சமோ வேறு புகழோ இல்லாத கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலாளர்கள், சினிமா பிரபலங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இசை நிகழ்ச்சியின் முடிவில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது,
“ரொம்ப மகிழ்ச்சி. ரொம்ப உணர்வுப்பூர்வமான தருணம் இது. கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. இவ்ளோ பிரமாண்டமான பெரிய வெற்றியாக இது அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னபேசுவதென்று தெரியவில்லை. எனக்கு வார்த்தை கிடைக்கவில்லை. கலைகளை அரசியல்படுத்த வேண்டும். கலைகளில் அரசியல் பேசவேண்டும் என்பதைத்தாண்டி நீங்கள் அரசியல்பட வேண்டும். அரசியல்பட்டால் மட்டுமே உன் நிலை மாறும்.
இந்த இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பெரிய உதவியாக இருந்த நீலம் பண்பாட்டு மையக் குழுவினர், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ், மும்பை தாராவி “டொபா டெலிக்ஸ்’ குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி.”, என்றார்.
3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த நிகழ்ச்சி பொங்கல் திருநாளில் நியூஸ் செவன் தொலைக்காட்சியில் வெளியாகிறது. நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்கள் இரண்டு பாகங்களாக ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் விரைவில் வெளியிடப்படும். மேடையில் பாடிய வீடியோ அல்லாமல் தனி வீடியோ ஆல்பமாக இந்த இசை நிகழ்ச்சி வெளியாகும்.
சென்னையைத் தொடர்ந்து “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சி மும்பை தாராவியில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் நடைபெற உள்ளது.