‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்பட விமர்சனம்

புதியவன் இராசையா,நவயுகா ,அஜாதிகா புதியவன் ,பெருமாள் காசி, நூர்ஜகன் ,மாணிக்கம் ஜெகன் நடித்துள்ளனர்.புதியவன் ராசையா இயக்கியுள்ளார்.எஸ்.தணிகைவேல் தயாரித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் – CJ ராஜ்குமார் (இந்தியா) மஹிந்தே அபிசின்டே(இலங்கை),இசை – அஷ்வமித்ரா,படதொகுப்பு – சுரேஷ் அர்ஸ்.

ஈழத்தைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளை கதாநாயக பிம்பத்துடன் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்.அதேவேளை அவர்களது போக்கை விமர்சனம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.இதுவரை விடுதலைப் புலிகளைத் தியாகிகள் என்றும் போராளிகள் என்றும் பேசப்படுகிற நிலையில் அவர்கள் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் வகையில் வந்திருக்கும் படம் தான் ஒற்றைப்பனை மரம்.

ஈழத்தில் நடந்த இறுதிப் போருக்குப் பின்னால் நிகழும் கதையாக இந்தப் படம் உருவாகி உள்ளது.இறுதிப் போர் சமயம் எஞ்சிய போராளிகள் சயனைடு உட்கொண்டு தற்கொலைக்கு முயல்கிறார்கள்.
அதில் ஒருவரான நாயகி நவயுகாவின் உயிரைக் காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறார் நாயகன் புதியவன் இராசையா . போர் நடந்து பாதிக்கப்பட்ட பகுதியில் அனாதையாக இருந்த சிறுமியையும் எடுத்து மகளாக வளர்க்கிறார். இந்த மூவரும் போருக்குப் பின்னான எதிர்காலத்தை நோக்கிப் பயணம் செய்கிறார்கள்.

போரின் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பூமியில் ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதைக் கண்டு மனம் புழுங்கிய புதியவன் இராசையா அவர்களுக்காக ஒரு சங்கம் தொடங்குகிறார்.அதன் மூலம் பெண்களை ஒருங்கிணைத்து,பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முடிவு கட்ட முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை ஈழப் போராளிகளை விமர்சிக்கும் வகையில் உருவாகி இருக்கும் படம் தான் ’ஒற்றைப் பனை மரம்’.

இயக்குநர் புதியவன் இராசையா நாயகனான சுந்தரமாகவும் நவயுகா கஸ்தூரியாகவும் அஜாதிகா புதியவன் அஜாவாகவும் பெருமாள் காசி பெருமாள் ஆகவும் நூர்ஜகன் மலர்விழியாகவும் மாணிக்கம் ஜெகன் சம்மந்தனாகவும் நடித்துள்ளனர்.

ஈழத்தில் நடந்த இறுதிப் யுத்தத்திற்குப் பிறகு புலிகள் அமைப்பில் இருந்த வீரர்களின் நிலை மோசமாக மாறிவிட்டது, என்பதைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார். குறிப்பாக, போரில் பலியான வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பல நாட்கள் பட்டினியால் வாடி வதங்குவதைக் காட்டுகிறார்கள். சில பெண்கள் தங்களது பசிக் கொடுமைகளில் இருந்து மீள்வதற்காக விலைமாதுவாக மாறுகிறார்கள்.தமிழர்களே அவர்களைத் தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், என்று இயக்குநர் புதியவன் இராசையா சொல்லியிருப்பது, அதிர்ச்சியூட்டும் காட்சிகள்.

புலிகள் அமைப்பின் பொறுப்பில் இருந்த நவயுகா, புதியவனால் காப்பாற்றப்பட்டு அவருடன் பயணம் செய்தாலும் அவருடைய வசனங்கள் புலிகளின் போக்கை விமர்சனம் செய்கிறது.

ஈழத் தமிழர்களை மையம் கொண்டு எடுக்கப்படும் படங்கள் அவர்களுக்கு எதிரான கொடுமைகளை வெளிப்படுத்தும் படி இருக்கும்.இதில் நேர் மாறாக உள்ளது.சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகள் சரியாக சொல்லப்படாமல் கடந்து செல்லப்படுகின்றது.தமிழர்களுக்குத் தமிழர்களே எதிரிகள் என்று விரலைத் திருப்பி நீட்டுகிறது படம்.

ஒளிப்பதிவாளர் மஹிந்தே அபிசிண்டே இலங்கை சார்ந்த காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்திய பகுதிகளை சி.ஜெ.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இருவரும் எடுத்துள்ள காட்சிகளில் கதைக்களத்தையும் கதை மாந்தர்களையும் இயல்பாகக் காட்டியுள்ளார்கள்.அஷ்வமித்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம்.

இறுதி யுத்தத்திற்குப் பிறகு ஈழத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அப்படியே பதிவு செய்ய முயன்று சுதந்திரம் உள்ள படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் புதியவன் இராசையா .வன்முறை இரு பக்கம் கூரான ஆயுதம் என்பதை உலகம் மறந்து விடாது.

‘ஒற்றைப் பனை மரம்’சொல்லி இருக்கும் கதை ஒற்றைப்படைத் தன்மையிலா னது என்று கூறக்கூடும். அது அவரது படைப்பு சுதந்திரம் என்று கூற இயக்குநரும் கூறக்கூடும்.