‘கப்புள் ஃப்ரண்ட்லி’ (Couple Friendly) திரைப்பட விமர்சனம்

சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு ,லிவிங்ஸ்டன்,சுனில் ரெட்டி நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் சந்திரசேகர் .ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன், இசை :ஆதித்யா ரவீந்திரன், படத்தொகுப்பு: கணேஷ் சிவா, கலை இயக்கம் : மைக்கேல்.
யு வி கிரியேஷன்ஸ் சார்பில் அஜய்குமார் ராஜூ தயாரித்துள்ளார்.

எதற்கும் லாயக்கில்லை என்று உதாசீனப்படுத்தப்படும் விரக்தியிலும் வெறுப்பிலும் சந்தோஷபவன் வீட்டை விட்டுவிட்டு ஒரு நாள்வெளியேறி விடுகிறார். சென்னை வந்த அவருக்கு இன்டீரியர் டெக்கரேஷனில் ஆர்வம். அதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனாலும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இருக்கிறார்.வேறு வழி இல்லாமல் ராபிடோ பைக் ஓட்டுகிறார். ஒரு பயணியாக அவரிடம் சவாரி வருகிற  மானசா ஐடியில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற கனவில் இருக்கிறார்.இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். இருவரும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள். மானசா,சந்தோஷின் கனவுகளைப் புரிந்து கொள்கிறார்.அவருக்குப் பல படிகள் அமைத்துக் கொடுத்து உதவுகிறார் .இருவரும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள்.இணைந்து பயணம் செய்கிறார்கள். ஒத்திசைந்து போனால் வெற்றி கிடைப்பதனை உணர்ந்து கொள்கிறார்கள்.இப்படி இருவரது கனவுகளும் நிறைவேறுகிற போது,இரு மனங்களும் இணைகின்றன. அப்புறம் என்ன ஜாலி சந்தோசம் திருமணம் என்று நினைத்தால் அதற்கு பிறகு எதிர்பாராத ஒரு பிரச்சினை வருகிறது.அது என்ன?அது பெரிய சிக்கலாக மாறுகிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் ‘கப்புள் ஃப்ரண்ட்லி’   படத்தின் மீதிக்கதை. படம் தொடங்கியதில் இருந்து எதார்த்த பாணியில் காட்சிகள் நகர்கின்றன.போகப்போக அவர்களின் உலகத்தில் நாம் நுழைந்து விடுகிறோம்.

இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன், புதுமுகம் போல் தெரியாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அவரது பாத்திர குணச்சித்திரத்திலிருந்து தடுமாறாமல் பயணம் செய்துள்ளார்.நாயகியாக நடித்திருக்கும் மானசா வாரணாசி, ஈரக்கும் அழகோடு தன் இயல்பான நடிப்பின் மூலம் வியக்க வைக்கிறார்.வசீகரமான தோற்றத்தில் முதல் பாதியில் கவர்ந்தாலும் இரண்டாவது பாதியில் கலங்க வைக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும்,சற்றே சிரிக்க வைக்கிறார்.அவர் தோன்றும் காட்சிகளில்தான் இது திரைப்படம் என்கிற உணர்வு வருகிறது.லிவிங்ஸ்டன்,சுனில் ரெட்டி உள்ளிட்ட பிற துணை நடிகர்கள் உரிய முறையில் பங்களிப்பு செய்து படத்திற்குத் துணை நின்று உள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன் செயற்கைத் தனம் தெரியாமல் இயல்பான காட்சிகளின் மூலம் கவனம் ஈர்க்கிறார். சிருங்கார காட்சிகளை ரசமுடன் படமாக்கி உள்ளார்.

இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளன. பின்னணி இசையும் சிறப்பு.கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு படத்திற்கு பெரும் பலம். கலை இயக்குநர் மைக்கேலின் கைவண்ணமும் கச்சிதம்.

எழுதி இயக்கியிருக்கும் அஸ்வின் சந்திரசேகர், காதல் உணர்வுகளை நம்பகத்தன்மையோடு பார்ப்பவர் மனதில் அருகில் சென்று பதிய வைத்துள்ளார்.

ஒருவரை ஒருவர் தோற்றத்தில் கவர்ந்து அழகில் மயங்கி காதலிப்பது மட்டுமா காதல்? சுக, துக்கத்திலும் பரஸ்பரம் ஆறுதலாக இருந்து உயர்த்தி விடுவதும் தான் காதல் என்று கூறியுள்ளார்.

உண்மையான காதலுக்கு அழிவில்லை என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் விதத்தில் படத்தின் முடிவை வைத்திருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர்.மனம் கனக்க வைக்கும் முடிவைக் கொடுத்து அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டு படத்தைக் கொண்டாட வைத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘கப்புள் ஃப்ரண்ட்லி’  (Couple Friendly) மனதில் நிற்கும் காதல் படம்.