‘கடைசி உலகப் போர்’ திரைப்பட விமர்சனம்

ஹிப் ஹாப் ஆதி , நாசர், நட்டி, அனேகா, அழகம்பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர் ,இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், வினோத் ஜிடி , குகன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் நடித்துள்ளனர்.

எழுதி இசை அமைத்து இயக்கி உள்ளார் ஹிப்ஹாப் ஆதி. ஒளிப்பதிவு அர்ஜுன் ராஜா, படத்தொகுப்பு பிரதீப் ஈ . ராகவ் ,சண்டை இயக்குநர் மகேஷ் மேத்யூ, கலை இயக்கம் ஆர்கே நாகு ,இப்படத்தை ஹிப் ஹாப் தமிழா என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.

எப்போதும் சின்ன சின்ன நகைச்சுவை, இளைஞர்களிடம் அன்றாடம் புழங்கும் அம்சங்களை வைத்துத் திரைப்படம் உருவாகும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்போது தனது பார்வையை விசாலமாக்கி உலக அரசியல் நோக்கி மாற்றி உள்ளார்.அவரது டெம்ப்ளேட்டில் இருந்து விலகி வேறு பாதையில் சிந்தித்துள்ளார் அந்தப் படம்தான் ‘கடைசி உலகப் போர்’.

எதிர்காலத்தில் நடப்பதாக கற்பனை செய்து இந்தக் கதையை ஆதி உருவாக்கி உள்ளார்.அதன்படி 2028-ம் ஆண்டு ஐ.நா சபையிலிருந்து சீனா விலகுகிறது. அதன் தலைமையில் சில நாடுகள் அணி சேர்ந்து ரீபப்ளிக் என்று ஒரு கூட்டமைப்பை உருவாக்குகின்றன. மூன்றாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் அப்போது இந்தியா எந்த அணியிலும் சேராமல் நடுநிலையோடு உள்ளது.

உலக அரசியல் பரபரத்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் உள்ளூர் அரசியலில் முதலமைச்சரின் மைத்துனர் நட்ராஜ் தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு கேம்விளையாடுகிறார், அதுவும் முறை தவறி .ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் தமிழரசன்  அடுத்து கல்வி அமைச்சராகப் போகிற முதல்வரின் மகள் கீர்த்தனாவை  வனவிலங்கு தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறார் . பின்னே? இருவருக்கும் காதல் மலர்கிறது. கீர்த்தனா கல்வி அமைச்சராகிறார். எளியவர்கள் சார்ந்து நல்ல கல்வித் திட்டங்களை உருவாக்குகிறார்.அதனை நடராஜ் எதிர்க்கிறார். கமிஷனுக்காக துறைமுகத்தில் முடங்கியிருக்கும் சர்வதேச பதுக்கல் பொருளை வெளியில் எடுப்பதற்குத் தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார். அதில் ஹிப்ஹாப் ஆதி தீவிரவாதி எனக் கைது செய்யப்படுகிறார்.

நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது.அந்தச் சூழலில் ரிபப்ளிக் நாடுகள், இந்தியாவை மோசமாகத் தாக்குகின்றன. இந்த மூன்றாம் உலகப் போரை உலகின் ‘கடைசி உலகப் போராக’ தமிழரசன் எப்படி மாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.

தன் பாதையில் இருந்து மாறி அதிரடியான அறிமுகம் சண்டைக்காட்சிகள் என்று ஹிப்ஹாப் ஆதி பளிச் பிரவேசம் கொடுக்கிறார்.
அந்த தமிழரசனாக நன்றாகவே நடித்துள்ளார்.அவரை விட கிங் மேக்கர் நட்டி கதாபாத்திரத்திற்குக் கூடுதல் வாய்ப்புகள் கொடுத்திருப்பது ஆரோக்கியமான ஒன்று .நட்டியும் அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி கவர்கிறார்.அவரது பார்வையில் தான் கதை நகர்கிறது.

விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கும்  கதையில் வலிய உருவாக்கப்பட்ட நாயகி கதாபாத்திரத்தில் அனகா.ஹரீஷ் உத்தமன், கல்யாண் மாஸ்டர், முனிஷ்காந்த் ஆகியோரை வேறு விதத்தில் காட்டியுள்ளார். ரைசிங் ஸ்டார் ரிஷிகாந்தாக , ஷாரா சில இடங்களில் சிரிப்பு மூட்டுகிறார். தவிர நாசர், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் ஆகியோரும் வருகிறார்கள். இந்தக் கூட்டத்தில் சிரிப்பு மூட்டும் புலிப்பாண்டியாக அழகம்பெருமாள்.

உலகப்போரின் தீவிரம், வெடித்துச் சிதறும் குண்டுகள், இடியும் கட்டடங்கள், அதற்குள் கதை மாந்தர்களின் சண்டை ஆகியவற்றை பொருத்தமான தொழில்நுட்பம் கொண்டு உயிர்ப்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா.அதற்கான கலை இயக்கத்தில் ஆர்.கே.நாகா நன்றாகவே உழைத்துள்ளார்.படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் அழகாகக் காட்சிகளை கோர்த்துள்ளார்.. மகேஷ் மேத்யூவின் சண்டைக் காட்சிகள் அதிர வைக்கின்றன.உணர்ச்சி பூர்வமான காட்சிகளைச் சரியாகக் கூறியிருந்தால் இந்தப் படத்தின் தரம் கூடி இருக்கும்.அதற்கு வாய்ப்புள்ள காட்சிகள் சாதாரணமாகக் கடந்து போகின்றன.

வேறுபாடுகளை மறந்து மனிதம் தான் முக்கியம் என்று படம் பேசி உள்ளது.சித்தாந்தவாதிகளை நையாண்டியும் செய்து சிரிக்க வைத்துள்ளார் ஆதி. ஒரு பட்ஜெட் படத்தில் இவ்வளவு பெரிய உலகப்போர் அளவிற்கு காட்சிகளை விரித்தது வியப்பூட்டும் ஒன்றுதான்.அதற்காகவே படக் குழுவினரைப் பாராட்டலாம்.

இந்தப் படம் நிச்சயம் ஒரு புதிய தொடக்கம் தான்.சொல்லவந்த அரசியலில் தெளிவு , புதுமை முயற்சி என்ற வகையில் சுவாரஸ்யம் சேர்க்கிறது இந்தக் `கடைசி உலகப் போர்’, ஆதி எடுத்துக்கொண்ட முயற்சிக்காகப் பாராட்டப்பட வேண்டியது மட்டுமல்ல பார்த்து ரசிக்கப்பட வேண்டியதும் கூட .